8 நாட்களில் 7 பெண்கள் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒக்டோபர் 3ம் திகதி Nicole Cartwright என்ற 32 வயதுப் பெண் கொலைசெய்யப்பட்ட நிலையில் இவரது உடல் சிட்னி பூங்கா ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.
அதேபோன்று அன்றைய தினம் விக்டோரியாவில் 46 வயதான Gayle Potter என்ற 3 பிள்ளைகளின் தாய் தனது முன்னாள் கணவனால் காரால் மோதி கொல்லப்பட்டதாக தெரியவந்தது.
அதேநேரம் Northern Territory இல் 29 வயதுப்பெண் ஒருவரும் குடும்ப வன்முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 4ம் திகதி விக்டோரியாவின் Ballarat பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான Dannyll Goodsell மிகமோசமாகத் தாக்கப்பட்டு பின் தீயில் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே ஒக்டோபர் 4 ஆம் திகதி நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் Bellambi என்ற இடத்தில் 5 மாத குழந்தையின் தாய் Kristie Powell கழுத்து அறுத்து கொல்லப்பட்டிருந்தார்.
ஒக்டோபர் 6ம் திகதி, பெர்த்தில் வாழ்ந்த 3 பிள்ளைகளின் தாயும் மனவளமேம்பாட்டு செயற்பாட்டாளருமான Jacqueline Francis கழுத்தில் குத்தப்பட்டதில் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்று அக்டோபர் 11ம் திகதி சிட்னி Glenfield-இல் Erana Nahu என்ற பெண்ணும் குடும்ப வன்முறையின் போது குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவுஸ்திரேலியாவில் கடந்த 8 நாட்களில் 7 பெண்களின் கொலை செய்யப்பட்டிருப்பமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்களின் பெரும்பாலானவர்கள் அவர்களது வாழ்க்கைத்துணை அல்லது அவர்களுக்குத் தெரிந்த ஆண்களினாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என விசாரணைகள் அம்பலப்படுத்துகின்றன.
இதேவேளை அவுஸ்திரேலியப் பெண்கள் 6 இல் 1 பெண் தன் முன்னாள் அல்லது இந்நாள் வாழ்க்கைத் துணையினால் உடல்ரீதியான அல்லது பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.