ஒரு நாள், ஒரு காடு, சில பறவைகள்! சுப்பிரமணியத்துடன் ஒரு பயணம்

D-750 நிக்கான் கேமரா, 500 ஜூம் லென்ஸ், கூடவே கேமரா ஸ்டேண்ட். தூக்க முடியாத பையை தூக்கிக் கொண்டு அதிகாலையிலேயே தன்னந்தனியாகவே கிளம்பி விடுகிறார்.

‘உடன் வருகிறேன்!’ என்றபோது அவ்வளவு சுலபமாய் அவர் சம்மதிக்கவில்லை. சில குறிப்பிட்ட நாட்களில் ‘கூப்பிடுகிறேன்!’ என சொல்லி போக்குக் காட்டிவிட்டு தொடர்ந்து கல்தா கொடுத்துக் கொண்டிருந்தவர், ஒரு முறை மிகவும் வற்புறுத்திய பிறகு, ‘இல்லண்ணா, நான் எங்கே போனாலும் தனியா போறதுதான் வழக்கம். பறவை மட்டுமில்லண்ணா, சிறுத்தை, புலி, மர அணில், செந்நாய்னு ஏகப்பட்டது சுத்தற இடம். நம்மால அவனுக டிஸ்டர்ப் ஆகக்கூடாது இல்லீங்களா? அதுக எந்த இடத்துல இருக்கு. எப்படி வாசம் வரும்னு எனக்குத் தெரியும். அதுக்கேத்தாப்ல நான் நடந்துக்குவேன். ஒரு பறவையை எடுக்கணும்னா மூணு மணிநேரம் நாலு மணிநேரம் எல்லாம் காத்திருக்கணும். போனவாரம் கூட சிறுவாணி அடிவாரத்துல ஒற்றையாளா போய் ஒற்றைக் கொம்பன் கிட்ட (யானை) மாட்டிக்கிட்டு மயிரிழையில் தப்பிச்சேன். அது ரொம்ப ரிஸ்க்குண்ணா!’ என்கிறார்.

‘அதெல்லாம் பார்த்துக்கலாம்!’ என சமாளித்து அவர் பைக்கின் பின்புறம் ஒரு நாள் ஒட்டிக்கொண்டேன். வாளையாறு தொடங்கி சிறுவாணி, மாங்கரை, ஆனைகட்டி, பாலமலை என கோவையில் சூரியன் மறையும் எல்லைக் கோடுகளாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள். ஆங்காங்கே வண்டியை நிறுத்திவிட்டு, நடை பயணம். மலையேற்றம். பள்ளத்தாக்குகள். நிழலால் இருள் சூழ வைக்கும் உயரமான மரங்கள். யானைகள் நுழையாமல் இருக்க போடப்பட்ட அகழிகள். இப்படி சகலத்தையும் கடக்கிறார்.

சுப்பிரமணியன்.

‘இதோ இந்த இடத்தில் இப்போதுதான் ஒண்டி யானை கடந்திருக்கிறது!’ என அதன் பாதச் சுவடுகளைக் காட்டுகிறார். பருந்துப் பார்வையுடன், பதுங்கும் பூனையின் லாவகத்துடன் சில இடங்களில் பம்முகிறார். காத்திருக்கிறார். அடர் வனத்தில் கீச்சிடுகிற நாலாவித பறவைகளின் ஓசையும், வண்டுகளின் ரீங்காரம் மட்டுமே கேட்கிறது. விதவிதமான பறவைகளை பல்வேறு கோணங்களில் ‘க்ளிக்’ செய்து தள்ளுகிறார்.

‘அதோ பாருண்ணா. தலை சிவப்புக்கலர்ல தெரியுதே. அவன்தான் ஃபிளம் ஹெட்டட் பேரகீட், இந்த சீசன்ல மட்டும்தான் இவனை இங்கே பார்க்க முடியும். அழகுக்கிளின்னா இவன்தான். சவுத் ஆப்பிரிக்கன் சைடுல எப்படி பஞ்சவர்ணக்கிளியோ, அதுபோல நம் தென்னிந்தியாவில் அபூர்வமான அழகுள்ளவன் இவன்!’ என்கிறார், க்ளிக் செய்து கொண்டே.

கரிய நிறத்தில் ஒரு குருவியை பார்த்து, ‘அது என்ன பறவை?’ எனக் கேட்க, அது நம்ம புல் புல் பறவை. அது இங்கே நிறைய இருக்குண்ணா. ரெட் விஸ்க்கர் புல் புல், ரெட் வெண்டட் புல் புல்னு ரெண்டு இருக்கு. அதேமாதிரி வாலாட்டுக் குருவிகளும் நிறைய இருக்கு. அதுல முக்கியமா கிரே வேக்டைல், ஒயிட் ப்ளூடு வேக்டைல்!’ என அதையும் காட்டி விளக்குகிறார். அதைத் தாண்டி சிறுவாணிக் காடுகளில் நிறைந்திருக்கும் தேக்கு மரங்களுக்கு நடுவே நீல நிற முதுகை காட்டிப் பறக்குது ஒரு பறவை. அதை குறிவைத்து நகர்கிறார். ஒரு மணி நேர பின்தொடர்வு. அரைமணிநேரத்திற்கும் மேல் காத்திருப்பு. அந்தப் பறவையை பல கோணங்களில் படம்பிடித்து வந்து காட்டுகிறார்.

‘இதுக்கு முதுகு நீல வண்ணம். மற்றபடி பறக்கும்போதுதான் கீழ்ப்புறமும் நீலமயமாய் மின்னும். இதுக்கு ஆசியன் ஃபேரி ப்ளூ பேர்டுன்னு பேரு. இதன் இறகுகள் நீலம். சிவப்புக் கண். அக்டோபர் தொடங்கி ஜனவரி மாசம் வரை மட்டும்தான் இங்கே ரொம்ப அபூர்வமாக காணப்படும். கேரளத்தில்தான் அதிகம் பார்க்கலாம்!’

இதுபோலவே குயில் போன்ற வால் இருக்கும் ஒயிட் பெல்லிடு ட்ரீ பீ, வெள்ளை வயிறுள்ள ட்ரீ பீ என்றெல்லாம் பறவைகள் படம் பிடித்து வந்து நம்மிடம் காட்டுகிறார்.

அதற்கெல்லாம் தாவரவியல் பெயர்களையும் சொல்கிறார். இந்த பறவைகளை படம் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்த ஒரு பாறையைக் காட்டி. ‘இந்த பாறையில்தான் ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு சிறுத்தையைப் படம் பிடிச்சேன். அவன் எப்படி பார்த்தான்னு நினைக்கிறீங்க. அதுக்குப்புறம் இங்கே வரும்போதெல்லாம் அவன் நினைப்புதான். கண்ணுக்கு அப்புறம் சிக்கவேயில்லை!’ என சொல்லும்போதே உச்சி மரத்தில் கரு, கருவென ஏதோ ஒன்று ஓடுகிறது. ‘அவன் மர அணில். இந்த குரங்குகளால அவனுக்கு தொல்லை. அதுதான் மரத்துக்கு மரம் ஓடறான்!’ என்கிறார்.

சுப்பிரமணியன். கோவை வடவள்ளிக்காரர். டென்னிஸ், கராத்தே, சிலம்பம் கோச்சர். இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் நூற்றுக்கணக்கில் தேசிய அளவில், ஆசிய அளவில் தேர்வு பெற்று பதக்கங்கள் வாங்கி வந்துள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இப்போதும் பயிற்சி கொடுத்து வருகிறார். 1985-ம் ஆண்டில் கராத்தே கற்றுக் கொள்வதற்கு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். இப்படிப்பட்டவருக்கு காடுகளுக்குள் அலைவதும், அங்குள்ள பறவைகளை, வண்ணத்துப்பூச்சிகளை, விலங்குகளைப் படம் பிடிப்பதில் அலாதி ஆர்வம்.

அதற்காக வனத்துறையினர் மற்றும் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தவர்களுடன் ஏற்பட்ட நெருக்கம். 10 ஆண்டுகளுக்கு மேலாகவே லட்சக்கணக்கான புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சி படங்கள், அபூர்வப் பறவைகள் படங்கள் எல்லாம் பிரேம் போட்டு கண்காட்சிகளில் வைத்துள்ளார். தன்னை நாடி வரும் சூழல் ஆர்வலர்களுக்கு இலவசமாகவே அந்தப் படங்களை கண்காட்சிக்காக கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்கிறார்.

சுப்பிரமணியன் வீட்டிற்குள் சென்றால் திரும்பின பக்கமெல்லாம் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், வனவிலங்குகள் படங்கள்தான் இறைந்து கிடக்கின்றன. ஷோகேஸில் பார்த்தால் விளையாட்டுப் போட்டிகளில் வாங்கிய கோப்பைகள் நூற்றுக்கணக்கில் குப்பை படிந்து காணப்படுகிறது. மனைவி புற்றுநோயால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரு மகன், மகள் அமெரிக்காவில். ஆங்காங்கே அடிபட்டுக் கிடக்கும் ஆந்தை, கழுகு உள்ளிட்ட பறவைகளை எடுத்து வந்து வீட்டிலேயே சிகிச்சை அளித்து திரும்ப காடுகளில் கொண்டு போய் விடும் பழக்கம் உள்ள சுப்பிரமணியம், அதற்கு சில எதிர்ப்புகள் வந்த நிலையில் பறவைகளை தேடி படம் பிடிக்க காடுகளுக்குள் பயணிக்கலானார். அதுதான் இப்போது இவரின் வீடு நிறைந்தும், இவர் உள்ளம் நிறைந்தும் காணப்படுகிறது.

‘என் வீடு மருதமலை பக்கத்தில்தான். இங்கே மட்டும் 56 வகையான பறவைகள் இருக்கு. அதேபோல் சிறுவாணி, கோவை குற்றாலம், நரசீபுரம், வைதேகி அருவி, வெள்ளியங்கிரி மலை, மதுக்கரை மலை, வாளையாறு பகுதிகளில் மட்டும் 500க்கும் அதிகமான வகைகளில் பறவைகள் இருக்கு. அதில் இதுவரை 200 வகை பறவைகளை நான் படம் பிடிச்சிருப்பேன். இதுக்காகவே ஊட்டி, மசினக்குடி, கூடலூர், கபினி, டாடோபா (கர்நாடகா) கூத்தன்குளம்னு நிறைய இடம் போறேன். அப்படி கபினியில் கறுஞ்சிறுத்தை, டாடோபாவில் புலி படங்கள் கிடைத்தன. நாகையில் கருப்பு மான் நிறைய எடுத்திருக்கேன். இதையெல்லாம் நம்ம வனத்துறைக்கும், பறவை ஆராய்ச்சியாளர்களுக்கும் கொடுத்திருக்கேன்!’என சொல்லும் சுப்பிரமணியன் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்த அடையாளங்களை, பறவைகள் ஓசையையும், இலை தழைகள் அசைவையும் வைத்தே கண்டுணர்ந்து கொள்கிறார். அதை வைத்து தனக்குத்தானே உஷார்படுத்தி நகர்கிறார். அதுவெல்லாம் பழங்குடி மக்களிடம் கற்றுக் கொண்ட பாடம் எனவும் சொல்கிறார்.