ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்ற எம்.ஐ.டி மாணவர்கள்!

அஜித் ஆலோசனையின் கீழ் எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றதற்காக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அஜித்துக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் ஆராய்ச்சி சார்ந்த போட்டிகளில் இக்குழு பங்குபெற்று வருகிறது. தக்‌ஷா குழு இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் SAE ISS ஏரோ டிசைன் சேலஞ்சில் அசாத்திய திறனை வெளிப்படுத்தியது. இதையடுத்து ஒவ்வொர் ஆண்டும் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்டில் நடக்கும் யூ.ஏ.வி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் 2018-ல் பங்கேற்க தங்களைத் தயார் செய்யத் தொடங்கினர்.

அஜித்
தக்‌ஷா குழுவின் ஆலோசகராகத் திரைப்பட நடிகர் அஜித்குமாரை பல்கலைக்கழகம் நியமித்தது. காரணம், நடிகர் அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி வாகனங்களை இயக்குதல் போன்றவற்றில் கைதேர்ந்தவர். அஜித் தனக்கு கொடுத்த பொறுப்பை கச்சிதமாக முடித்துக்கொடுத்தார். அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்‌ஷா அணி அந்த சர்வதேசப் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தக்‌ஷா அணி உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த 11 குழுக்கள் தேர்வாகின. அஜித் மேற்பார்வையில் தக்‌ஷா அணியினர் உருவாக்கிய ஆளில்லா விமானம் அதிக நேரம் வானில் பறந்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், எம்.ஐ.டி மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றதற்கு உதவியாக இருந்த அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.