நான் அன்றும் பேசினேன்; இன்றும் பேசுகிறேன்; என்றும் பேசுவேன்!-ஐஸ்வர்யா ராய்

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீ டூ பிரச்சாரத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.  பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MeTooIndia) இயக்கம் இந்தியாவில் வலுப்பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராய், "நான் கடந்த காலத்தில் இது குறித்து பேசியிருக்கிறேன். இப்போதும் பேசுகிறேன். இனியும் பேசுவேன்.

பாலியல் துன்புறுத்தாளர்களை அடையாளம் காட்ட இதுதான் சரியான நேரம் என்று குறிப்பிட்ட நேரம் எதுவுமில்லை. பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் குரலை ஒலிக்கச் செய்ய உதவ முற்பட்டால் முதலில் தைரியத்துடன் இருங்கள். பின்னர் நம்பிக்கையுடன் அவர்களது கதைகளைப் பகிருங்கள். அந்த அநீதி இப்போதுதான் நடந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்போதாவது இப்படி ஒரு பிரச்சாரம் வேகமெடுத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

சமூக வலைதளங்கள் இத்தகைய பிரச்சாரங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுக்க ஒரு தளமாக இருக்கிறது. உலகின் எந்த மூளையில் இருக்கும் பெண் வேண்டுமானாலும் தனக்கு நேர்ந்த அவலத்தைத் தெரிவிக்கக்கூடிய இடமாக விளங்குகிறது.

மீ டூ பிரச்சாரம் காலத்தின் அவசியம். இதை நாம் அனைவரும் நீர்த்துப்போகாமல் முன்னெடுத்துச் செல்வோம். அதேவேளையில் ஒரு பிரச்சினை நீதிமன்ற விசாரணை வளையத்துக்குள் வந்துவிட்டால் அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு நாம் கடந்து செல்வோம்" என்றார்.

ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சல்மான் கான் குறித்து பரபரப்பு புகார்களைக் கூறியவராவார்.