அவுஸ்திரேலியாவில் விசா நடைமுறையில் மாற்றம்: பாதிப்பை எதிர்கொள்வோர் யார்?

அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கான விசா நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிதாக அவுஸ்திரேலியாவில் குடியேறுவோரை regional நகரங்கள் அல்லாத பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் திட்டம் குறித்து பேசப்பட்டு வருவதாக கடந்த ஓகஸ்ட் மாதம் அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சனத்தொகை மற்றும் நகரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Alan Tudge இதுதொடர்பில் நேற்று (09) உரையாற்றியிருந்தார்.

கடந்த ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிவரவாளர்கள் 87 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகர் ஆகிய இடங்களையே அண்டியே வாழ்கின்றனர். இந்த விடயங்களை தரவுகள் உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களை சுற்றி புதிய குடிவரவாளர்கள் பெருமளவில் குடியேறுவதால் சனத்தொகை நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அத்தோடு சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிதாக விசா பெற்று அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் நகரங்கள் அல்லாத பகுதிகளுக்கு அனுப்பும் சட்டமூலத்தைக் கொண்டுவரி இருப்பதாக அமைச்சர் Alan Tudge தெரிவித்தார்.

இவ்வாறு குடியேறுபவர்கள் ‘சில’ வருடங்களுக்கு நகரங்கள் அல்லாத பகுதிகளிலோ அல்லது தெற்கு அவுஸ்திரேலியா போன்ற சிறிய மாநிலங்களிலோ குடியமரும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

எத்தனை ஆண்டுகளுக்கு இந்த நிபந்தனை விதிக்கப்படும் என்றோ அல்லது இந்நிபந்தனையை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்ற விபரங்களையோ அமைச்சர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.