சர்வதேச தலையீடு அவசியம் இல்லை!-ரணில்

சிறிலங்கா படையினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர் அவர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் 2015 இல் பதவியேற்ற பின்னர் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தியுள்ளது நீதித்துறை உட்பட பொது ஸ்தாபனங்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது நல்லிணக்கம் உட்பட யுத்தம் சம்பந்தமான விடயங்களிற்கு பெருமளவிற்கு தீர்வை கண்டுள்ளது எனவும் சிறிலங்கா ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

படையினரிடமிருந்த பொதுமக்களின் நிலங்களை பொதுமக்களிடம் மீள கையளித்துள்ளோம் அதேவேளை இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம் என சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உதவிகளை நாங்கள் வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க யுத்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை சிறிலங்காவின் நீதித்துறையே விசாரணை செய்வது சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவரும் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டு நடவடிக்கைகளை பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய மனித உரிமை பேரவையின் அமர்வுகளிற்கு அறிக்கைகளை சமர்பித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.