பார்வையற்றவன் பார்த்த கொலை!

ஒரு கொலை நிகழ்கிறது. அந்தக் கொலையைச் செய்தவர் யாரென்று அவனுக்குத் தெரியும். அந்தக் கொலையை எப்படி மூடி மறைக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால், அந்தக் கொலைக்கு அவன் சாட்சியாக முடியாது. காரணம், அவன் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. கொலைக்குச் சாட்சியாக மாறும் `பார்வையற்றவனின் மெல்லிசை’தான் இந்த `அந்தாதுன்’.

பார்வைற்ற மாற்றுத்திறனாளியான ஆகாஷ் (ஆயுஷ்மான் குரானா) பியானோ கலைஞன். லண்டன் சென்று மிகப்பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என்பது அவனின் கனவு. சாலை விபத்தொன்றில், சோபி (ராதிகா ஆப்தே) பழக்கமாகிறாள். சோபியின் ஹோட்டலில் பியானோ இசைக்கும் வேலைக் கிடைப்பதோடு, இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். சோபியின் கடையின் வாடிக்கையாளராக இருக்கிறார் பாலிவுட்டின் முன்னாள் காதல் மன்னன் பிரமோத் சின்ஹா (அனில் தவான்). ஆகாஷின் இசை மீது அதீத நாட்டம் கொண்ட அவர், அவனைத் தன் மனைவி சிமி (தபு) முன்பு பிரத்தியேகமாக இசைக்க அழைக்கிறார். பிரமோத் வீட்டுக்குச் செல்லும் ஆகாஷ் ஒரு கொலையின் சாட்சியாக மாற, பிறகு நடக்கும் யூகிக்கவே முடியாத களேபரங்கள்தாம் கதை.

படத்தில் ஒன்லைன் படித்தவுடன் ஏதோ சீரியஸான மர்டர் மிஸ்டர் வகையறாவோ என்று நினைக்க வேண்டும். இருக்கை நுனியில் நம்மை அமர வைத்து கிச்சுகிச்சும் மூட்டிவிடும் பிளாக் காமெடி படம்தான் இந்த அந்தாதுன். பாலிவுட்டில் ஏக் ஹசினா தி, ஜானி கட்டார், ஏஜென்ட் வினோத், பத்லாபூர் போன்ற கவனிக்கத்தக்க படங்களைக் கொடுத்த இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பார்வையற்ற பியானோ இசைக் கலைஞனாக ஆயுஷ்மான் குரானா. ஒட்டுமொத்த கதையும் இவரைச் சுற்றி நடக்க, அதைச் சரியாகத் தாங்கிப் பிடித்திருக்கிறார். தான் செய்யும் செயல்கள் அனைத்தும் நேர்மாறாக தன்னையே எக்கச்சக்கமாக வம்பில் மாட்டிவிட, அதைப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகும் பாத்திரம் மனிதர்க்கு. என்ன நடக்கிறது என்பது கூட புரியாமல், நின்று நிதானமாக யோசிக்கக் கூட நேரமில்லாதவராக. அட்டகாசமாக தேமேவென `விழித்துக்’ கொண்டிருப்பது அவருக்குச் சிறப்பாக செட்டாகிறது. அந்தக் குழப்ப உணர்வுகளை நமக்கும் மிகச் சரியாகக் கடத்தி நம்மையும் அவருக்காக வருத்தப்பட வைக்கிறார்.

அவருக்கு அடுத்து முக்கியக் கதாபாத்திரம் என்றால் அது `வாவ்’ தபு. வன்மத்தைத் தேக்கி வைத்த கண்களுடன் இறுதிவரை வந்து மிரட்டுகிறார். எதையும், யாரையும் மதிக்காமல் எல்லோரையும் லெஃப்டில் டீல் செய்கிறார். இறந்துபோன கணவன், பக்கத்து வீட்டுப் பாட்டி, `விசாரிக்க’ வரும் இன்ஸ்பெக்டர், உடல் உறுப்புகளைத் திருட ஆட்களைக் கடத்தும் கும்பல் என அனைவரிடமும் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், `அவர் ஒரு தவற்றை மறைக்க இத்தனை பேருக்குப் புதைகுழிகளை வெட்ட வேண்டுமா?’ என்ற கேள்வி எழாமல் இல்லை. அவ்வளவு பெரிய புத்திசாலியாகக் காட்டப்பட்டவர், சுலபமாகத் தீர்க்க வேண்டிய பிரச்னைக்கெல்லாம் கொடூர எல்லை வரை போவது ஏன் என்று புரியவில்லை. பார்வையற்றவனும் பார்த்துவிடத் துடிக்கும் கொள்ளை அழகு, ராதிகா ஆப்தே. ஸ்கோர் செய்யப் பெரிய காட்சிகள் கிடைக்கவில்லை என்றாலும், தபுவிடம் சிரித்துவிட்டு அடுத்த நொடியே சீறும் அந்தக் காட்சி ஒன்றுபோதும், அவரின் நடிப்புத் திறனைப் பறைசாற்ற!

எப்போதும் என்ன செய்தால் காசு கிடைக்கும் என்ற ஆங்கிளில் மட்டும் யோசித்து டிடெக்டிவ் வேலையைச் செய்யும் அந்தப் பக்கத்து வீட்டுச் சிறுவன், ராணி பூனை, எப்போதும் எதையாவது புலம்பிக்கொண்டே இருக்கும் இன்ஸ்பெக்டரின் மனைவி, சப் இன்ஸ்பெக்டரிடம் கொலையை `கேசுவலாக’ விசாரிக்கக் கூறும் அபார்ட்மென்ட் பாட்டி, லாட்டரிச் சீட்டு விற்கும் பெண்மணி, ஆட்டோ ஓட்டுநர் எனச் சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் ஈர்க்கின்றனர். அவர்கள் கதை ஓட்டத்துக்கும் பெரிதாக உதவியிருக்கின்றனர். அதனாலே என்னவோ படத்தில் ஒரு காட்சிகூட கதையின் வெளியே செல்லவே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் கவனித்தே ஆகவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர். அதுதான் இந்தத் திரைக்கதையின் மிகப்பெரிய பலம்.

படத்தின் இன்னொரு தூண், அமித் திரிவேதியின் இசை. பியானோ கலைஞன் கதாநாயகன் என்றானவுடன் இசையின் பங்கு அவசியமாயிற்றே. மனிதர் பியானோவில் புகுந்து விளையாடியிருக்கிறார். த்ரில்லிங், காமெடி, காதல் எனக் காட்சிகள் மாறும் போதெல்லாம் இசையும் அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன் நிறங்களை மாற்றிக்கொள்கிறது. நவீன பாலிவுட்டின் முடிசூடா மன்னன் என்பதைப் பாடல்கள் கொண்டு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியிருக்கிறார் அமித். ஆகாஷ் வீட்டின் குறுகலான இருட்டு அறைகள், தபுவின் ஒளிவீசும் அபார்ட்மென்ட், இரவு வீதிகள், பிற்பாதியின் பாதி கதை நடக்கும் ஊர்கோடியில் இருக்கும் அந்த ஆஸ்பத்திரி என அனைத்தையும் ராவாகத் திரையில் விரித்துப் பல்வேறு உணர்வுகளைக் கடத்துகிறது மோஹனனின் கேமரா.

அதே சமயம் நூல் பிடித்ததுபோல படத்தின் அத்தனை நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து நிகழ்கின்றன. அனைத்துமே முக்கியமான விஷயங்கள் எனும்போது ஒரு ஃபிரேமையும் விடாமல் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். மர்டர் மிஸ்டரியாக ஆரம்பித்து பின்னர் ஒரு கடத்தல் டிராமாவாகப் படம் முடிகிறது. இதனாலேயே படம் எங்கோ தொடங்கி, வேறு எங்கேயோ முடியும் ஃபீல் ஏற்படாமல் இல்லை. ஆனாலும் சீட்டில் உட்கார்ந்தவுடன், ரோலர்கோஸ்டரில் உட்கார்ந்ததாய் நம்மை எண்ண வைத்து கேப்பே விடாமல் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் நம்மைத் தெளியவைத்து தெளியவைத்து அடித்திருக்கிறது அந்தாதுன். நல்ல விஷயம் என்னவென்றால் அதை அனைவரும் ரசிக்கும்படி செய்திருக்கிறது. அந்த வகையில் அந்தாதுன் மெல்லிசை இல்லை… பரபர மாடர்ன் ராப் சாங்!