விஜயகலா மகேஸ்வரனுக்கு பிணை! வெளிநாடு செல்லத் தடை!

குற்றத் தடுப்புப் பிரிவுப் காவல் துறையால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் எனக் கருத்து வெளியிட்டிருந்த விஜயகலா மகேஸ்வரனை அது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக காவல் துறை திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அதன் பிரகாரம் தமது சட்டத்தரணிகளுடன் இன்று காலை விஜயகலா முன்னிலையானார்.

வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றத் தடுப்புப் பிரிவுப் காவல் துறையால்  கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவர் வெளிநாடு செல்வதற்குத் தடையையும் நீதிமன்றம் விதித்தது .

குறித்த வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.