கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் கடந்தவார இறுதியில் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த முகாமில் எஞ்சியிருந்த 35 பேரையும் அவுஸ்திரேலியாவிலுள்ள முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகுமூலம் வந்தவர்களை தடுத்து வைத்து பரீசிலிக்கவென கடந்த 2008ம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் நிர்மாணிக்கப்பட்டது.
சுமார் 10 ஆண்டுகள் கழித்து கடந்தவார இறுதியில் மூடப்பட்டதை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் David Coleman உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் கிறிஸ்மஸ் தீவில் எஞ்சியிருந்த 35 பேர் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் David Coleman தெரிவித்தார்.
இருப்பினும் குறித்த 35 பேரும் எங்கு அனுப்பப்பட்டார்கள் என்ற விபரத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னியிலுள்ள விலவூட் தடுப்பு முகாம், மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாம் மற்றும் பேர்த்திலுள்ள Yongah Hill தடுப்பு முகாம் ஆகியவற்றிற்கே செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 2013 முதல் தற்போதுவரை கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் உட்பட சில முகாம்களை மூடியதன் மூலம் சுமார் 500 மில்லியன் டொலர்களுக்கு மேல் அரசு சேமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal