சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ”ஆக்சன் ஏய்டு” என்ற தொண்டு நிறுவனம் பாகிஸ்தானில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் ஒன்றாகும், வறுமை ஒழிப்பு, கல்வி, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பணியை “ ஆக்சன்ஏய்டு” தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நிலையில், 60 நாட்களுக்குள் தங்கள் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் பாகிஸ்தான் அரசு தங்கள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் விடுத்துள்ளதாக ஆக்சன் ஏய்டு தெரிவித்துள்ளது. ஆனால், எதுவும் காரணம் தெரிவிக்கப்பட்டதா? என்பதை அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை. சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் இது என ஆக்சன் ஏய்டு நிறுவனம் பாகிஸ்தானின் புதிய உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ளது. ஆக்சன் ஏய்டு அமைப்பை போல, மேலும் 17 தொண்டு நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உள்துறை இத்தகைய அறிவித்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானின் தொண்டு நிறுவன வேலையை தொடர, பதிவு செய்வதற்காக ஆறு மாத காலத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஒசாமா பின்லேடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவின் சிஐஏ நிறுவனம் ஒரு போலியான தடுப்பூசி திட்டத்தின் பேரில் நாட்டுக்குள் நுழைந்து செயல்பட்டு வந்தது 2011-ல் கண்டறியப்பட்டபிறகு, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மீதான பாகிஸ்தான் உளவுத்துறையின் சந்தேகங்கள் அதிகரித்து வந்தது.
முன்னதாக ‘சேவ் தி சில்ரன்’ (Save The Children) நிறுவனம் உளவு வேலைகளில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். ஆக்சன் ஏய்டு மற்றும் சில சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறவேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மேற்கத்திய அரசுகளின் அழுத்தம் காரணமாக அந்நிறுவனங்கள் தொடர்ந்து பாகிஸ்தானின் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொண்டு நிறுவனங்கள் அரசின் முடிவு குறித்து மேல் முறையீடு செய்தன.
ஆக்சன் ஏய்டு மற்றும் பிளான் இன்டர்நெஷனல் ஆகிய தொண்டு நிறுவனங்கள் தற்போது அரசிடம் இருந்து கடிதம் கிடைத்துள்ளதாகவும் தங்களது மேல் முறையீடு தோல்வியடைந்துள்ளதாகவும் ஆனால் அதற்கான காரணங்களை அரசு விளக்கவில்லை என்றும் உறுதி செய்திருக்கின்றன.
Eelamurasu Australia Online News Portal