தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலைசெய்ய முயற்சித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் போராளிகளான 5 சந்தேகநபர்களுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் நேற்று(4) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஐவர் மீதும் தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு, இலக்கம் – 6 சிறப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்ப்பிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நிரபராதிகள் என மன்றுரைத்தனர்.
வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னெடுக்க சம்மதித்த சந்தேகநபர்கள், தங்களின் வழக்கை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது கோரிக்கையை நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன, தேவை ஏற்படும் பட்சத்தில் அரச செலவில் சட்டத்தரணிகளை ஒழுங்குப்படுத்தித் தருவதற்கு மன்று நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார்.
அத்துடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு நீதிமன்று ஒத்திவைத்தது.
Eelamurasu Australia Online News Portal