மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கீ யின் கௌரவ குடியுரிமையை கனடா நாடாளுமன்றம் நேற்று ரத்து செய்தது.
மியான்மர் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ராணுவத்தினர் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் சென்ற பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர்.
மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த 25-8-2017 அன்று ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான வேட்டை தீவிரமானது. இதைத்தொடர்ந்து, மியான்மரில் இருந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.
இது திட்டமிட்ட இனப்படுகொலை என ஐ.நா. சபை அறிவித்தது.
இந்நிலையில், ரோஹிங்கியா விவகாரத்தில் தலையிட தவறிய காரணத்துக்காக மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கீ யின் கவுரவ குடியுரிமையை கனடா நாடாளுமன்றம் நேற்று ரத்து செய்தது.
இதுதொடர்பாக, கடந்த 2007-ம் ஆண்டு கனடா அளித்த கௌரவ குடியுரிமையை பறிக்க வகைசெய்யும் தீர்மானம் கடந்த சில தினங்களுக்கு முன் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்தே ஆங் சான் சூ கீ யின் கவுரவ குடியுரிமையை கனடா நாடாளுமன்றம் ரத்து செய்துள்ளது.
ரோஹிங்கியா இன மக்களை திட்டமிட்டு மியான்மர் ராணுவம் கொன்று குவித்ததும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை தீவைத்து கொளுத்தியதும் இன அழிப்பு மற்றும் ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவம் குழு கூட்டுப் பலாத்காரம் செய்ததும், ஐ.நா. உண்மை அறியும் குழுவின் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபோன்று ஒரு கௌரவ குடியுரிமையை ரத்து செய்வது கனடா வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.