உலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோய் ஒழிப்பு!

ஆஸ்திரேலியாவில் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் கர்ப்பபை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்ப்பபை புற்றுநோய் பெண்களை பெருமளவில் பாதித்து உயிரை பறிக்கிறது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் இந்த நோய் பாதித்தவர்களில் 10 பெண்களில் 9 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த நோய் ‘எச்.பி.வி.’ (கியூமன்) என்ற வைரஸ்களால் ஏற்படுகிறது. இத்தகைய வைரஸ் 100 விதமாக உள்ளன. அந்த வைரஸ் தாக்கிய பெண்களுக்கு தொடக்கத்தில் நோயின் பாதிப்பு தெரியாது. அதற்கான அறிகுறிகள் தென் படாது. பின்னர் தான் தெரிய வந்து உயிரை பறிக்கும் நிலை ஏற்படும்.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 1 லட்சம் பெண்கள் கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இது சர்வதேச அளவில் பாதி ஆகும். எனவே இந்த நோயை ஒழிக்க அங்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதைதொடர்ந்து அங்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல் கர்ப்பபை புற்றுநோயை ஏற்படுத்தும் ‘எச்.பி.வி’ வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு ஊசி மருந்து பெண் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது. தற்போது அது சிறுவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த 1991-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டாலும் 2007-ம் ஆண்டு தான் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது.

‘எச்.பி.வி.’ வைரஸ் தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதால் ஆஸ்திரேலியாவில் தற்போது பெண்களுக்கு கர்ப்பபை புற்றுநோய் தாக்குதல் மிகவும் குறைந்துவிட்டது.

தற்போது 1 லட்சம் பெண்களில் 6 பேரை மட்டுமே கர்ப்பபை புற்றுநோய் தாக்குகிறது. எனவே வருகிற 2022-ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.