அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளனர்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 12 பேர் தம்மை விடுவிக்குமாறும், தம்மீதான வழக்குகளை துரிதப்படுத்துமாறும் கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் அருகாமையில் காலை 7 மணிமுதல் 5 மணிவரை சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் நிலையினை கருத்தில் கொண்டு இன, மத பேதமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, ம.தியாகராசா மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, சிறீ ரெலோ கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, புதிய ஜனநாயக மாக்சிசலேனினிச கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ரெலோ, புளொட், தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை.
இது தொடர்பில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைகலநாதன் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் தொலைபேசி அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதேவேளை, வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்வம் அடைக்கலநாதன், சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரும் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களாக ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.