மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2018

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல திலீபன் அவர்களின் 31 வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் சென்யூட்ஸ் மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

கடந்த 28 – 09 – 2018 வெள்ளிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிதா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய தேசியக்கொடியை மில்பார்க் தமிழ்ப்பள்ளி அதிபர் திரு சந்திரகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் கபிலன் அவர்கள் ஏற்றிவைத்தார். தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு திலகராஜா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

26 – 09 – 2001 அன்று சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, மாமனிதர் குணாளன் மாஸ்ரர் அவர்களின் மகன் திரு ஹரிதாஸ் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

25 – 08 – 2002 அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத்தளபதி கேணல் ராயூ அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. வசந்தன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.

அதனைத்தொடர்ந்து மலர்வணக்கமும் அகவணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து வணக்கநடனம் இடம்பெற்றது. வணக்கநடனத்தை நடனாலயா பள்ளி மாணவி செல்வி சரணா ஜெயரூபன் அவர்கள் நிகழ்த்தினார்.

அடுத்து தியாகதீபத்தின் நினைவுகளையும் சமகால அரசியல் நிலவரங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட குளுங்காணொளித்தொகுப்பு அகலத்திரையில் திரையிடப்பட்டது.

அடுத்து நினைவுரைகள் இடம்பெற்றது தமிழ்மொழியிலான நினைவுரையை தமிழக உறவான பிறின்ஸ் அவர்களும், ஆங்கிலமொழியிலான உரையை Sue Bolton – Victorian Socialists அவர்களும் நிகழ்த்தினார்.

அடுத்து இந்நினைவுநிகழ்வின் சிறப்புநிகழ்வான உள்ளூர்க்கலைஞர்களின் நெளியாள்கையில் தாயகப்பாடல்களை உள்ளடக்கியதான தியாகதீப கலைமாலை நிகழ்வு இடம்பெற்றது.

இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு இரவு 8.00 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.