ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பான பிரகடனம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது வருடப் பூர்த்தி நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. யுனெஸ்கோ நிறுவனத்தின் நிதி உதவியில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் பத்திரிகை ஆசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியன இணைந்து கொழும்பில் நடத்திய இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், அரச பிரதிநிதிகளும் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த இருபது வருட கால ஊடக நகர்வில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் மற்றும் ஏற்பட்ட சாதக பாதகங்கள் குறித்து கடந்த மூன்று நாட்களும் மாநாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள், ஆரோக்கியமாக ஊடகத் துறையைக் கையாளும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்து ஊடகங்களை எவ்வாறு பாதுகாத்தல் என்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்நிலையில் கொழும்புப் பிரகடன மாநாட்டின் இறுதி நாளான நேற்று காலை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பான பிரகடனம் கைச்சாத்திடப்பட்டது.
ஊடகத்துறையைப் பாதுகாக்கும் சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், பத்திரிகை ஆசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இணைந்து இந்தப் பிரகடனத்தில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன, பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மெனிக் டி சில்வா, சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் சி.தொடவத்த, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு பிரகடனத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்வில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொபி மெண்டல் ஆகியோரும் பங்கேற் றிருந்தனர்.