அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து பேசி காலத்தைக் கடத்துகின்றனரே தவிர அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுப்பது என்ற தெளிவு இந்த ஆட்சியாளர்களிடம் இல்லை. எம்மைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே நல்லட்சியாளர்களிடம் உள்ளது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். மீண்டும் எமது ஆட்சியில் ஜனநாயகத்தை மக்கள் உணருவார்கள். கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டு இழைக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எலிய அமைப்பின் மாநாடு நேற்று கடுவல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
யுத்தத்தின் பின்னர் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்ல அவசியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செய்ய வேண்டும். அதற்கான நேர்த்தியான அபிவிருத்தியில் விமான நிலையம், துறைமுகம் என்பன மிகவும் முக்கியமானவை. அதனால் தான் நாம் விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றை உருவாக்கினோம். எனினும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை நிறுத்தும் நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின்றது.
பிரதமர் இந்த அபிவிருத்திகளை தடுக்கின்றார். விமான நிலையம், துறைமுகம் அமைத்தது நாமாக இருந்தாலும் அவை அனைத்துமே இந்த நாட்டிற்கான வளங்களாகும். ஆனால் நாம் அவற்றைச் செய்த ஒரே காரணத்தினால் எம்மைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த அபிவிருத்திகளை பிரதமர் தடுத்து வருகின்றார். இதனால் தான் எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் உருவாகியுள்ளன. இந்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து பேசுகின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்தத் தெரியவில்லை. இன்று வரை பேசிக்கொண்டே உள்ளனர். ஆனால் நடைமுறைக்கு ஒன்றும் வரவில்லை.
எமது ஆட்சியில் சுயமாகவும், தைரியமாகவும் தீர்மானம் எடுக்கக்கூடிய தலைமைத்துவம் எமக்கு இருந்தது. யுத்தத்தை நாம் முன்னெடுத்த வேளையில் அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி தீர்மானம் எடுத்தார். பாதுகாப்பு படைகளுக்கான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்ட வேளையில் அதனைத் தீர்க்க சர்வதேச உதவிகளைப் பெற்று நடவடிக்கை எடுத்தார். நாட்டுக்காக சுயமாக, சுயாதீனமாக தீர்மானம் எடுக்க முடிந்தது. ஆனால் இந்த ஆட்சியில் அவ்வாறு ஒன்றும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் மூவர் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு பலவீனமான முறையில் எவ்வாறு ஆட்சியைக் கொண்டுசெல்ல முடியும் என்ற கேள்வி எழுகின்றது.
பாதுகாப்பு அமைச்சில் இருந்த முக்கியமான நபர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் ஏனைய அமைச்சு களிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் அரச அதிகாரிகளை விசாரணை என்ற பெயரில் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். விசேட நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால் மறுபுறம் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதனை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆட்சியில் வேலைத்திட்டம் என ஒன்றும் இல்லை. மாறாக அரசியல் பழிவாங்கல் மட்டுமே இவர்களிடம் உள்ளது. நான்கு ஆண்டுகளைக் கடக்கின்ற போதிலும் இவர்களின் வேலைத்திட்டம் நடைமுறைக்கு வராதுள்ளது.
எவ்வாறு இருப்பினும் அடுத்து நாம் உருவாக்கப்போகும் எமது ஆட்சியில் அனைத்து வேலைத்திட்டங்களையும் நேர்த்தியாக செய்யக்கூடிய வகையில் இப்போதே நாம் எம்மை தயார்படுத்தி வருகின்றோம். அரசாங்கத்தைக் கைப்பற்றிய பின்னர் அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திக்காது இப்போதே அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். சகல துறைசார் நிபுணர்களையும் சந்தித்து இவற்றை ஆராய்ந்து வருகின்றோம். கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை இனியொரு போதும் நாம் விடப் போவ தில்லை. மீண்டும் எமது ஆட்சி உருவாகும் போது மக்கள் ஜனநாயகத்தை உணரும் சூழலும் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.