ஜின்னா, எர்டோகன், இம்ரான் கான் மட்டுமே தலைவர்கள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை போன்ற எளிமையான நபரை தான் பார்த்தது இல்லை எனவும், அவரை போன்ற தலைவர் கிடைத்ததால் பாகிஸ்தானியர்கள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் அவரது மனைவி புஷ்ரா கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முதல் பெண்மணியான பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா கான் ஒரு சூபி மத குரு ஆவார். அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த அவர், பாகிஸ்தானின் விதியை மாற்ற நினைத்த கடவுள் அரசியல்வாதிக்கு பதிலாக உண்மையான தலைவர் ஒருவரை நாட்டுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மத குரு எனும் நிலையில் இருந்து நாட்டின் முதல் பெண்மணியாக மாறியது எப்படி எனும் கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னர் கடவுளின் தூதராக என்னை நினைத்த மக்கள் கடவுளிடம் நெருங்குவதற்காக என்னிடம் வந்தனர். ஆனால், இப்போது இம்ரான் கான் எனும் தலைவரை நெருங்குவதற்காக மக்கள் என்னிடம் வருகிறார்கள்.

பிராத்தனை செய்வதும், தொழுகை செய்வதும் மட்டுமே முக்கியம் என நினைத்திருந்த எனக்கு, மக்களுக்கு சேவை செய்வது தான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என இம்ரான் கான் உணர்த்தியதாக அவர் தெரிவித்தார்.

இம்ரான் கான் ஒரு எளிமையான மனிதரை இதுவரை பார்த்தது இல்லை, அவருக்கு தேவையானதையும், ஆசைப்படுவதையும் நிறைவேற்றிக்கொள்ளும் சுதந்திரத்துடன் அவர் உள்ளார்.

முன்னர் ஜின்னா ஒரு தலைவராக இருந்தார். இப்போது அதைப் போன்றே இம்ரான் கானும் ஒரு தலைவராக உள்ளார். துருக்கி அதிபர் எர்டோகனும் ஒரு தலைவர், இவர்களை தவிர உலகில் உள்ள அனைவரும் வெறும் அரசியல்வாதிகள் மட்டுமே என அவர் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏற்கெனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர், புஷ்ரா கான் அவரது மூன்றாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.