வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தயார் செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார்.
வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த அவர் நாடு திரும்புவதற்கு ஏற்கனவே நியமித்திருந்த தினத்திற்கு முன்னரே, நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகுந்த கரிசனை காட்டியுள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளுவதற்கான வேலைத்திட்டங்களிலும் இறங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
அதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் செயலணி ஒன்றை நியமித்துள்ளார். அத்துடன் அச்செயலணி ஒக்டோபர் மாதம் ஆரம்பப் பகுதியிலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு கட்சியின் தேசிய சம்மேளனத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயார்செய்து வருவதாகவும் தெரிய வருகிறது. இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள வாக்குகளை இலக்காகக்கொண்டும் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal