வடக்கில் செயற்படுகின்ற கும்பல்களை அடக்க முடியும்! – இராணுவத்தளபதி

குறிப்பிட்ட காலத்திற்கு எங்களிற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கினால் எங்களால் வடக்கில் செயற்படுகின்ற கும்பல்களை அடக்க முடியும் என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க கண்டியில் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்தால் இராணுவம் தனது கடமையை நிறைவேற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்பது அனைவரும் தொடர்புபட்ட விடயம் என தெரிவித்துள்ள இராணுவதளபதி இராணுவம் வலுவாக உள்ளது தேசிய பாதுகாப்பே அதன் முக்கிய நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு குறித்து எங்களிற்கு ஏனையவர்களை விட அதிகம் தெரியும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான வெற்றிக்கு பின்னர் எதுவும் மாற்றமடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ முகாம்களை கண்மூடித்தனமாக அகற்றவில்லை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே அது குறித்த முடிவை எடுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ள அவர் தேவைப்பட்டால் குறிப்பிட்ட முகாம்களை மீள ஏற்படுத்துவதற்கு இராணுவம் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.