பட்டுப்பாதை திட்டம் குறித்து ஆலோசிக்க சீனா செல்கிறார் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அரசு முறை பயணமாக அடுத்த மாதம் சீனா செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு அனைத்து தரப்பிலும் நட்பு நாடாக இருக்கும் சீனாவிற்கு இம்ரான் கான் அடுத்த மாதம் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா செல்லும்போது இம்ரான் கானுடன் உயர்மட்ட அதிகாரிகளும் செல்கிறார்கள் என பாகிஸ்தான் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதும் வாழ்த்து தெரிவித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், அவரை சீனாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்டு பயணம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான் கான் பயணம் செய்யும் நாட்கள் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது.

பாகிஸ்தான் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக மாறுகிறது என்று பார்க்கப்பட்ட நிலையில் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தார். சீனாவிற்கு எதிரான நிலைபாடுகளை அவர் எடுக்கமாட்டார் என்றாலும் சீனாவுடனான நெருக்கத்தை குறைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் அமர்ந்த பின்னர் அவருடைய நிலைபாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த பயணத்தின் போது சீனாவின் கனவு திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் செயல்படுத்தி முடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு நாட்டு தலைவர்களும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முன்வைக்கும் பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எப்போதும் ஆதரவு தெரிவித்து காப்பாற்றும் நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.