அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகளுக்கு பல மொழிகளில் எச்சரிக்கை!

சட்டவிரோதமாக படகுகள் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் வர முயற்சிக்கும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும் என அவுஸ்திரேலிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய எல்லைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை கமாண்டரும் விமானப்படைத் துணைத் தளபதியுமான Stephen Osborne எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது;

அவுஸ்திரேலியா தனது எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை, கடல்படை மற்றும் விமானப்படை ஆகியன அவுஸ்திரேலிய எல்லையை நோக்கிவரும் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்டுபிடித்து அவற்றை இடைமறிப்பதற்கான தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

ஆட்கடத்தல்காரர்களின் பொய்களை நம்ப வேண்டாம் என்றும், சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வர முயற்சி செய்யும் யாரும் ஒரு போதும் அவுஸ்திரேலியாவை தமது வாழ்விடமாக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

படகுகள் வழியாக வர முயற்சிக்கும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான எச்சரிக்கை தமிழ், இந்தி, பெங்காலி, பர்மீஷ், ரோஹிங்கியா, சிங்களம், அரபி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் விடுக்கப்பட்டுள்ளது.