அஹிம்ஷையை ஆயுதமாக்கி மரணித்த ‘தியாகி’ திலீபனின் 31ஆவது நினைவு தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகின்றது.
உயிரின் அடிப்படை இருத்தலே; பசியோடு சம்பந்தப்பட்டது. ‘பசி’ இல்லையென்றால் உயிர்கள் ஜனனிக்காது; வளராது; வாழாது. அப்படிப்பட்ட பசியையே, உரிமைகளுக்காக ஆயுதமாக்குவதும், அதன் வழியில் மரணிப்பதும் மிகப்பெரிய தியாகம்.
அதுவும், அஹிம்ஷையின் அடையாளமாக உலகம் கொண்டாடும் ‘காந்தி’ தேசத்திடமே, ஆயுதப் போராட்ட மரபுக்கு மாத்திரமல்ல, அஹிம்ஷைப் போராட்ட மரபுக்கும் ஈழத்தமிழ் மக்கள் சொந்தக்காரர்கள் என்று, உறுதி செய்து சென்றவன் தியாகி திலீபன்.
அப்படிப்பட்ட திலீபனின் நினைவு நாள்களில், தமிழ்த் தேசியச் சூழல் எவ்வாறான விடயங்களில் கவனம் கொண்டிருக்கின்றது என்று நோக்கினால், பாரிய ஏமாற்றமே மிஞ்சுகின்றது.
தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கிக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பவர்களில், அநேகருக்கு பொறுப்புணர்வுக்கும், பொறுக்கித்தனத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
எந்த இடத்தில் கட்சி – வாக்கு அரசியல் செய்ய வேண்டும் என்கிற அடிப்படையே தெரிவதில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களிலும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டங்களிலும், காணி விடுவிப்புப் போராட்டங்களிலும், ஏன் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் கூட, வாக்கு அரசியலைப் பிரதானப்படுத்தும் சிந்தனை என்பது, தமிழ்த் தேசிய அரசியலில் அதிகரித்துவிட்டது.
இது, மக்களுக்கும் போராட்டங்களுக்குமான இடைவெளியை பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. இன்றைக்கு அது, நினைவேந்தலுக்கும் மக்களுக்குமான இடைவெளியையும் கூட அதிகரித்துவிடுமோ என்கிற அச்சத்தை உருவாக்கிவிட்டது.
நினைவேந்தல் நிகழ்வுகள் என்பது, அடிப்படையில் அது மக்களுக்கானது. அங்கு அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ, அமைப்புகளோ மக்களுக்குப் பின்னரான நிலையையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், இன்றைக்கு ஏட்டிக்குப் போட்டியாக நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதன் மூலம், தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்கிற சிந்தனை மேலெழுந்திருக்கின்றது. அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் யாழ். பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்புகளும் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த இரண்டு வருடங்களாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளும், திலீபனின் நினைவு நிகழ்வுகளும் ஏதோவொரு வகையில் சர்ச்சைகளோடும், சில தரப்பினரின் அடாவடித்தனங்களோடுமே நடந்து முடிந்திருக்கின்றன.
மாவீரர் தினத்தின் போதும், அங்கொன்றும் இங்கொன்றுமாக அடிபிடிக் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. உண்மையிலேயே, இந்த அடாவடித்தனங்கள் அனைத்தும் கட்சிகளை, தனி நபர்களை, பல்கலைக்கழக சமூகத்தை அல்லது வேறொரு தரப்பை முன்னிறுத்துவதற்காகவே நிகழ்ந்தேறி இருக்கின்றன. மக்களை வழிநடத்த வந்திருப்பதாகத் தங்களைக் கூறிக்கொள்பவர்களாலேயே இவை நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
ஆனால், அது குறித்த குற்ற உணர்ச்சியோ, வெட்கமோ இன்றி, மீண்டும் மீண்டும் அதே தவறை இந்தத் தரப்புகள் செய்து கொண்டிருக்கின்றன என்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?
“நினைவேந்தல் நிகழ்வுகளை, மக்களை முன்னிறுத்தி ஒழுங்கமைக்க வேண்டும். அதற்குப் பொதுக்கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்” என்று ஒவ்வொரு நினைவேந்தல் காலத்திலும் பல பத்திகள் எழுதப்படும்; ஊடகங்களிலும் பேசப்படும். ஆனால், அவை குறித்து அடாவடித்தனத்தில் ஈடுபடும் எந்தத் தரப்பும் அக்கறை கொண்டதில்லை.
நினைவுகூருவதற்கான உரிமையையே மறுத்துரைத்த ராஜபக்ஷ ஆட்சி அகற்றப்பட்டு, கடந்த மூன்று வருடங்களாக, சிறிய இடைவெளியொன்று கிடைத்திருக்கின்றது. அந்த இடைவெளியைப் பயன்படுத்தி, மக்களைப் பொதுவான நினைவேந்தல்களில் ஒருங்கிணைக்க வேண்டிய கடப்பாடும், எதிர்கால சந்ததியினரிடம் கையளிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது. அதுதான், ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும், நினைவேந்தல் உரிமையைப் பேணுவதற்கு உதவும்.
ஆனால், இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது, மக்களைக் கட்சிகளாக, இயக்கங்களாக, அமைப்புகளாக எனச் சிறிய சிறிய குழுக்களாகப் பிரித்து, ஒருங்கிணைவின் பலம் என்கிற விடயத்தை இல்லாமல் செய்திருக்கின்றது.
பொது நினைவேந்தல்கள், போராட்டங்களில் மக்களின் ஒருங்கிணைவு இல்லாமல் செய்யப்பட்டு, குழு மனநிலை நிலைபெறுமாயின், தமிழ் மக்களின் எதிர்காலம் இன்னும் இன்னும் ஆபத்தான கட்டத்தை நோக்கியே செல்லும்.
பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான தமிழ்த் தேசிய அரசியலின் எழுச்சி என்பது, உரிமைகள், உணர்வுகள் சார்ந்ததுதான். ஆனால், தமிழ்த் தேசிய எழுச்சி என்பது, தனக்குள் இன்னொரு வகையில் பிற்போக்கான கட்டங்களையும் கூடவே கூட்டி வந்திருக்கின்றது.
அதுதான், அரசியல் நிலைப்பாடுகள், இயங்குநிலை, போக்கு குறித்த ஆரோக்கியமான விவாதங்கள், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு நின்று உரையாடும் மனநிலை.
அதுதான், எடுத்ததற்கெல்லாம் ‘துரோகி’ என்கிற அடையாளப்படுத்தல்களைச் செய்துகொண்டு, புறக்கணிக்கும் விடயத்தை தூக்கிச் சுமக்க வைத்தது. தமிழ்த் தேசிய அரசியலுக்கும், துரோகி அடையாள அரசியலுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது.
மாற்றுக் கருத்துகளை மதிக்காத, அதன்போக்கில் உரையாட அனுமதிக்காத அரசியலின் போக்கில், ‘துரோகி’ அடையாள அரசியல் நிலைபெற்றது. அது, அஹிம்ஷைப் போராட்ட காலத்திலிருந்து, ஆயுதப் போராட்ட காலம் வரையில் நின்று நீடித்து வளர்ந்து வந்திருக்கின்றது.
ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னராக கடந்த பத்து ஆண்டுகளிலும், கொள்கை, கோட்பாடு சார்ந்த அரசியலோ, சந்தர்ப்பங்களைக் கையாளும் புத்திசாலித்தனமான அரசியலோ பெரியளவில் மேலெழவில்லை.
மாறாக, துரோகி அடையாள அரசியலே மேலெழுந்தது; தக்க வைக்கப்பட்டது. அதற்கு நீண்ட அனுபவமுள்ள சம்பந்தனும் நடுவில் வந்த கஜேந்திரகுமாரும், அண்மையில் வந்த விக்னேஸ்வரனும் கூட, பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.
மாற்றுக் கருத்துகள், மாற்றுக் கட்சிகள் சார்ந்து, இவர்களின் வாயில் இருந்து முதலில் வருவது ‘துரோகி’ என்கிற அடையாளப்படுத்தல்தான். அப்படியான மனநிலையில் இயங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொண்டிருக்கின்ற அரசியலில், ஆக்கபூர்வமான சிந்தனைகளையோ, செயற்பாடுகளையோ எதிர்பார்ப்பது கல்லில் நார் உரிக்கும் வேலைதான்.
உண்மையிலேயே துரோகி அடையாள அரசியலையோ, நினைவேந்தல்களை உரிமைகோரி கட்சி அரசியல் வளர்க்கும் காட்சிகளையோ தமிழ் மக்கள் அறியாமல் இல்லை. அதுபோல, பொறுப்போடு இருக்க வேண்டியவர்களின் பொறுக்கித்தனங்களை உணராமலும் இல்லை.
ஆனாலும், என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில், போருக்குப் பின்னரான சமூகமொன்று எதிர்கொண்டிருக்கின்ற சமூக, பொருளாதார பிரச்சினைகளின் அழுத்தம், பெருவாரியாக இருக்கும் போது, அதை எதிர்கொள்ள வேண்டிய நாளாந்தக் கட்டம் மக்களுக்கு இருக்கின்றது.
அப்படிப்பட்ட நிலையில், பொறுப்புணர்வோடு நடக்க வேண்டியவர்கள் செய்யும் பொறுக்கித்தனங்களுக்கு, சாட்டை வீசுவதற்கான நேரம் இல்லை. அதனால், பொறுக்கித்தனங்களுக்கு அப்பால் நிற்பதையே மக்கள் விரும்புகிறார்கள். அது, உண்மையிலேயே மக்கள் ஒருங்கிணைய வேண்டிய நினைவேந்தல்கள், போராட்டங்களிலிருந்து அவர்களைத் தூரத்தில் வைக்கின்றது.
திலீபன் பசித்திருந்தமைக்கான காரணிகள், அவன் மரணித்து மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் அப்படியே இருக்கின்றன.
குறிப்பாக, 1. சிறைக் கூடங்களிலும், இராணுவ, பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
2. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
– என்கிற இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து, இன்னமும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் பசியோடு இருக்கிறார்கள்; அவ்வப்போது, திலீபனின் போராட்ட வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் தாக்கத்தின் வழி, சிறைச்சாலைகளிலேயே நோய்கண்டு மாண்டவர்கள் பலர்.
திலீபனின் நினைவு நாள்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த நாள்களிலும், அநுராதபுரம் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட கைதிகள் இருக்கிறார்கள்.
அவர்களின் நிலை தொடர்பில் ஊடகங்களில் பேசுகின்றோம். ஆனால், அவர்களுக்கான ஒருங்கிணைவு என்பதும், போராட்டம் என்பதும் மக்களிடம் இருந்து பெருமளவு தூரம் அகற்றம் செய்யப்பட்ட சூழலையும் எதிர்கொண்டு நிற்கிறோம்.
கட்சி, வாக்கு அரசியலுக்கும், மக்களின் மக்களுக்கான அரசியலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணராத சமூகத்தின் முன்னோக்கிய பயணத்தை, என்றைக்குமே எதிர்பார்க்க முடியாது.
இரண்டு அரசியல்களையும் செய்ய வேண்டிய இடங்களையும் தருணங்களையும் சரியாகப் பகுப்பாய்ந்து ஒழுகாதவிடத்து, நினைவேந்தல் நிகழ்வுகளில் சண்டையிடும், இழி சொற்களால் பேசிக்கொள்ளும் அரசியலே மேலேழும். அது, ரவுடிகளிலும் அயோக்கியத்தனங்களிலும் தங்கி நிற்கும் அரசியலை தமிழ் மக்களிடம் கொண்டு வரும்.
அது, உண்மையிலேயே, நினைவுகூர வேண்டியவர்களையும் மக்களிடமிருந்து அகற்றம் செய்து விடும். தியாகி திலீபனின் நினைவு நாளில் இருந்தாவது, அந்த நிலையை மாற்றிக் கொண்டு, முன்னோக்கிச் செல்வது குறித்து அனைவரும் மனதாரச் சத்தியம் செய்ய வேண்டும்.
அதுதான், எமக்காகப் பசித்திருந்தவனுக்கு நாம் செய்யும் மரியாதையும் அஞ்சலியும் ஆகும்.
புருஜோத்தமன் தங்கமயில்