மைத்திரி கொலைச் சதி! இந்தியர் நடவடிக்கை குறித்து சந்தேகம்!

சிறிலங்கா ஜனாதிபதியை கொலைச் சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜையின் நடவடிக்கைகள் குறி;த்து சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தவர்களையும் கொலை செய்வதற்கான சதி முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தோமஸ் என்ற இந்திய பிரஜை தொடர்பிலேயே அமைச்சர் திவயினவிற்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தோமஸ் என்ற இந்திய பிரஜையும் அவரது குடும்பத்தினரும் சிறிலங்காவில் எந்த வித வருமானமும் இன்றி ஒன்றரை வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை குறித்து சிஐடியினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் அவருடைய சகாக்கள் யார் என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் யாருடன் தொடர்பிலிருந்தார் என்பதை கண்டறிவதற்காக அவருடைய தொலைபேசி உரையாடல்கள் குறித்து ஆராயப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் சிஐடியினர் இந்திய காவல் துறையுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என சிஐடி வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

இதேவேளை மற்றுமோர் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் பொய்யான தகவல்களை பொதுமக்களிற்கு வழங்குகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

முக்கிய தலைவர்கள் கொலை முயற்சி தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத ஆதாரமற்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் இடம்பெறுவதன் காரணமாகவே அரசாங்கம் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்காமலிருந்தது எனினும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல ஊடக நிறுவனங்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்துகின்றன எனவும் சட்டமொழுங்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காவல் துறை திணைக்களத்திற்கு சொந்தமான சினைப்பர் காணாமல்போனமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன எனினும் காவல் துறை திணைக்களம் அவ்வாறான குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன் டீஐடியினருக்கு ஆயுதங்கள் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது எனவும் ரஞ்;சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.