எனக்கு ஒரு பென்சிலே போதும்!- எழுத்தாளன் மன்டோ

உலகின் மிகப்பெரிய மக்கள் புலம்பெயர்தலை இரத்தமும் சதையுமாக தன் படைப்புகளில் படைத்த எழுத்தாளன் மன்டோ.

ஓர் அரசியல்வாதியின் வாழ்க்கையை, விளையாட்டுவீரரின் வாழ்க்கையை, நடிகரின் வாழ்க்கையை `பயோபிக்’ திரைப்படமாக மாற்றுவதைவிட  எழுத்தாளனின் வாழ்க்கையை சினிமாவாக மாற்றுவது சவாலானது. சினிமாவுக்குப் பொருந்தும் மற்ற துறைகளின் சாதனையாளர்களின் வாழ்க்கை, எழுத்தாளனுக்குப் பொருந்தாது. எழுத்தாளனைப் பாதிக்கும் நிகழ்வுகளையும், அவை வார்த்தைகளாக உயிர் பெறும் நேரங்களையும் எந்த கேமராவாலும் பதிவுசெய்ய முடியாது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்து 70 ஆண்டுகளைக் கடந்தும், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை தேசப்பற்றின் அடையாளமாக அளவிடும் தேசத்தில், கதைக்குச் சம்பந்தமே இல்லாமல் பாகிஸ்தான் கொடி மீது கார் ஏற்றி கைதட்டல் பெற நினைக்கும் திரைப்படங்களின் மத்தியில், பிரிவினையின்போது பாகிஸ்தானைத் தேர்ந்தெடுத்த உருது எழுத்தாளன் மன்டோவின் வாழ்க்கையைப் படமாக்கி இருக்கிறார் நந்திதா தாஸ்.

மன்டோ

ஏறத்தாழ 10 ஆண்டுக்குப் பிறகு, இயக்குநராக நந்திதா தாஸின் இரண்டாவது திரைப்படம் `மன்டோ’ வெளியாகியுள்ளது. 2008-ம் ஆண்டு அவரின் முதல் திரைப்படமான `ஃபிராக்’ வெளியானபோது அன்றைய காலகட்டத்தில் அது பலரால் வியந்து பேசப்பட்டது. 2002-ம் ஆண்டின் குஜராத் படுகொலைகள், எளிய மக்களின் வாழ்வை மாற்றியமைத்ததைப் பற்றியது `ஃபிராக்’. யாரும் பேசாத பொருளைப் பேசத் துணிந்தது அந்தத் திரைப்படம். `மன்டோ’ தன் வாழ்நாள் முழுவதும் அதைத்தான் செய்தார்.

நந்திதா தாஸ் இயக்கிய `மன்டோ’ திரைப்படத்தின் டைட்டில் லோகோவே பிரிவினையைச் சித்திரிக்கிறது. `மன்டோ’ என்று எழுதப்பட்டு, இரு துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடக்கும் எழுத்துகள் `மன்டோ’வின் வாழ்க்கையைச் சொல்லாமல் சொல்கின்றன. முதல் காட்சியிலேயே, குழந்தைப் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வைப் பற்றி மன்டோ எழுதிய `பத்து ரூபாய்’ என்ற சிறுகதையோடு தொடங்குகிறது `மன்டோ’.

பம்பாய் நகரின் காபி ஷாப் ஒன்றில், தன் மனைவி சஃபியா, தன் தோழர்கள் இஸ்மத் சுக்தாய் முதலானவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் மன்டோ. பேச்சு, மன்டோவின் கதை மாந்தர்களை நோக்கிப் பயணப்படுகிறது. இந்தச் சமூக அடுக்கில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களான பாலியல் தொழிலாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சைக்காரர்கள் போன்றவர்கள்தாம் மன்டோவின் கதை மாந்தர்கள். `என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம்முடைய காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளின் தவறுகள் என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக அமைப்பைத்தான் குறிக்கின்றன’ என்பார் மன்டோ.

அவர் எழுதிய `நூறு விளக்குகளின் வெளிச்சம்’ என்ற கதை, மிகச்சில காட்சிகளை வைத்து, ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. பகல் முழுவதும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, சோர்ந்து உறங்குகிறாள் பாலியல் தொழிலாளி ஒருத்தி. அவளின் தரகர், அவளின் தூக்கத்தைக் கெடுத்து அவளை வற்புறுத்த, தரகரைக் கொன்றுவிட்டு அவன் பிணத்தின் அருகிலேயே தூக்கத்தைத் தொடர்வதாக அந்தக் கதையை எழுதியிருப்பார் மன்டோ.

நள்ளிரவில் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெறுகையில், தூக்கத்தில் இருக்கும் மனைவியையும் மகளையும் எழுப்பி, விடுதலைக் கொண்டாட்டத்தில் பங்கேற்கச் செய்த மன்டோ, தன் கையில் எப்போதும் இரண்டு தொப்பிகளை வைத்துக்கொண்டிருந்தார். ஒன்று இந்துத் தொப்பி; மற்றொன்று முஸ்லிம் தொப்பி. “மனதில் இருக்கவேண்டிய மதம் தலைக்கு ஏறிவிட்டால், இந்தத் தொப்பிகள்தான் என் உயிரைக் காப்பாற்றும்” என்பார். அப்படிப்பட்ட மன்டோவை, தன் நண்பன் “நீயும் முஸ்லிம்தான். நீ மட்டும் என் நண்பனாக இல்லாவிட்டால் உன்னையும் கொல்வேன்” என்று சொன்னது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.

தன் நண்பன் மன்டோவிடம் எவ்வளவு கெஞ்சியும், மன்டோ பாகிஸ்தான் செல்லும் முடிவைக் கைவிடவேயில்லை. “இதோ இங்கு இருக்கும் பான் கடையில் ஒரு ரூபாய் பாக்கி இருக்கிறது” என்று பம்பாய் நகரைவிட்டு வெளியேறும் தருணத்தில் மன்டோ கூற, அவர் நண்பர் தான் அந்தப் பாக்கியை அடைத்துவிடுவதாகக் கூறுகிறார். “வேண்டாம். நான் இந்த நகரத்துக்கு என்றென்றும் கடன்பட்டவனாக இருக்க விரும்புகிறேன்” என்றார் மன்டோ. உலகின் மிகப்பெரிய மக்கள் புலம்பெயர்தலை ரத்தமும் சதையுமாக தன் படைப்புகளில் படைத்த எழுத்தாளன் மன்டோ இந்தியாவில் இருந்த அந்தக் கடைசி நாளை இப்படியாகப் பதிவுசெய்யும் திரைப்படம், சுதந்திர பாகிஸ்தான்  நாட்டில் அவரின் எஞ்சிய துயரம்மிக்க வாழ்க்கையை நோக்கி நகர்கிறது.

Nawazuddin Nadita Manto

பத்திரிகைகளுக்கு எழுதுவதுபோக, பெரிய அளவில் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார் மன்டோ. பிரிவினைக்குப் பிறகு, லாகூர் நகரத்தில் அவர் பார்க்கும் புலம்பெயர்ந்தவர்களின் கதைகள் அவரை மிகவும் பாதிக்கின்றன. மதக்கலவரங்களில், ஆண்களால் வன்புணரப்படும் சிறுமிகளைப் பற்றிய இரண்டு கதைகள் திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. `திற’ என்ற கதை பிரிவினையால் மகளை இழந்த தந்தையைப் பற்றியது. மற்றொரு கதை `டண்டா கோஷ்’ (குளிர்ந்த மாமிசம்). இதில் `டண்டா கோஷ்’ என்ற சிறுகதைக்கான மன்டோ மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு பற்றிய விசாரணைகள் காட்சிகளாக்கப்பட்டிருக்கின்றன. தன் கதையை ஆபாசம் எனச் சொல்வதைவிட, தன் கதையைச் சிறந்த இலக்கியமாகக் கருத முடியாது எனக் கூறும் நண்பனின் கருத்தே மன்டோவை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

“நீங்கள் ஏன் டைப்ரைட்டர் பயன்படுத்துவதில்லை?” என்று கேட்கப்பட, “டைப்ரைட்டர்கள் எழுப்பும் ஒலி, என் சிந்தனைகளை பட்டாம்பூச்சிகளாகச் சிறகடிக்கச் செய்துவிடுகின்றன; எனக்கு ஒரு பென்சிலே போதும்” என்பதும், “தொழுகையோ, வேறு சடங்குகளையோ செய்யாதவன் நீ. இப்போது திடீரென உன்னை முஸ்லிம் என அழைத்துக்கொள்கிறாயே! எந்த அளவுக்கு முஸ்லிமாக இருக்கிறாய் நீ?” என்று கேட்கப்பட, “ஒருவனால் கொல்லப்படும் அளவுக்கு!” என்பதும் மன்டோவின் எண்ண ஓட்டங்களை மிக அழகாகப் பிரதிபலிக்கும் காட்சிகள்.

இறுதியாக மன்டோவின் `தோபா தேக் சிங்’ சிறுகதையின் கேரக்டரும் மன்டோவும் இணையும் புள்ளியில், மதங்கள் கடந்து, எல்லைகள் கடந்து, மானுடம் வெளிப்படுகிறது. மன்டோவின் இறப்பை அறிவித்து முடிவடைகிறது திரைப்படம். மன்டோ இறந்து 60 ஆண்டுகள் கடந்தும், மதக்கலவரங்கள் ஓயவில்லை; இந்தியா – பாகிஸ்தான் பிரச்னைகள் தீரவில்லை. படைப்பாளிகள் மீதான தாக்குதல்கள் இன்னும் அதிகரித்துள்ளன. மன்டோவின் எழுத்துகள், எழுதப்பட்ட காலத்தில் இருந்து, மாறாமல் அப்படியே இருக்கின்றன.