ஆஸ்திரேலிய விவசாயிகளைப் பாதித்த விபரீத விளையாட்டு!

ஆஸ்திரேலியாவின் உணவுத்துறை, வேளாண்மை போன்றவற்றில் சமீபகாலத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது இது

ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடும் அனைவரையும் அச்சுறுத்தியிருக்கிறது கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம் ஒன்று. ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுபவை. அப்படித்தான் நியூசிலாந்துக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து பல்வேறு சூப்பர் மார்க்கெட்களுக்கும் சென்றிருக்கின்றன.

வாடிக்கையாளர் ஒருவர் நியூசிலாந்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி பழம் வாங்கியிருக்கிறார். அதனை வீட்டுக்குச் சென்று சாப்பிடப் பார்த்தவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அந்தப் பழத்தைக் கடித்தபோது அதனுள்ளே ஊசி ஒன்று தென்பட்டிருக்கிறது. உடனே அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். இந்தப் பழத்தில் மட்டும் ஏதோ தவறு நடந்துவிட்டது என நினைத்து அவர்களும் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். அப்போதுதான் அவர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தச் சம்பவத்துக்கு ஒரு வாரம் முன்பிருந்தே இதுபோல ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசி இருந்திருப்பது அப்போதுதான் தெரியவந்தது.

விஷயம் பெரியது என்பதை உணர்ந்த அவர்கள் உடனே அரசு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அவர்களும் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். இறுதியில் ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் இப்படி நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்தச் செய்தி வெளியானதும் உடனே அனைத்து வாடிக்கையாளர்களும் தாங்கள் அதுவரை வாங்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்களை எல்லாம் சோதித்து அந்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றினர். ஊசி இருப்பது மாதிரியான போட்டோக்களும் வைரலாகின. இதைத்தொடர்ந்து, “ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிடுவதற்கு முன்பு, ஒருமுறை பரிசோதித்து பின்னர் உண்ணுங்கள் அல்லது அவற்றை வாங்குவதைத் தவிருங்கள்” என்றது நியூசிலாந்து அரசு. பெரும்பாலான கடைகளில் ஸ்ட்ராபெர்ரி கொள்முதல் செய்வதே நிறுத்தப்பட்டது; வாடிக்கையாளர்களும் அச்ச உணர்வின் காரணமாக இந்தப் பழங்களை வாங்குவதைத் தவிர்த்தனர். இவ்வளவு பெரிய சிக்கலுக்கு யார்தான் காரணம்?

இன்றுவரை, அந்நாட்டு அரசால் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை. இந்தச் செயலை செய்தோரை, “உணவு பயங்கரவாதிகள்” என அறிவித்துள்ளது அரசு. இப்படி ஸ்ட்ராபெர்ரியில் ஊசி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என முதலில் காவல்துறை எச்சரித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் உணவுத் துறை, வேளாண்மை போன்றவற்றில் சமீபகாலத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய பிரச்னையாக இது பார்க்கப்படுகிறது.

இதுவரைக்கும் மொத்தமாக 20-க்கும் மேற்பட்ட ஸ்ட்ராபெர்ரி பெட்டிகளில் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருகின்றன. அதேபோல் ஒரு வாழைப்பழத்திலும் ஓர் ஆப்பிள் பழத்திலும் ஊசிகள் பதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஊசி பதிக்கப்பட்ட பழத்தைக் கடித்ததால் வாயில் லேசான காயங்கள் ஏற்பட்டதாக ஒருவர் காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கிறார்.

தாங்கள் வாங்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருந்த புகைப்படங்களை முகநூலில் பகிர்ந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் மர்ம நபர்கள் மெல்லிய ஊசியைப் பதிக்கிறார்கள் என்று ஊடகங்களில் தகவல்கள் பரவின. சவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையான ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசி இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இப்படி ஊசிகள் வைக்கப்பட்டது ஒரு பிரச்னை என்றால், அதைவிடவும் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது போலியான போட்டோக்கள். எங்கோ ஓர் இடத்தில் கண்டறியப்பட்ட ஊசி, பழங்களின் போட்டோக்களையே மீண்டும் மீண்டும் பலரும் சமூக வலைதளங்களில் பதியவே, ஆஸ்திரேலிய கடைகளில் இருக்கும் எல்லாப் பழங்களிலும் இப்படி ஆகிவிட்டது மாதிரி ஒரு பிம்பம் உருவாகிவிட்டது.

இதுதான் அந்நாட்டு விவசாயிகள் மற்றும் பழ வியாபாரிகளுக்கு மிகப்பெரிய எதிரியாக மாறிவிட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் “ஆஸ்திரேலிய விவசாயிகளை முழுமையாக கைவிட்டு விடாதீர்கள்; இது அவர்களின் தவறு அல்ல” என அவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வருகின்றனர்.

இதுவரைக்கும் இந்தப் பிரச்னைக்கு யார் முழுக்காரணம் எனத் தெரியாவிட்டாலும், சில குற்றவியல் நிபுணர்கள் இதுவரை நடந்த சம்பவங்களை வைத்து சில யூகங்களை முன்வைக்கின்றனர். போட்டி நிறுவனங்கள் யாரேனும், குறிப்பிட்ட கடைகளையோ அல்லது வியாபாரிகளையோ பழிவாங்குவதற்காக இப்படிச் செய்திருக்கலாம். ஆனால், அது தவறுதலாக அனைத்து இடங்களுக்கும் பரவியிருக்கலாம். அல்லது Prank போல விளையாட்டுக்காகச் சிலர் இப்படிச் செய்திருக்கலாம். இதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த இரண்டு காரணங்களில் எதுவாயினும், செய்தவர்கள் ஏதோ ஒரு நோக்கத்தை மனதில் வைத்தே இப்படிச் செய்திருக்கிறார்கள் என்கின்றனர் அவர்கள்.

மிகப்பெரிய ஸ்ட்ராபெர்ரி பண்ணை ஒன்று, ஊசி இருந்த பழங்களை முற்றிலுமாக அழித்துவிட்டது. மற்றொரு பண்ணை உலோகக் கண்டுபிடிப்புக் கருவிகளைப் பொருத்தியுள்ளது. இதுபோல தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ஸ்ட்ராபெர்ரி சர்ச்சைகள் மட்டும் ஆஸ்திரேலியாவில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இப்பிரச்னை பற்றிப் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் “மக்கள் உண்ணும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயலின் ஒரு பகுதிதான். இதுவரை 20-க்கும் மேற்பட்ட பழங்களில் ஊசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் கோழைகள். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்படும். விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும். இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் டாலர் பரிசு என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது.