வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்ரெக் இப்போது, சர்வதேச அரங்கில் பலம்பெற்று வரும், பிராந்திய நாடுகளின் மற்றொரு கூட்டமைப்பாக மாறத் தொடங்கியிருக்கிறது.
இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாக அது பெரியளவில் இயங்கவில்லை.
2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்டது. இதற்குக் காரணம், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தோன்றிய பிரச்சினை.
அதுவரை தெற்காசியப் பிராந்தியத்தின் வலுவான பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பாக சார்க் அமைப்புத் தான் இருந்தது.
2016ஆம் ஆண்டு சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நிலையில் இந்தியா அதனைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. அதுபோலவே, இலங்கை, பூட்டான் ஆகிய நாடுகளும் முடிவெடுத்தன.
இதனால் பாகிஸ்தானில் நடக்க வேண்டிய சார்க் மாநாடு நடக்கவில்லை. பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அது கைகூடவில்லை.
சார்க் அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பு நாடாக இருக்கிறது. சீனாவுக்கும் கண்காணிப்பு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. இது இந்தியாவுக்கு அசௌகரியத்தைக் கொடுத்தது.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து. சார்க் அமைப்பை பலவீனப்படுத்தும் முடிவுக்கு இந்தியா வந்தது. 2016ஆம் ஆண்டு அந்த திட்டம் நிறைவேறியது.
உடனடியாகவே, இந்தியா, பிம்ஸ்ரெக் கூட்டமைப்புக்கு மீளுயிர் கொடுத்தது. கோவாவில் நடந்த பிறிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக, பிம்ஸ்ரெக் தலைவர்களின் உச்சி மாநாட்டையும் இந்தியா நடத்தியது.
அதற்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் மாதம், 30, 31ஆம் திகதிகளில் பிம்ஸ்ரெக் அமைப்பின் உச்சி மாநாடு நேபாளத்தில் நடந்தது.
இந்த பிம்ஸ்ரெக் அமைப்பில், பாகிஸ்தான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய சார்க் நாடுகள் இல்லை. இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், இந்தியா ஆகிய ஐந்து சார்க் நாடுகளுடன், மேலதிகமாக மியன்மாரும், தாய்லாந்தும் இடம்பெற்றுள்ளன.
பிராந்திய நாடுகளின் அமைப்புகளை வழிநடத்தும்- தலைமை தாங்கும் ஆர்வம் இந்தியாவுக்கு உள்ளது. சார்க் அமைப்பு சற்று விரிவடைந்து, .இந்தியாவின் தலைமைத்துவத்துக்கு சவால்களைத் தோற்றுவிக்கும் சூழல் ஏற்பட்ட போது, அதனை ஓரம்கட்டும் முடிவுக்கு வந்தது இந்தியா.
இப்போது, பாகிஸ்தானை தவிர வேறெவரும் பெரிதாக சார்க் பற்றி பேசுவதில்லை.
அண்மையில், நேபாளத்தில் பிம்ஸ்ரெக் மாநாட்டுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காத்மண்டுவில் உள்ள சார்க் செயலகத்துக்கும் சென்றிருந்தார். இது நாங்கள் நடுநிலையாக இருக்கிறோம் என்று பாகிஸ்தானுக்கு சமிக்ஞையை வெளிப்படுத்தும் யுக்தி.
பிராந்திய அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக பிம்ஸ்ரெக் அமைப்பை பலப்படுத்துவதில் அக்கறை காட்டிய இந்தியா, இந்த ஆண்டு அதனை இன்னொரு கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
பிம்ஸ்ரெக் மாநாடு தொடங்கப்படுவதற்கு முன்னரே, இந்தியா அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுக்களை நடத்தி, பிம்ஸ்ரெக் நாடுகளின் இராணுவக் கூட்டுப் பயிற்சி ஒன்றுக்கு ஒழுங்கு செய்தது.
புனேயில் ஒரு வார காலம் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெற்றது. ஒவ்வொரு நாட்டில் இருந்தும், தலா 30 படையினர் பங்கேற்றனர். ஆரம்பத்தில், பிம்ஸ்ரெக் அமைப்பின் 7 நாடுகளும் இதற்கு இணங்கின.
எனினும், பின்னர், இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், பூட்டான் ஆகிய நான்கு நாடுகள் தான் இந்தியாவுக்கு தமது படையினரை அனுப்பி வைத்தன.
தாய்லாந்து, கூட்டுப் பயிற்சிக்கு தமது படையினரை அனுப்பவில்லை. கண்காணிப்பு அதிகாரிகளை மாத்திரம் அனுப்பியது. நேபாளம் தான் கடைசி நேரத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
புனேக்கு நேபாள இராணுவ அணி புறப்படுவதற்கு முதல் நாள் தான், இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தது நேபாளம். இது இந்தியாவுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது.
ஏனென்றால், இந்த பிம்ஸ்ரெக் வியூகத்தில் நேபாளம் முக்கியமானதொரு நாடு.
பிம்ஸ்ரெக் அமைப்பை இந்தியா வலுப்படுத்தியமைக்கு இரண்டு காரணிகள். ஒன்று பாகிஸ்தான். இரண்டாவது சீனா.
சார்க் அமைப்புக்குள் இருந்து பாகிஸ்தானை விலக்கி வைப்பது இந்தியாவின் ஒரு நோக்கம் என்றால், சீனாவின் பிராந்திய ரீதியான தலையீட்டை ஓரம்கட்டுவது இன்னொரு நோக்கம்.
சார்க் அமைப்பின் கண்காணிப்பு நாடு என்ற அந்தஸ்தை பெறும் அளவுக்கு சீனா முன்னேறியிருந்தது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்து வந்த நிலையில், அதற்கு முடிவுகட்டுவதற்கான மாற்று உபாயமாகவும், சார்க்கை முடக்கி பிம்ஸ்ரெக்கை உருவாக்கியது இந்தியா.
நேபாளம், நீண்டகாலமாகவே இந்தியாவின் ஒரு மாநிலம் போலத் தான் இருந்து வந்திருக்கிறது. இன்னும் கூட நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் தான், இந்தியாவில் காவல் பணிகளில் கூர்க்காக்களாக இருக்கிறார்கள். இந்திய இராணுவத்தினரால் கூர்க்கா ரெஜிமென்ட் என்ற படைப்பிரிவும் இருக்கிறது.
நேபாளத்துக்கு கடலோ, துறைமுக வசதிகளோ கிடையாது. இமயமலையில் உள்ள நாடாக நேபாளத்துக்கான அத்தியாவசியப் பொருட்கள், நிதி என்று இந்தியாவே கொடுத்து வந்திருக்கிறது.
ஆனால் அண்மைக்காலமாக நேபாளம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. அங்கு சீனாவின் தலையீடுகள் அதிகரித்து விட்டன. இந்தியாவை விட அதிகமாகவே நேபாளத்துக்கு கொட்டிக் கொடுக்க சீனா தயாராக இருக்கிறது.
சீனாவின் பேச்சைக் கேட்டு இந்தியாவுடன் அடிக்கடி முரண்டு பிடிக்கும் நிலைக்கும் நேபாளம் வந்திருக்கிறது.
இரண்டு நாடுகளுக்கும் நடுவே இருப்பதால், நேபாளத்தை கைக்குள் போட்டுக் கொள்வது இப்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான, ஒரு பனிப்போராகவே நடந்து கொண்டிருக்கிறது.
பிம்ஸ்ரெக் அமைப்பில் நேபாளம் அங்கம் வகித்திருந்தாலும், அரசியல், இராஜதந்திர ரீதியாக இந்தியாவுடன் இணைந்திருப்பதாக காட்டிக் கொண்டாலும், இராணுவ மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் என்று வந்து விட்டால், நேபாளம் இந்தியாவின் சொல்லுக்குத் தலையாட்டும் நிலையில் இல்லை.
புனேயில் நடந்த பிம்ஸ்ரெக் நாடுகளின் இராணுவ கூட்டுப் பயிற்சியில் இருந்து விலக நேபாளம் எடுத்திருந்த முடிவே இதனை உறுதிப்படுத்துகிறது. நேபாளத்தின் இந்த முடிவை இந்தியா எதிர்பார்க்கவில்லை.
ஏற்கனவே, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான, மாலைதீவை இந்தியா கிட்டத்தட்ட சீனாவிடம் இழந்து விட்டது. மாலே விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து தொடங்கியது அந்தப் பிரச்சினை.
மாலைதீவில் அவசர உதவித் தேவைகளுக்காக இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 ஹெலிகொப்டர்கள் மூன்றும், 48 விமானப்படையினரும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஹெலிகொப்டர்களை அகற்றுமாறும், இந்திய விமானப்படையினரின் வீசா முடிவுக்கு வந்து விட்டதாகவும், அண்மையில் மாலைதீவு அறிவித்த போது இந்தியா குழப்பமடைந்தது,
கடைசியாக இரண்டு நாடுகளுக்குமிடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, இந்திய ஹெலிகளும், விமானப்படையினரும் தங்கியிருக்க தற்காலிக அனுமதியை வழங்கியிருக்கிறது மாலைதீவு.
அதேபோன்றதொரு நிலையை நோக்கியே நேபாளமும் செல்லத் தொடங்கியுள்ளதா என்ற அச்சம் இந்தியாவுக்கு இருக்கவே செய்கிறது.
பிம்ஸ்ரெக் நாடுகளின் இராணுவக் கூட்டுப் பயிற்சியின் ஒரு கட்டமாக, உறுப்பு நாடுகளின் இராணுவத் தளபதிகள் பங்கேற்ற மாநாடு ஒன்றும், புனேயில் நடைபெற்றது. அதில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும் பங்கேற்றிருந்தார்.
அதில் உரையாற்றிய இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், சீனாவிடம் இருந்து உதவி பெறும் நாடுகள், அந்த உதவிகள் எதுவுமே இலவசம் அல்ல என்பதை தெரிந்து கொள்வார்கள் என்று எச்சரித்திருந்தார்.
அத்துடன், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியாவின் பக்கம் சாய வேண்டும் என்றும், ஏனென்றால் அது தான் புவியியல் என்றும் அவர் கூறியிருந்தார்.
பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முன்பிருந்த நெருக்கம் இல்லாமல் போனது போலவே, நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கம் தற்காலிகமானது தான் என்ற தொனியில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்திய இராணுவத் தளபதி ஒருவர் பிராந்திய அரசியல் பற்றி அதிகம் வெளியிட்ட கருத்தாக இதனைக் கொள்ளலாம். இது, பிராந்திய அரசியலை விட, பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை காட்டியிருக்கிறது.
ஆனாலும், சார்க் அமைப்பில் தனக்கு அடங்காத நாடுகளான, பாகிஸ்தான், மாலைதீவை விலக்கி வைத்துக் கொண்டு, தனக்குக் கீழ் செயற்படக் கூடிய நாடுகளை உள்ளடக்கி பிம்ஸ்ரெக் அமைப்பை பலப்படுத்திய இந்தியாவுக்கு நேபாளம் சவாலாகவே இருக்கிறது.
புனே இராணுவப் பயிற்சி நிறைவு நிகழ்வில் உரையாற்றிய இந்திய இராணுவத் தளபதி, இந்தியாவின் பிரதான பொருளாதாரப் போட்டியாளராக சீனாவே உள்ளது, இரண்டு நாடுகளும், தெற்காசியாவின் ஆதிக்கத்துக்காக போட்டியிடுகின்றன என்ற உண்மையை உடைத்திருந்தார்.
அதுபோலவே, இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே, பிம்ஸ்ரெக் பிராந்தியத்தில், தீவிரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியா கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
பிராந்தியத் தலைமைத்துவத்தை வகிக்க இந்தியா விரும்புகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
அவ்வாறு பிராந்திய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவது உறுப்பு நாடுகள் தான். தலைமைக்கு அடங்கிப்போகும் உறுப்பு நாடுகள் இருக்கும் வரை தான் அது சாத்தியம்.
நேபாளம் குறுக்கே இழுத்துக் கொண்டு செல்வது. இந்தியாவின் அந்த தலைமைத்துவ கனவுக்கு சவாலாகவே இருக்கும்.
நன்றி-வீரகேசரி