இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை விடயத்தில் இந்தியா திமிர் பிடித்தது போன்று பதில் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா – பாகிஸ்தானுக்கிடையே உள்ள பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளதாக பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனையடுத்து. அதனையடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேச இணக்கம் தெரிவித்தனர்.
இந்நிலையில் காஷ்மீரில் மூன்று பொலிஸாரை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த படுகொலைகள் பாகிஸ்தான் இராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டியது.
அத்துடன் ஜம்மு காஷ்மீருடனான உறவை குறிப்பிடும் வகையில் பாகிஸ்தான் அரசு 20 தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த புர்கான் வானியின் படமும் இடம்பெற்றுள்ளது. தீவிரவாதியான அவரை பாதுகாப்பு படையினர் கடந்த 2016 இல் சுட்டுக் கொன்றனர்.
இந்த இரு காரணங்களை சுட்டிக் காட்டி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை இந்திய, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு குறிப்பிடுகையில், இம்ரான் கானின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. இந்த நிலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் அர்த்தமற்றது. இம்ரான் கான் கோரிக்கை வைத்தபோது, பாகிஸ்தான் ஏதோ நல்ல விதமாகத்தான் நடந்து கொள்கிறது என நம்பினோம். ஆனால், மிக மோசமான உள்நோக்கத்துடன்தான் இம்ரான் கான் இந்தியாவுக்கு கோரிக்கை வைத்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு,
சந்திப்பு ரத்தாகியிருப்பது துரதிருஷ்டவசமானது. உள்நாட்டு நெருக்கடிகள் காரணமாக இந்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் திமிர்த்தனமான மற்றும் எதிர்மறையான பதில் எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. எது எப்படியோ என் வாழ்நாள் முழுவதும் தொலைநோக்குப் பார்வையற்ற, குறுமதியாளர்கள் உயர்ந்த பொறுப்புகளை வகிப்பதை பார்த்து வருகிறேன்” என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.