அவுஸ்திரேலியாவில் பழங்களுக்குள் ஊசிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மாம்பழத்தினுள் ஊசி காணப்பட்டதாக பெண் ஒருவர் முறையிட்டுள்ளார்.
ஏற்கனவே அவுஸ்திரேலியா முழுவதும் ஸ்ரோபெர்ரியில் தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அத்தோடு ஸ்ரோபெர்ரி பழங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் வாழைப்பழத்திற்குள் தகடொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக முறையிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பழங்கள் தொடர்பான பரபரப்பு மேலும் இரட்டிப்பானது. இதையடுத்து ஆப்பிள் பழங்களில் ஊசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிய பின்னணியில் தற்போது மாம்பழத்திற்குள் ஊசி காணப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில பெண் ஒருவர் முறையிட்டுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள Coles West Gosford பல்பொருள் அங்காடியில் இம்மாம்பழங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பழங்களுக்குள் ஊசியை செருகுவது மற்றும் உணவுப்பொருட்களை சிதைத்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பது போன்ற கொடூரமான நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களுக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டமாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.