முன்னாள் அரச தலைவர்என்ற மதிப்புடன் மகிந்தராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று தலைமை அமைச்சர் மோடி, முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் முக்கி யஸ்தர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் இன்றை சூழ்நிலையில் மகிந்தவின் இந்தியப் பயணம் முக்கி யத்துவம் பெறுகின்றது.
சுமார் 10 ஆண்டுகாலம் அரச தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமை மகிந்தவுக்கு உள்ளது. அவர் மூன்றாவது தடவையும் அந்தப் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியபோதிலும் ஆட்சிக்கு வருவதில் உள்ள ஆர்வத்தை இன்னமும் கொண்டிருக்கிறார். இதனால் புதிய கட்சியொன்றை அமைத்ததுடன் வேறு சிலரின் ஆதரவையும் பெற்று அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றார்.
பதவி வகித்தபோது சீனாவுடனேயே அதிக உறவு கொண்டாடினார்
மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்தபோது இந்தியாவைவிட சீனாவின் பக்கமே சாய்ந்து காணப்பட்டார். தலைநகர் கொழும்பில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள தமது சொந்த மாவட்டத்தில் துறை முகம் ஒன்றையும் சீனநாட்டின் நிதி உதவியுடன் அமைத்தார்.
அதைவிட நாட்டின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் சீனா ஈடுபட்டது. ஏராளமான சீனத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுப் பணிகளில் அமர்த்தப்பட்டனர். இதைவிடக் கொழும்புத் துறைமுக நகரின் நிர்மாணப் பணிகளும் சீனாவிடமே வழங்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாகப் பெரிய தொகையிலான கடன்களையும் சீனா வழங்கியது.
தற்போது அம்பாந்தோட்டை துறைமுகம் 99 ஆண்டுகளுக்குக் குத்தகை அடிப்படையில் சீனாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஆதிக்கத்தை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது
தனது அண்டை நாடான இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை இந்தியாவினால் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா அதன் பரம எதிரி என்பதால் இலங்கையில் சீனா ஊடுருவுவது தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விடுமென்பதும் இந்தியாவுக்கு நன்கு தெரியும்.
இந்த நிலையில்தான் தமிழர் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் தமிழர்களின் பெயர் தாங்கிய சுப்பரமணியன் சுவாமி தி।டீரென இலங்கைக்கு வந்தார். அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மகிந்தவின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தார். சுவாமி இந்தியாவின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வருகையில் அப்போதே சந்தேகம் நிலவியது. இப்போது அது நிவர்த்தியாகிவிட்டது.
மகிந்த இந்தியாவுக்குச் சென்றதும், மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்ததும் சீனாவுக்கு உவப்பான விடயங்களாக இருக்கப்போவாதில்லை. மகிந்த அடுத்த தடவையும் ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்பதும்சீனாவின் விருப்பமாகும்.
கடந்த தடவை சீனா பல வழிகளிலும் பெருமுயற்சி செய்தபோதிலும் மகிந்தவால் வெற்றியீட்ட முடியவில்லை. இதுவும் சீனாவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.
மகிந்தவின் தோல்விக்கு இந்தியாவும் காரணம்
மகிந்தவின் தோல்விக்கு இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டது. மகிந்தவின் சீனச் சார்ப்புக் கொள்கையே அந்த நாடுகளின் வெறுப்புக்கான காரணமாகும். தற்போது அமெரிக்கா தனது முக்கிய எதிரியாகச் சீனாவைக் கருதி வருகின்றது. பொருளாதார ரீதியாகவும், படை பலத்தாலும் சீனா அமெரிக்காவுக்குப் போட்டியாக வளர்ந்து வருவதே இதற்கான காரணமாகும்.
மகிந்தவின் நடவடிக்கைகள் அடுத்த தடவை அவரே ஆட்சியை அமைப்பாரென்ற நம்பிக்கையை இந்தியாவிடம் ஏற்படுத்தியிருக்கக்கூடும். இதனால் சுப்பிரமணின் சுவாமி ஊடாக மகிந்தவுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.
இதேவேளை, மோடியும்,மகிந்தவும் சந்தித்துள்ளமை இலங்கையில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கான அறிகுறியென மகிந்தவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் எந்த அளவுக்கு உண்மை பொதிந்திருக்கிறது என்பது தெரியவில்லை.
மகிந்தவின் இந்திய உரை
மகிந்த ராஜபக்ச இந்தியாவில் வைத்து வழங்கிய செவ்வியில் தமிழ் மக்களில் ஒருவருக்குக்கூடப் பாதிக்கு ஏற்படாத வகையில் இறுதிப் போரை முன்னெடுத்துச் செல்லுமாறு தாம் படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும், பொது மக்களைப் படையினர் கொல்லவில்லையெனவும், புலிகளே தமது மக்களைக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் பன்னாடுகளின் ஆதரவுடன் விசாரணைகள் இடம்பெறுமானால் அப்பாவி மக்கள் பல ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டமைக்குக் காரணம் என்பது தெரிவரும். இறுதிப் போரில் இந்தியாவின் பங்கும் நிறையவே இருந்ததால் நீதியான போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறும்போது இந்தியாவின் பக்கமும் விரல்கள் நீட்டப்படுவ தற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.
இதிலிருந்து தப்பிக்கவே அந்த நாடு விரும்பும் என்பதில் சந்தேகமில்லை. தமிழர்கள் தொடர்பாகச் சிறிதும் அக்கறையில்லாத மகிந்தவும், இந்தியாவும் ஒன்றிணைவதைத் தமிழர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றனர். இதேவேளை மகிந்த இந்தியாவின் பக்கம் சாய்வதை சீனா ஒருபோதுமே ஏற்றுக்கொள்ள மாட்டாது.
ஏனென்றால் தனது நெருங்கிய சகாவான மகிந்த இலங்கையில் அடுத்து ஆட்சியை அமைப்பாரென அது எதிர்பார்த்திருக்கும் நிலையில் அவரை இழப்பதற்கு சீனா ஒருபோதுமே விரும்பாது. இதனால் அடுத்து மகிந்தவை வளைத்துப் போடுவதற்கான முயற்சியில் அந்த நாடும் இந்தியா போன்று ஈடுபடுமென எதிர்பார்க்க முடியும். அதேபோலவே தமக்கு எந்தப் பக்கத்திலிருந்து அதிக இலாபம் கிடைக்கி றதோ அதைத்தான் மகிந்த தெரிவு செய்வாரென்பதையும் எதிர்பார்க்க முடியும்.
நன்றி – உதயன்