புரட்சிகரக் கம்யூனிஸ்ட் போராளியின் வாழ்க்கைத் துணைவராகி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தலைமறைவு வாழ்க்கையின் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் முகங்கொடுத்து, பிடிவாதம் மிக்க கணவரிடமிருந்து தனிமைப்பட்டு, மகனையும் மகளையும் தன் காலத்திலேயே பறிகொடுத்து, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து பெற்ற இனிப்பும் கசப்பும் கலந்த அனுபவங்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் மூதாட்டி கோட்டேஸ்வரம்மா தமது நூறாவது வயதில் காலமாகிவிட்டார். ஒரு காலம் விடைபெற்றுக்கொண்டது.
பேரனுபவங்கள் நிறைந்த வாழ்க்கை கோட்டேஸ்வரம்மாவுடையது. நான்கு அல்லது ஐந்து வயதாகியிருந்தபோதே, குழந்தைத் திருமணம் செய்யப்பட்டு, பருவம் எய்துவதற்கு முன்பே கணவனை இழந்தவர். ஆந்திராவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரும், தெலங்கானா போராட்ட வீரர்களில் ஒருவருமான சந்திர ராஜேஸ்வர ராவின் முன்முயற்சியின்பேரில், அவரது இளம் தோழரான சீதாராமய்யாவுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) பல்வேறு மாநிலங்களில் ஒடுக்குமுறைகளாலும் உள் முரண்பாடுகளாலும் பல்வேறு குழுக்களாக உடையத் தொடங்கிய சூழல். ஆயுதமேந்திய போராட்டத்தை முழுமையாகக் கைவிடாத, அதேவேளை சட்டரீதியான, வெளிப்படையான வெகுமக்கள் அமைப்புகளைக் கட்டுவதன் மூலம், புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுத்து முன்னேற்றுவதற்காக மிகக் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பழங்குடி மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோரை மட்டுமின்றி நூற்றுக்கணக்கான அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரைத் திரட்ட ‘மக்கள் யுத்தம்’ கட்சியை நிறுவினார் கே.எஸ். என்று அழைக்கப்பட்ட கொண்டபள்ளி சீதாராமய்யா. அவருடைய வாழ்க்கைத் துணைவராகவும் போராட்டத் தோழராகவும் மட்டுமின்றி, தம்மளவிலேயே தனிச் சிறப்பான பெண்ணியப் போராளியாக, இலக்கியவாதியாக, பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளை வலியுறுத்தியவராக வாழ்ந்தவர் கோட்டேஸ்வரம்மா.
சீ்தாராமய்யாவைப் போலவே தமக்கு வந்த குடும்பச் சொத்தையும் கட்சிக்குக் கொடுத்தார். கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, கிராமங்களில் பெண்களுக்குக் கழிப்பறைகள் கட்டித் தருவது, ஜாக்கெட் அணியும்படி பெண்களை ஊக்குவிப்பது, கிருஷ்ணா வாய்க்காலில் தூர் வாருவது, திருமணமாகாத கம்யூனிஸ்ட் பெண்கள் ஒன்றாக வாழ கம்யூன்கள் அமைப்பது என்று அவர் தொடாத பணிகள் இல்லை. சிறை வாழ்க்கையின் கொடுமைகளைத் துச்சமாகக் கருதியவர்.
ஆயினும், அர்ப்பணிப்பு மிக்க கம்யூனிஸ்ட் இயக்கத்திலும்கூட ‘ஆணாதிக்கம்’ தொடர்ந்து பல வடிவங்களில் இருந்துவந்ததைத் துணிச்சலோடு எதிர்த்து நின்றார் கோட்டேஸ்வரம்மா. கம்யூனிஸ்ட் இயக்கத்திலுள்ள அறிவுஜீவிகள் அகம்பாவத்தோடு நடந்துகொள்வதையும் அவர் சாடியிருக்கிறார். தெலங்கானா போராட்டக் காலத்திலிருந்து ‘மக்கள் யுத்தம்’ கட்சி நடத்திய போராட்டக் காலம் வரை சீதாராமய்யா தலைமறைவாகவும் சிறை வாழ்க்கையிலும் இருந்தபோது, அவர்களது குழந்தைகளை வளர்க்கும் குடும்பச் சுமையும் கோட்டேஸ்வரம்மா மீதே விழுந்தன. போலீஸாரால் கொல்லப்பட்ட அவரது மகன் ‘சந்தூ’வின் உடலைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை; ஒரே மகளான கருணா மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார்; கருணாவுக்கு முன்பே அவரது கணவர் திடீரென்று இறந்துபோனார்.
தனிப்பட்ட காரணங்களால் சீதாராமய்யாவிடமிருந்து பிரிந்து,, குடும்ப உறுப்பினர்கள் எவருடைய தயவும் இல்லாமல், பல ஆண்டுகள் சொந்தக் காலில் நின்று வாழ்ந்துவந்தபோதிலும், புரட்சியையே தமது உயிர் மூச்சாகக்கொண்டிருந்த தமது கணவர் மீதான மதிப்பை கோட்டேஸ்வரம்மா ஒருபோதும் கைவிடவில்லை. எந்தக் கட்சிக்காகத் தமது வாழ்க்கையின் கணிசமான பகுதியை அர்ப்பணித்தாரோ, அந்தக் கட்சியால் வெளியேற்றப்பட்ட சீதாராமய்யா, உடலும் மனமும் நொந்திருந்த காலத்தில் தாய்மை உணர்வுடன் அவருக்கு உணவு சமைத்து அனுப்பினார். அதேசமயம், முழு சமரசமும் செய்துகொள்ளவில்லை. சீதாராமய்யா இறந்தபோது கட்சிக்காரர்கள் ஒருவர்கூடத் துக்கம் விசாரிக்க வராததைத் தன் வாழ்வின் பெரும் வேதனையாகக் கருதினார் கோட்டேஸ்வரம்மா.
கோட்டேஸ்வரம்மாவின் அசாதாரணமான வாழ்க்கை வரலாற்றை இங்கு அவர் எழுப்பிய தார்மிகக் கேள்விகளுடன் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், கெளரி கிருபானந்தனால் சிறப்பாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டேஸ்வரம்மாவின் தன் வரலாற்று நூலான ‘ஆளற்ற பாலம்’ (காலச்சுவடு வெளியீடு) கட்டாயம் படிக்க வேண்டும். உண்மை எப்படி இலக்கியமாக மிளிரும் என்பதையும் சொல்லும் நூல் அது!
– எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய அறிஞர்,
தொடர்புக்கு: sagumano@gmail.com