மது மயக்கத்தில் இருப்பவர்களை எழுப்பும் முயற்சி! -கபிலன் வைரமுத்து நேர்காணல்

டாஸ்மாக்  மதுபான கடை களால் தமிழ்நாட்டில் எத்தனையோ குடும்பங் கள் சீரழிந்துவரும் சூழலில்,  மதுவுக்கு எதிரான பாடலை உருவாக்கியிருக்கிறார் கபிலன் வைரமுத்து.

‘இந்தி யன்-2’ படத்தின் வசனப் பணிகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கபிலன் வைரமுத்துவோடு ஒரு நேர்காணல்:

மதுக் கலாச்சாரத்தைப் பற்றிய பாடலுக்கு எதற்கு  ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’ என்ற தலைப்பு?

மணிரத்னத்தின் `அஞ்சலி’ திரைப்படத்தில் மரண உறக்கத்தில் இருக்கும் தன் சகோதரியை கதறி கதறி எழுப்புவாள் அந்தச் சிறுமி. அதைப் போல மது மயக்கத்தில் இருக்கும் எத்தனையோ சகோதர – சகோதரிகளை எழுப்புகிற முயற்சிதான் இந்தப் பாடல். `ஏந்திரு’ என்பது மழலைப் பிழை. அது `எழுந்திரு’ என்று பாட லின் இறுதியில் திருந்துவதாக அமைத்திருக்கிறோம்.

இப்பாடலின் தலைப்பை கே.வி. ஆனந்தும், பாடலின் முன்னோட் டத்தை ஹிப்ஹாப் தமிழாவும் வெளி யிட்டுள்ளனர். பாடலைப் பற்றி நீங்கள்,  டி.ராஜேந்தர்,  இசை யமைப்பாளர் பாலமுரளி பேசிய காணொலிகள் ஒரு பக்கம். ஒரு சினிமா வெளிவருவது போன்ற இந்த ஏற்பாடு இந்தப் பாடலுக்கு அவசியம்தானா?

இப்பாடலின் தலைப்பை பிரதமரும் முன்னோட்டத்தை ஜனாதிபதியும் வெளியிட்டிருக்க வேண்டும். அவர்களையெல்லாம் அணுக வசதியோ, நேரமோ இல்லாததால் இந்தச் சிறிய ஏற்பாடு. திமிரோடு நான் பேசுகிறேன் என நினைக்கலாம். இல்லை. இன் றையச் சூழலில் தமிழ்நாட்டுக்கு இப்பாடல் எந்த அளவு முக்கியம் என்ற ஆதங்கத்தோடு பேசுகிறேன். இதை யார் உருவாக்கியிருந்தாலும் இது முக்கியத்துவம் பெற வேண்டிய பாடல்தான்.

டி.ராஜேந்தரோடு பணியாற்றிய அனுபவம்?

`கவண்’ படத்தைத் தொடர்ந்து இது அவரோடு  இரண்டாவது அனுபவம். அவருடைய சாதனை பெரிது என்றாலும் ஒரு கல்லூரி நண்பனைப் போல பழகுவார். அவருடைய குரல் இப்பாடலில் மின்சாரம் பாய்ச்சியிருக்கிறது. இசையமைப்பாளர் பாலமுரளியின் உற்சாக இசைக்கு டி.ராஜேந்தர் பெரும் உத்வேகம் தந்திருக்கிறார்.

மதுவுக்கு எதிரான பாடலில் மதுக் கடைகளுக்கு ஆதரவளித்த கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதியை காட்டியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறதே?

இது மதுவுக்கு எதிரான பாடல் மட்டும் அல்ல. மது என்பது இப்பாட லின் மையம். ஆனால் அதைத் தாண்டி எதிர்காலத் தலைமைக்கான ஒரு தேடல் இந்தப் பாடலின் அடிநாதம். `ஏந்திரு அஞ்சலி ஏந்திரு எதிர்காலம் காத்திருக்கு…’ என்ற வரிகள் இளைஞர்கள் வழி அமைய வேண்டிய புதிய தலைமையைக் கனவு காண்கிறது.

மறைந்த நம் தலைவர்களுக்கு மரியாதை செய்து அவர்களை மனதில் எண்ணிக்கொண்டு இளைய தலைமுறை புதிய திசை நோக்கி எட்டு வைக்கிறது என்பதே இப்பாட லின் துணை பொருள். மதுவுக்கு எதிராகப் போராடியவர்களின் வரிசையில் நீங்கள் சொன்ன மூன்று தலைவர்களை நாங்கள் சேர்த்திருந்தால் அதை விவாதிக் கலாம். இந்த மண்ணின் மிகச் சிறந்த ஆளுமைகளின் வரிசையில் அவர்களை வணங்கியிருக்கிறோம். அதை யாராலும் மறுக்க முடியாது.

ரஜினி, கமல் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?

இருவருக்குமே நான் சிறுவயது முதலே தீவிர ரசிகன். ஆனாலும் உங்கள் கேள்வி வலி தருகிறது. மக்களுக்காக வீதியில் இறங்கி போராடி செத்துப் பிழைத்து,  அடி பட்டு மிதிபட்டு சிறை செல்கிற தலைவர்களையெல்லாம் புறக் கணித்துவிட்டு நடிகர்களிடம் தலை வர்களைத் தேடுவதே நம் வழக் கமாக இருக்கிறது. உங்கள் கேள் விக்கு பதில் சொல்லி,  அந்த வழக்கத்தை ஊக்குவிக்க நான் விரும்பவில்லை.

நீங்கள் மெல்ல மெல்ல திரைப்பட இயக்கத்தை நோக்கி நகர்வதாகத் தெரிகிறதே?

எழுத்தாளர்கள் இயக்குநர்களா னாலும் அவர்கள் தொடர்ந்து எழுத் தாளர்களாகவே இருப்பதுதான் அவர்களின் பலமும் பலவீனமும். ஆனால் இன்றைய தமிழ் திரையுல கில் அனுபவம் மிக்க இயக்குநர் களே எந்த அளவுக்கு சிரமப்படு கிறார்கள் என்பதை பார்க்கும்போது எழுத்தாளராகவே இருந்துவிடலாம் என்று தோன்றும். என்னுடைய ஒரு படைப்பை நான்தான் இயக்க வேண்டும் என்ற சூழலில் நிச்சயமாக அதில் ஈடுபடுவேன்.

உங்கள் தந்தை  கவிஞர் வைரமுத்து தலைமையில் இயங்கும் வெற்றித்தமிழர் பேரவை அரசியல் இயக்கமாக மாறுமா?

சிலர் அரசியலுக்கு வந்தும் நிகழ்த்தாத சில மாற்றங்களை அர சியலுக்கு வராமலே அவர் தமிழால் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அவர் வழி தனி வழி. அது தமிழ் வழி.