மொழியுரிமையும், காணி உரிமையும் மறுக்கப்படுவது, இனப்பிரச்சினையின் அடிநாதமாகத் திகழ்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் ஆளும் தரப்பினரால் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே இனப்பிரச்சினை உருவாகியது. உரிமைகள் மறுக்கப்படுவதைத் தட்டிக் கேட்டும் பலன் கிடைக்காத காரணத்தினாலேயே போராட்டங்கள் தலையெடுத்தன.
உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் பல்வேறு வழிகளில் திசைதிருப்பப்பட்டு, அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. அதிகார வலுவுடன் கூடிய சட்;ட ரீதியான அடக்குமுறைகள் ஒருபக்கமாகவும், குழுக்களின் ஊடாக வன்முறைகளைப் பயன்படுத்தி மறைமுகமான அச்சுறுத்தல்களுடன் கூடிய அடக்குமுறைகள் மற்றுமொரு பக்கமாகவும் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.
சிங்களம் மட்டும் என்று குறிப்பிடப்படுகின்ற சிங்களத்தை அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து மொழியை அடிப்படையாகக் கொண்டு வன்முறைகள் வெடித்திருந்தன. இந்த அடாவடித்தனம்1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் என்று குறிப்பிட்டு சிங்களத்தை தனித்துவமான அரச கரும மொழியாகப் பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து, தலைவிரித்தாடியது.
வாகனங்களின் இலக்கத்தகடுகளில் ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை அன்றைய அரசாங்கம் வலிந்து திணித்து, தமிழ் மக்களுக்கு எதிராக மொழி ரீதியான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. சிங்களப் பகுதிகளில் வர்த்தக நிலையங்களைக் கொண்டிருந்த தமிழ் மக்களுடைய நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் இருந்த தமிழ் எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டன.
சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் தமிழ் மக்களுடைய மொழியுரிமை மறுக்கப்பட்டு, அவர்களுடைய சுயகௌரவத்திற்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் நடந்தேறின. இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்த தமிழ் அரசியல் தலைவர்கள் மீது காடைத்தனம் பிரயோகிக்கப்பட்டது. பொலிசார் அவர்களைத் தாக்கி இழுத்தெறிந்து அராஜகம் புரிந்தார்கள்.
கல்லோயா பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த சிங்களக் குடியேற்றப் பகுதிகளைச் சேர்ந்த கும்பல்கள் அங்கு பண்ணைகளில் பணியாற்றிய தமிழ்த் தொழிலாளர்களைத் தாக்கியதில் 150 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் கல்லோயா படுகொலை என வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. இதனையடுத்து, நாடெங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், வீடெரிப்புக்கள், கொள்ளைகள், ஆட்கொலைகள் என்பன இடம்பெற்றன. இந்த வன்முறைகளில் 300 தொடக்கம் 1500 பேர்வரையில் பலியாகியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் மொழி உரிமையை அரசியல் ரீதியாக இல்லாமற் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட சிங்ளம் மட்டும் என்ற மொழிச்சட்டம் பல்வேறு அனர்த்தங்களை ஏற்படுத்தியதுடன், ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதற் தடவையாக தமிழ் மக்களுக்கு எதிராக இன ரீதியான வன்முறையை நாடெங்கிலும் வெடிக்கச் செய்திருந்தது.
மொழியுரிமை மறுக்கப்பட்டதன் விளைவாகப் பாரிய உயிரிழப்புக்களும், உடைமை இழப்புக்களும் ஏற்பட்டிருந்தன. இழப்புக்கள் மாத்திரமல்ல. இன ரீதியான வெறுப்புணர்வு தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்தது. ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கு இந்த வெறுப்புணர்வு தூண்டுதலாக அமைந்திருந்தது.
அதன் பின்னர் தமிழுக்கும் அரச கரும மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு, சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களுக்கு மொழி உரிமை வழங்கப்பட்டதாக வெளி உலகுக்குக் காட்டப்பட்டது. ஆனால் உண்மையான, நடைமுறைச் சாத்தியமான மொழி உரிமை வழங்கப்படவில்லை. ஒன்றுக்கொன்று முரண்பாடான வழிகளில் அரசியலமைப்பின் சரத்துக்கள் அமைக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய உரிமை நடைமுறையில் கடினமானதாக அல்லது நடைமுறைப்படுத்தப்பட முடியாத நிலைமை உருவாக்கப்பட்டிருக்கின்றது.
சிக்கல்களை உருவாக்குகின்ற சிங்களக் குடியேற்றங்கள்
மொழி உரிமைக்கு அடுத்ததாக காணி உரிமைகள் தமிழ் மக்களுக்கு அப்பட்டமாக மறுக்கப்படுவது காலம் காலமாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மொழி உரிமையை மறுப்பதற்கான சி;ங்களம் மட்டும் என்ற சிங்கள மொழிச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஐம்பதுகளிலேயே தமிழர்களின் தாயப் பிரதேசமாகக் கருதப்படுகின்ற வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசத்தில் குறிப்பாக கிழக்கில் கல்லோய பகுதியில் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. அன்று தொடங்கிய தமிழர் பிரதேசங்களில் காணிகளை அபகரிக்கும் கைங்கரியம் காலத்தி;ற்கு ஏற்ற வகையில் வௌ;வேறு வடிவங்களில் மிகவும் சாதுரியமாகவும், நுணுக்கமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணம் அம்பாறையை மையமாகக் கொண்டு சிங்களக் குடியேற்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன. வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகப் பிரதேசம் என்ற தாயகக் கோட்பாட்டை உடைத்து நொறுக்குவதை நோக்கமாகக் கொண்டு சிங்கள மக்களைக் குடியேற்றுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் கையாளப்பட்டு வந்தன. இன்று வரையிலும் அது தொடர்கின்றது.
சிங்களக் குடியேற்றங்களுக்கு மூலாதாரமாக மகாவலித் திட்டம் தந்திரோபாய ரீதியில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் அதி நீளமான ஆறாகிய மகாவலி கங்கையை வரண்ட பிரதேசங்களை நோக்கி திசைதிருப்பி நீர்வளத்தைப் பகிர்ந்தளிப்பதை இலக்கு வைத்து நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் காட்டப்பட்டது, உண்மையில் அந்தத் திட்டத்தின் நோக்கம் அதுவல்ல. தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதை உள்நோக்காகக் கொண்டு அந்தத் திட்டம், நீண்டகால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆளும் தரப்பினராகிய பேரினவாதிகளின் இந்த நோக்கம் முல்லைத்தீவில் மகாவலி திட்டத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு முன்னர், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமிழர் பிரதேசங்கள் அடாவடித்தனமாக சிங்களக் குடியேற்றங்களின் மூலம் சூறையாடப்படுகின்றன என பொதுவான முறையிலேயே குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால் மகாவலி எல் வலயத்தின் கீழ் முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் காணிகளை அடாவடித்தனமாக சுவீகரிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்தே, இந்தக் காணி அபகரிப்பின் விபரீதமும், ஆபத்தான நிலைமையும் வெளிச்சத்திற்கு வந்தது.
இது ஒருபக்கம் இருக்க, யுத்த மோதல்களின்போதும், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர்களுக்கு, காணி உரிமைச் சட்டத்தின் கீழ் உரித்துடைய காணிகளை வனபரிபாலன திணைக்களமும், தொல்லியல் திணைக்களமும், அழுங்காமல் நசுங்காமல் அபகரித்து உரிமை கோருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
யுத்தத்தின் பின்னரான காலத்தில் பௌத்த விகாரைகளை அமைப்பதன் ஊடாகவும், மழைக்காலத்தில் காளாண்கள் முறைப்பதைப் போன்று புத்தர் சிலைகளை நிறுவுவதன் ஊடாகவும் காணிகளை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைமைகள் யுத்தத்தில் வெற்றிகொண்ட முன்னைய அரசாங்கத்தைவிட அதன் பின்னர், சிறுபான்மை இன மக்களின் பேராதரவுடன் ஆட்சி பீடம் ஏறிய புதிய அரசாங்க காலத்தில் தீவிரம்பெற்றிருப்பதைக் காண முடிகின்றது.
இடப்பெயர்வும் காணி அபகரிப்பும்
விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த யுத்தமோதல்களின்போது பொதுமக்கள் குறிப்பாக தமிழ்மக்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தது. உயிர் தப்புவதற்காக உடைமைகளைக் கைவிட்டு, உறைவிடங்களையும் வரலாற்று ரீதியாக உரித்துடைய காணிகளைக் கைவிட்டு பாதுகாப்பு தேடி மக்கள் அடியோடு இடம்பெயர்ந்தார்கள்.
இந்த இடப்பெயர்வை, தமக்கு சாதகமான நிலைமையாகக் கொண்டு பேரினவாதிகள் தமிழ் மக்களுடைய காணிகளையும் கிராமங்களையும் வனபரிபாலன திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் ஊடாகக் கபளீகரம் செய்துள்ளனர். அந்தத் திணைக்களங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடித்தனமாக இந்த காரியம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் இடம்பெயர்ந்ததன் பின்னர், தேசியபாதுகாப்பு என்ற போர்வையில் அரச படைகள் நிலைகொண்டிருக்க வேண்டிய அவசியத்தை முதன்மைப்படுத்தி, தமிழ் மக்களுக்குச் சட்ட ரீதியாகச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணிகள் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டன.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், ஆயுத மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் இருந்து படையினர் வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் அது இங்கு நடைபெறவில்லை. தமிழர் கிராமங்களிலும் பொதுமக்களுடைய காணிகளிலும் படையினர் நிரந்தரமான முகாம்களை அமைத்து அங்கு நிலைகொண்டிருக்கின்றார்கள்.
படையினர் வசமுள்ள பொதுமக்களுடைய காணிகள் உரிமையாளர்களிடம் கயைளிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள அந்த மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பாதிக்கப்பட்ட மக்களாலும், ஐநா மற்றும் சர்வதேச நாடுகளினாலும் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலைமையே இன்னும் தொடர்கின்றது. புண்ணியத்திற்காகக் கிள்ளிக் கொடுப்பதைப் போன்று படைகள் வசமுள்ள காணிகள் சிறிய சிறிய அளவிலேயே கையளிக்கப்பட்டு வருகின்றன.
யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும், காணிகளை மீளக் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்னும் இழுபறி நிலையிலேயே இருக்கின்றன. காணிகளை மீட்பதற்காக மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கண்டன ஊர்வலங்களை நடத்தினார்கள். ஆனல் பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து, புதுக்குடியிருப்பு, கேப்பாப்பிலவு, கிளிநொச்சி பரவிப்பாய்ஞ்சான் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மணி மீட்புக்கான இந்தப் போராட்டம் கேப்பாப்பிலவில் முடிவின்றி இன்னும் தொடர்கின்றது.
அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதில் ஒரு வகையில் கண்மூடித்தனமான செயற்பாடே அரச தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய பாதுகாப்பு அரசாங்கத்தின் முன்னுரிமை பெற்ற ஒரு செயற்பாடாக இருந்த போதிலும் இறைமையுள்ள மக்களின் குடியிருப்பு காணிகளை இராணுவத்தின் பிடியில் வைத்துக் கொண்டு அவற்றை விடுவிப்பதற்கு அரசபடைகளை மேவிச் செயற்பட முடியாத ஒரு நிலையிலேயே அரசாங்கம் காணப்படுகின்றது. மேலூட்டமான பார்வையில் இது அபத்தமானது. ஆனால் அடிப்படையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் உச்சகட்ட நடவடிக்கையாக இது அரங்கேற்றப்படுகின்றது என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.
பொதுமக்களுக்குச் சொந்தமான கிராமங்கள், காணிகளில் நிலைகொண்டுள்ள படையினர், அவற்றை மீளக் கையளிக்கும் போது, அங்குள்ள பொதுமக்களின் வீடுகள் பொதுக்கட்டிடங்கள் என்பவற்றைத் தரைமட்டமாக்கி வெற்றுக்காணிகளாகவும், பெருமளவில் இடிபாடுகள் நிறைந்த காடடர்ந்த பிரதேசமாகவுமே கையளித்திருக்கின்றார்கள். யாழ் மாவட்டத்தில் கிட்டத்தட்ட மூன்று தகாப்தங்களாகக் கைநழுவியிருந்த வலிகாமம் வடக்குப் பிரதேச காணிகள் இந்த நிலைமையிலேயே சிறிது சிறிதாகக் கையளிக்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிரமோட்டையின் கதி
அதேவேளை, சட்ட விதிகளைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் காணிகளை அபகரிக்கின்ற கைங்கரியத்தில் வனபரிபாலன திணைக்களம் பகிரங்கமாக இறங்கியுள்ளது. குறிப்பாக வவுனியா வடக்குப் பிரதேசமாகிய நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமம், இவ்வாறு வனபரிபாலன திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது.
யுத்தமோதல்கள் தீவிரமடைவதற்கு முன்னால், கிராமங்கள் தேடுதலுக்காகச் சுற்றி வளைக்கப்பட்ட காலப்பகுதியில் சிவிலுடையில்ஆயுதமேந்தி வந்து ஆட்களைக் கைது செய்தும், அடையாளம் தெரியாத வகையில் ஆட்களைக் கடத்திச் சென்ற சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் நெடுங்கேணி பிரதேசம் அச்சத்தில் உறைந்து போயிருந்தது. வெடிவைத்தகல்லு பகுதியில் மூன்று பேர் இவ்வாறு அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டதையடுத்து, அந்தப் பிரதேசத்தில் மக்கள் பெரும் பீதியடைந்திருந்தார்கள். இதனால் தமது சொந்தக் கிராமங்களில் அவர்கள் குடியிருப்பதற்கு அஞ்சி பாதுகாப்பு தேடி, வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தார்கள்.
அவ்வாறு இடம்பெயர்ந்த கிராமங்களில் காஞ்சிரமோட்டையும் ஒன்று. இங்கு வசித்த குடும்பங்களில் சில கடல் கடந்து தமிழகத்தில் சென்று தஞ்சமடைந்தன. ஏனைய குடும்பங்கள் உள்ளுரிலேயே பல இடங்களில் தஞ்சமடைந்து யுத்தம் முடிந்த பின்னர் காலம் தாழ்த்தியே மீள்குடியேறுவதற்காகத் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பியிருக்கின்றார்கள்.
இவ்வாறு திரும்பிய குடும்பங்கள் அரச அதிகாரிகளின் அனுமதியுடனும், மீள்குடியேற்ற உதவித்திட்டங்களின் அடிப்படையிலும் காடாகக் கிடந்த தமது காணிகளைத் துப்பரவு செய்து தற்காலிக வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த மக்கள் அந்தக் காணிகளில் நிரந்தரமாகக் குடியிருப்பதற்கான செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ள முடியாது. அபிவிருத்திச்செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது என்று அங்கு சென்று நிலைமைகளை அவதானித்த வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் அந்த மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.
சொந்தக்கிராமத்திற்குத் திரும்பி வந்த போதிலும், தமக்கு சட்டரீதியாகச் சொந்தமான காணிகளில் குடியிருப்பதற்கு வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் தடை விதித்ததையடுத்து, அவர்கள் திகைப்படைந்தார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் சிவில் நிர்வாக அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். அதேபோன்று இந்தக் கிராமத்தையும் உள்ளடக்கிய மருதோடை கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் இந்த நிலைமை குறித்து வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் கவனத்திற்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுத்து இந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வழிசெய்யுமாறு கோரியிருந்தார்கள்.
மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன் இந்த விடயத்தை ஒரு தீர்மானத்தின் ஊடான தீர்வைப் பெறுவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் கவனத்திற்கு, அரசாங்க அதிபருக்கு எழுதிய ஒரு கடிதத்தின் ஊடாகக் கொண்டுவந்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளின் இந்தச் செயற்பாடு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது. இதனையடுத்து, கூட்டத்திற்கு வருகை தந்திருந்த வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளுடன் குழுவின் இணைத்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் வாக்குவாதப்பட்டதன் பின்னர், அந்த மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும் மறுநாள் அந்தப் பகுதிக்குச் சென்ற வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் அரச உயர் மட்டத்திற்கு இந்தவிடயம் கடிதம் மூலமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து பதில் வரும் வரையில் எந்த விதமான அபிவிருத்தி வேலைகளும் மேற்கொள்ளக் கூடாது என அந்த மக்களுக்கு அறிவுறத்தியுள்ளனர்.
இந்தக் கிராமத்தின் காணிகள் வனபரிபாலன திணைக்களத்திற்குச் சொந்தமானது என 2005 ஆம் ஆண்டளவில் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற ஒரு தகவலும் உண்டு. எவ்வாறாயினும், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவது என்பது சர்வதேச சட்டமுறைமைகளுக்கு அமைய இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமையாகும். உள்ளுர்ச் சட்டத்திற்கமையவும் இடம்பெயர்ந்திருந்த போதிலும், இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் இறைமையுள்ள அந்த மக்கள் தமது சொந்தக்காணிகளில் மீள்குடியமர்வது என்பது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைத் தடுப்பதற்கு அரசாங்கம் உள்ளிட்ட எந்த ஒரு தரப்பினருக்கும் உரிமையும் அதிகாரமும் கிடையாது.
இந்த நிலையில் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் காஞ்சிரமோட்டை கிராமத்து மக்களை அவர்களுடைய காணிகளில் நிரந்தர கட்டிடங்களோ வேறு அமைப்புக்களையோ கட்டக் கூடாது என்று எந்தச் சட்டத்தின் கீழ் தடுத்துள்ளார்கள் என்பது கேள்விக்குரியது. வனங்களையும் அவற்றின் வளங்களையும் கண்காணிப்பதும், பாதுகாத்து நிர்வகிப்பதுமே வனபரிபாலன திணைக்களத்தின் வெளிப்படையான பொறுப்பும் கடமையுமாகும்.
சட்ட ரீதியாகக் குடியேறி வசிப்பதற்கென அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் அவர்கள் குடியிருக்க முடியாது என்றோ அல்லது நிரந்தரமான கட்டிடங்களை அமைக்கக்கூடாது என்றோ உத்தரவிடுவதற்கு வனபரிபாலன திணைக்களத்திற்கு எந்த வiயில் அதிகாரம் உள்ளது என்பது கண்டறியப்பட வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்வது என்பது இயல்பானது. இயற்கையானது. இயற்கைச் சட்ட நெறிமுறைக்கமைய அது தடுக்கப்பட முடியாத உரிமையுமாகும். இதனால்தான் வேறு பல இடங்களில் தமது காணிகளை மீட்பதற்காக மக்கள் இராணுவத்திற்கு எதிராக மண்மீட்புப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.
நிலைமை அவ்வாறிருக்க வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் இடையூறு செய்வதற்கும், அதனைத் தடுப்பதற்கும் எந்த வகையில் அதிகாரம் பெற்றிருக்கி;ன்றார்கள் எ;னபது கண்டறியப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவது என்பது அடிப்படை உரிமை சார்ந்த விடயம். அந்த அடிப்படை உரிமையை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்குப் பின்னரும் வனபரிபாலன அதிகாரிகள் மீறியிருப்பது சாதாரண விடயமல்ல. இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
இதற்கு சிவில் நி;ர்வாகச்செயற்பாட்டு நெறிமுறைகளின் கீழ் தீர்வு காணப்பட வேண்டும். அல்லது நீதிமன்றத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் நீதியும் நியாயமும் தேடப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கின்ற அரச தரப்பினருடைய கபடத்தனமான நடவடிக்கைகள் தடுப்பார் எவருமின்றி தொடர்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. அத்தகைய நிலைமைகள் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.