ஸ்ரோபெரி பழத்தில் ஊசியை மறைத்து வைப்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஸ்ரோபெரி பழத்தில் மெல்லிய ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயல் எனவும் இந்தச் செயலைச் செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வகை செய்யப்படும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் (Scott Morrison) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் விற்பனையாகும் ஸ்ரோபெரி பழங்களில் மெல்லிய ஊசியை நுழைத்து விற்கப்படுவதாகவும் இவற்றினை வாங்கி உண்ட சிலருக்கு தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி பெரும் விமைங்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, ஸ்ரோபெரி பழம் சாப்பிடும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் ஸ்ரோபெரி பழங்களில் ஊசி வைக்கும் விவகாரம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ள நிலையலேயே பிரதமர் ஸ்காட் மோரிஸன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுவரை 20-க்கும் மேற்பட்ட பழங்களில் ஊசி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள் எனவும் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வழி செய்வோம் எனத் தெரிவித்துள்ள அவர் இந்தச் செயலால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஸ்ட்ராபெரி பழங்கள் பறிப்பதும், விற்பனை செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்துள்ளார்.