தமிழ் மக்களை கருவறுக்கும் மகாவலி அபிவிருத்தி!

ஓர் இனத்திலுள்ள மக்களை அழிப்பது மட்டும் இன அழிப்பன்று. அம்மக்களை இனமாகக்காட்டும் கூறுகளை அழிப்பதும் இனவழிப்பே. தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்களவர்களை குடியேற்றி தமிழர் பெரும்பான்மையை சீரழிக்க தென்னிலங்கை அரசாங்கம் காலத்திற்குக் காலம் செயற்பட்டுவருகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவினால் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியான அம்பாறையில் கல்லோயாவை மறித்த அணை கட்டி அதன் ஊடாக 40000 ஏக்கர் விவசாயக் காணிகள் உருவாக்கப்பட்டனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட நிலப்பரப்பில் 50 வீதத்திற்கும் அதிகமான சிங்கள் மக்கள் குடியேற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக புதிய 50 கிராமங்கள் உருவாக்கப்பட்டனன. அதன் பின்னர் படிப்படியாக தமிழ் மக்களின் வளமிகு நிலங்களை மாறி மாறிவந்த அரசாங்கங்கள் சிங்கள மக்களுக்கு வாரீ வழங்கின.

கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் சேருவல, கந்தளாய் போன்ற பல தமிழ் கிராமங்கள் மகாவலி அபிவிருத்திட்டம் என்ற பேரில் சூறையாடப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடு காரணமாக தமிழ் மக்கள் தமது செந்த நிலத்திலிருந்து வெளியேற்றபட்டு இன்று தமது பெரும்பான்மை பலத்தினை திருகோணமலையில் இழந்துள்ளனர்.

இவ்வாறு தமிழர் தாயகத்தில் அவர்களின் பெரும்பான்மை பலத்தை சிதை;து, அவர்களின் பேரம்பேசும் சக்தியினை நலிவடையச் செய்வதற்கான காரியங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றதன் விளைவாக விடுதலைப் போராட்டம் உருப்பெற்றது.

விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற காலங்களில் தமிழ் மக்களின் வளமிகு காணிகளை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருந்த அரசாங்கம், இன்று அவற்றை மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்க முற்படுகின்றது. 1948 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஆக்கிரமிப்பு 2018 இலும் தொடர்வது தான் தமிழ் மக்களின் துன்பியல் வரலாறு.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை நல்லாட்சியும் செய்து கொண்டிருக்கின்றது. வெளிநாடுகளின் கண்துடைப்பு இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள சில ஏக்கர் காணிகளை விடுவிடுத்துக் கொண்டு மறுபுறத்தில் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் கையகப்படுத்த முற்படுகின்றது.

மகாவலி அபிவிருத்தியைப் பொருத்தமட்டில் தமிழ் மக்களுக்கு எந்தவித இலாபமும் இல்லை மாறாக அவர்களின் வாழ்வில் சாபக்கேடாகவே இருக்கின்றது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மகாவலி எல் வலயம் தொடர்பில் விரிவாக ஆராய்வோம். தற்போது செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ள மகாவலி எல் வலயத்திட்டம் தமிழர் மீது நடாத்தப்படும் மற்றுமொரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாகும். மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது 1970 மாசி 28ம் திகதி உருவாக்கப்பட்டது. மகாவலி எல் வலயம் 1988 சித்திரை 15ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலமும் 2007 பங்குனி 09ம் திகதி எல்லைகளை விஸ்தரித்து இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் மூலமும் வெளியிடப்பட்டது.

இதனுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மட்டுமல்லாமல் மாங்குளம் வரை வியாபித்துள்ளது. 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் இராணுவத்தினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து, நாயாற்றுக்குத்தெற்கே தமிழ் மக்களின் எல்லைக்கிராமங்களான கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, ஆகிய ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு தமிழ் மக்களை வெளியேற்றி அரசாங்கம் சிங்களவர்கள் இல்லாத முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என அறியப்படும் தமிழ் மக்களின் 2000 ஏக்கருக்கு மேலான பாரம்பரிய நிலப் பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு, வெலிஓயா என மாற்றப்பட்டது. வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் சுமார் 3336 குடும்பங்களை 11189 சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்கள், யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த நிலங்களுக்கு சென்று குடியேறலாம் என்ற எண்ணத்தில் 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதிகளுக்குச் சென்ற போது, அவர்களின் நிலத்தில் பெரும்பான்மை இனத்தினர் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த, பயிர் செய்த, வாழ்வாதாரங்கள் பெற்ற தமது நிலங்களை பறிகொடுத்த நிலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதிலும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இதேவேளை கடந்த 1950, 1960, 1970 காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட இதே காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தமிழர்களிடம் இன்றும் உள்ளன. ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒப்பமிட்டப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் அவரின் பிரதிநிதியினால் மயில்குளம் (இப்போதைய பெயர் (மொனரவௌ) பகுதியில் வைத்து சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது வெலியோயா பிரதேச செயலாளர் பிரிவை மையப்படுத்தி வட மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லைகளை உள்ளடக்கிய வகையிலே மகாவலி எல் வலயத்திட்டம் அமைகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய பல நீர்ப்பாசனக்குளங்களான, இராமன் குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளாங்குளம் ஆகிய குளங்களை உள்ளடக்கி பாரிய நீர்ப்பாசனத்திட்டமாக இந்த எல் வலயம் எனப்படும் கிவுல் ஓயாத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
6000 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சக்கூடிய இந்த நீர்ப்பாசனத்தின் மூலம் 3000 சிங்களக் குடும்பங்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கும் கருத்து தமிழ் மக்கள் பெருமை அடையக்கூடிய அல்லது மகிழ்ச்சியடையக்கூடிய கருத்தல்ல. இதே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லையில் பாரியளவிலான சிங்களக் குடியேற்றத்தை உருவாக்கும் நோக்குடன் ‘கிபுல் ஓயா’ திட்டம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் வெள்ளைக்கல்லடி என்ற பகுதியில் சிங்கள மக்கள் குடியேற முயற்சித்த நிலையில் தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்பினால் அது நிறுத்தப்பட்டது.
அதேபோல் சிவந்தாமுறிப்பு என்ற பகுதியில் அண்மையில் சிங்கள மக்கள் கனகரக வாகனங்களுடன் வந்து குடியேற முயற்சித்த நிலையில் அதுவும் தமிழ் மக்களுடைய கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் மகாவலி அதிகாரசபை ஊடாக காணிகளை அபகரிப்பதற்கு மேலாக வனவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம் என பல வடிவங்களில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுடைய பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் 1988ஆம் ஆண்டு சித்திரை மாதம் 15ஆம் திகதி மகாவலி அதிகார சபையின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு பங்குனி மாதம் 09ஆம் திகதி மகாவலி அதிகார சபையின் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை செய்தவர் வேறு யாருமல்ல. இப்போதைய ஜனாதிபதியும் மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனாவே. இதன் ஊடாகவே முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களிலும், வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களிலும் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய தமிழ் கிராமங்கள் சிங்கள மயமாக்கப்பட்டது.

இரு போகங்களும் நெற் செய்கை நடந்த பல ஆயிரக் கணக்கான விவசாய நிலங்கள் சிங்கள மக்களுக்கு தாரைவார்க்கப்பட்டது. இதனால் அந்த நிலங்களுக்குச் சொந்தமான மக்கள் நிர்க்கதியாக நிற்கிறார்கள். இத்தனைக்கும் காரணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, தான் அடாத்தாக தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து குடியேற்றிய சிங்கள மக்களுக்கு நிதந்தரக் குடியிருப்புக்கான காணி உத்தரவுப் பத்திரங்களை இன்று வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறு மகாவலி எல் வலயத்திட்டம் அமைகின்ற போது முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட எல்லைகள் துண்டாடப்படுகின்ற போது, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டு, தமிழர் தாயகமான வடகிழக்கு மாகாணங்கள் தனிமைப்படுத்தப்படும்.  முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பெரும் பகுதிகள் மகாவலி அரசரணையின் கீழ் ஏற்கனவே மகாவலி எல் வயலத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் மகாவலி தனது நடவடிக்கைகளை மணலாறு பிரதேச செயலாளர் பிரிவோடு மட்டுப்படுத்தியிருந்துள்ளமை இதன் பாதிப்பை மேலும் வலுவாக்குகின்றது.

அண்மையில் கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 8 சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகாரசபையினால் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதனூடாக மகாவலி அதிகார சபையானது கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவினுள் தனது காணி அதிகாரத்தினை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகாவலி எல் வலய மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மகாவலி கே மற்றும் ஜெ வலயங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கும் வட மாகாணத்தின் சனத்தொகையை கட்டமைக்கப்பட்ட ரீதியில் மாற்றியமைப்பதற்குமான அரசின் முயற்சியாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். மேலும் தொல்லியல் திணைக்களம் திட்டமிட்ட வரலாறறுத் திரிபுகளை மேற்கொள்வதோடு தமிழர்களின் கலாசார மற்றும் சமய முக்கியத்துவம் மிக்க இடங்கள் பழைமை வாய்ந்த பௌத்த விகாரைகளாக உண்மைக்கு புறம்பாக பிரகடனப்படுத்தி வருகிறது. செம்மலை நீராவி பிள்ளையார் ஆலய பழைமை வாய்ந்த பௌத்த விகாரையாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை அண்மைய உதாரணமாகும்.

இவ்வாறு பல்வேறுவிதமான முல்லைத்தீவு மக்களுக்கு பாதிப்புக்களை கொடுத்துவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி, தமிழ் மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள், மதகுருமார், சிவில் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் ஒன்று கூடி கடந்த ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது மகாவலி எல் வலய அபிவிருத்தியினை உடனடியாக கைவிடுவதுடன், ஏற்கனவே சிங்கள மீனவர்களினால் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள கொக்குளாய் கடற்பகுதியினை விடுவிக்குமாறும், ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.  தமிழ் மக்களின் வாக்குகளில் ஆட்சியமைத்துக் கொண்;ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் வாழ்க்கை அவர்களின் எதிர்கால வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதே அவர் தமிழ் மக்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.

மேலும் அரசாங்கம் மகாவலி எல் வலய அபிவிருத்தியினைக் கைவிட்டு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழ் அரசியல்த் தரப்பினர்கள் சகல பேதங்களையும் கடந்து ஓரணியாக நின்று செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் ஏகோபித்த குரல் எழுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.

பா.யூட்