நாயகர்களை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதே கடினம் என நடிகை ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார். ஜோதிகா நடிப்பில் அடுத்ததாக செக்கச் சிவந்த வானம் திரைக்கு வரவுள்ளது. தொடர்ந்து ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி படம் வெளியாகவுள்ளது.
திருமணத்துக்குப் பிறகான தனது திரை வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ள ஜோதிகா, நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்கள், அதில் நடிக்கும் நாயகிகளிடையே போட்டியிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
நாங்கள் அனைவரும் இதில் ஒன்றாகத்தான் இருக்கிறோம். குறிப்பாக நான், சிம்ரன் மற்றும் நயன்தாரா. திரைப்படம் எடுக்க நாயகர்களுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் எங்களுக்கு ஒரு இசையமைப்பாளர் கிடைப்பது கூட கடினம். பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில், தயாரிப்புக்கு முன்பே, நிறைய விஷயங்களை செய்யக் கூடாது, என்ற நிர்பந்தங்களை சந்திக்க வேண்டும்.
நாங்கள் மசாலா காட்சிகளில் நடிக்க முடியாது, மதுக்கடை காட்சிகளில் நடிக்க முடியாது, குழந்தைகள் பிறந்திருந்தாலும் குண்டாக இருக்கக் கூடாது, எங்களை விட வயதில் இளையவர்களுடன் காதல் காட்சிகளில் நடிக்கக் கூடாது. வியாபார ரீதியாக நிச்சயமாக சில விஷயங்கள் ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது. அது அப்படி இருப்பதும் ஒருவகையில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் வியாபாரத்துக்காக படத்தில் நாங்கள் சேர்க்கக் கூடிய விஷயங்கள் வெகு சிலதே இருக்கும். அப்படியென்றால் வெற்றி பெற ஒரே வழி, நல்லக் கதையில் சிறப்பான நடிப்பைத் தருவது தான் என்று ஜோதிகா கூறியுள்ளார்.