தென்னிந்திய நலச் சங்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என வெகுமக்களுக்கு எதிராக அடர்த்தியான தத்துவச் செறிவைக் கொண்ட இயக்கங்களின் வழியாகத் தன்னை வார்த்துக் கொண்டவர் அண்ணா. ஆனால், வெகுமக்களின் உளவியலில் தவிர்க்க முடியாத பேரியக்கமாக இன்று வரை வேரூன்றிப் படர்ந்திருக்கும் திமுக என்ற கட்சியைத் தொடங்கிய இடத்தில்தான், அண்ணா என்ற அரசியல் ஆளுமை தமிழகம் பயணிக்க வேண்டிய எதிர்காலத் திக்கைச் சுட்டிக்காட்டும் பேருருவாக வசீகரம் பெற்று எழுந்து நிற்கிறது.
தந்தையின் பாதையிலிருந்து விலகாத தனயனாகவே தனது அரசியலின் அடுத்த கட்டத்தை அவர் தொடர்ந்தாலும், எதிர்காலப் பயணத்துக்கு ஏற்றவாறு தத்துவார்த்த வழியைத் தகவமைத்ததுதான் அண்ணா புரிந்த அரசியல் சாகசம். அவரால் தொடங்கப்பட்ட திமுகதான் தமிழ்ச் சமூகத்தின் அடித்தட்டு மக்களும் அதிகார மையத்தின் அருகில் செல்வதற்கும் திரளாக அதில் பங்கெடுப்பதற்குமான பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டது.
ஒருவேளை, திராவிட இயக்கத்தின் வேலைத் திட்டத்தையும், இயங்கு திசையையும் இப்படிச் சற்றே திருத்தி அமைக்காமல் போயிருந்தால், தமிழகத்தின் பிற்காலம் வேறு மாதிரியாகக்கூட இருந்திருக்கலாம்.
காலத்துக்கேற்ற வியூகம்
50-களில் அறவழியில் தொடங்கப்பட்ட ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம், காலப்போக்கில் எத்தகைய மாற்றங்களையும், சிக்கல்களையும் எதிர்கொண்டது என்பதை நாம் அறிவோம். தமிழகத்தைப் பொறுத்தவரை, அண்ணாவின் தீர்க்க தரிசனம், அதன் அரசியலைக் காலத்துக்கேற்றவாறு வடிவமைத்தது.
காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த மூன்றாம் உலகச் சூழல் என்பது, அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் கையில் அதிகாரம் கை மாறிய தருணமாகும். அத்தகைய சூழலில் தேசிய இன அடிப்படையிலான போராட்டங்கள், வல்லாதிக்கத்துக்கு எதிரான குரல்கள் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் கடுமையான ஒடுக்குமுறையைச் சந்தித்தன. இந்தப் போக்குக்கு வியட்நாம் சந்தித்த நெருக்கடிகளையே உதாரணமாகக் கொள்ளலாம்.
சர்வதேச அளவில் அப்போது நடைபெற்று வந்த இத்தகைய ‘போரழிவு’களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்த அண்ணா, தனது மக்களுக்கும், மண்ணுக்குமான அரசியலை மிக லாகவமாக வடிவமைக்கத் திட்டமிட்டதன் விளைவுதான், திராவிட நாடு கோரிக்கையில் ஏற்பட்ட திருத்தமும், திராவிட இயக்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமும். மூன்றாம் உலகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் வடிவமாகப் பரவலாகி நிலைபெறத் தொடங்கிய, ஜனநாயகக் கூட்டாட்சி அமைப்புக்குள் ஊடுருவி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே, காலத்துக்கு ஏற்ற அரசியல் போராட்ட நகர்வாக இருக்கும் என அண்ணா தீர்மானித்தார்.
மக்களின் ஆதரவோடு…
எந்த ஓர் உரிமைப் போராட்டமும் காலத்துக்கேற்ற வடிவத்தில் முன்னெடுக்கப்படும்போது, அது மக்களின் ஆதரவைப் பெறுவது மட்டுமின்றி, அடையும் வெற்றியும் வேறொரு பரிமாணத்தைக் கொண்டதாக இருக்கும். சுதந்திர தினத்தை பெரியார் துக்கநாள் என்று அறிவித்தபோது, அதனால் வெகுமக்கள் நம் மீது வெறுப்பு கொள்வார்கள் என்பது அண்ணாவின் கருத்தாக இருந்தது. அதேபோல், கட்சித் தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்ற கருத்திலும் அவர் முரண்பட்டுள்ளார். கருப்பு என்பது வெகுமக்களை நாம் நெருங்குவதற்கும், நம்முடைய கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கும் தடையாக இருக்கும் எனக் கருதியுள்ளார்.
அதேபோல் ‘திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த இயக்கத்துக்கு, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என ‘ர்’ விகுதியைத் தவிர்த்துவிட்டு ஏன் பெயர் வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு அண்ணா கூறிய விளக்கம் முக்கியமானது. இந்த மண்ணுக்கு நன்றியுள்ளவர்களாக நடந்துகொள்ளும் எந்த இனத்தவரும் இன்ப வாழ்வு வாழப் பணியாற்றுவதே கட்சியின் லட்சியம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். இத்தகைய அரசியல் தகவமைப்புகளின் மூலமாக, இந்தி எதிர்ப்பு என்ற முழக்கத்துடன், தமிழ்ச் சமூகத்தின் மனப் பரப்பு முழுவதும் கிளர்ந்தெழுந்த தேசிய இன உணர்ச்சியை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஜனநாயக பேரரசியல் வடிவமாக உருமாற்றியிருக்கிறார் அண்ணா.
சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது தொடங்கி, சடங்கு மறுப்புத் திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம், 69% இட ஒதுக்கீடு வரையிலான பல்வேறு சாதனைகளை, இத்தகைய கூட்டாட்சி அமைப்பின் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலமாகத்தான் தமிழர்கள் பெற முடிந்தது. மதம், சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வு என எல்லாமே கலந்துகட்டி இறுகிய மிகச் சிக்கலான சமூகத்தை அரசியல்படுத்துவது அத்தனை எளிதல்ல. அதனை சண்டமாருதமாகச் சவுக்கடி கொடுக்கும் வேகத்தில் பெரியார் மேற்கொண்டார் என்றால், தவழும் தென்றலாக எதிரிகளையும் தன் வசப்படுத்தும் தன்மையான அரசியலை அண்ணா கையிலெடுத்திருக்கிறார். இனவழி உரிமைப் போராட்டத்தை, வீழ்த்த முடியாத அரசியல் அதிகார வலிமை பெற்ற ஜனநாயகப் பேராற்றல் கொண்ட அமைப்பாக மாற்றிய சாதனையை அண்ணா நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஜனநாயகத்தை நேசிக்கும் எவராலும் அண்ணாவை வெறுக்கவும் முடியாது.. ஒதுக்கவும் இயலாது.
செப்டம்பர் 15 – அண்ணா பிறந்தநாள்
செப்டம்பர் 17- பெரியார் பிறந்தநாள்