கல்குடாவில் எத்தனோல் மதுபான தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் அக்டொபர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
நான்காவது சாட்சியான ஏறாவூர் பொலிஸார் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்றும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
குறித்த தொழிற்சாலைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, மார்ச் மாதம் 21ஆம் திகதி மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளர்களான புண்ணியமூர்த்தி சசிகரன், நல்லதம்பி நித்தியானந்தன், ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.
மதுபானசாலை உற்பத்திச் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இடத்திலிருந்த சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்கியுள்ளதுடன், சுமார் 6 கிலோமீற்றர் வரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.