கட்டாய தடுப்புக்காவலில் உள்ள மூவர்: அவுஸ்திரேலியாவுக்கு ஐ.நா. கண்டனம்!

அவுஸ்திரேலியாவில் சட்டத்துக்கு முரணான வகையில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான கட்டாயத்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று புகலிடக்கோரிக்கையாளர்களது விடுதலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பொன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் “UN working group on arbitrary detention -சட்டத்துக்கு முரணான தடுப்புக்காவல்களை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு” இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

பல்வேறு நாடுகளிலும் உள்ள தடுப்புக்காவல்களில் அந்நாட்டு அரசாங்கங்கள் இவ்வாறு சட்டத்துக்கு முரணான வகையில் – நீண்ட காலமாக – தடுப்புக்காவலில் வைத்திருக்கும் 94 பேர் சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த அமைப்பு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.இந்த அறிக்கையில், அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள மூன்று பேர் தொடர்பாகவும் தனது கரிசனையை வெளியிட்டு அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள மூவரில் ஒருவர் ஒன்பது வருடங்களாக எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்று அந்த அமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசு இந்த மூவரின் தடுப்புக்காவல் தொடர்பாக கரிசனை கொண்ட அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு எந்தப்பதிலும் வழங்கவில்லை, சட்டவிரோமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள மூவரையும் விடுதலை செய்து அவர்களுக்கான நட்டஈட்டை வழங்குமாறு விடுத்த கோரிக்கைகளுக்கும் பதில் கொடுக்கவில்லை என்பதையும் மேற்படி அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

குடிவரவுக்கொள்கைகளை நடைமுறைத்துவதற்காக சட்டத்துக்கு முரணான தடுப்புக்காவலை புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஏவிவிடுவது தற்போது உலகளாவிய ரீதியில் அதிகரித்துவருகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ள  UN working group on arbitrary detention அமைப்பு அதனைக் கண்டித்துள்ளது.

Source – SBS Tamil