“கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்ற உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வு ஒன்றினை முன்வைத்துப் பெற முயற்சிப்பது” என்று தனக்கு இருக்கக்கூடிய நான்கு தெரிவுகளில் நான்காவதாக இத்தெரிவை திரு.விக்னேஸ்வரன் முன்வைத்தார்.
இதுவே தனது அரசியல் பயணத்திற்கான தெரிவென்றும் பிரகடனப்படுத்தினார். மேற்படி தனது நிலைப்பாட்டை கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
தளபதிகளும், பிரதானிகளும் குதிரை ஏற்றம் செய்ய முடியாது தோல்வியடைந்திலுந்தனர் இதை அவதானித்த சிறுவனான அலெக்சாண்டர் தான் முன் சென்று அக்குதிரையில் ஏறி அதில் சவாரி செய்யப் புறப்பட்டார்.
இதைக் கண்ட அவனது தாய் அச்சமுற்ற போதிலும் அந்த சிறுவன் மிக லாவகமாக குதிரையில் ஏறி அதில் சிறப்பாக சவாரி செய்தார். பெரும் வீரர்கள் சறுக்கி விழுந்த குதிரையில் அலெக்சாண்டரால் சவாரி செய்ய முடிந்தமைக்குக் காரணம் அந்த குதிரையை அடக்குவதற்கான மூலோபாயத்தை அவன் கண்டுபிடித்தமைதான்.
சூரியனின் எதிர்த்திசையில் குதிரையின் முகம் இருந்த நிலையில் அக்குதிரையில் ஏறுபவனின் நிழலைக் கண்டு அக்குதிரை அஞ்சி குதிரை ஏற்றத்தில் ஈடுபட்டவனை அது திமிறி வீழ்த்தியது. இதனை அவதானித்த சிறுவன் அலெக்சாண்டர் குதிரையின் முகத்தை சூரியனின் திசைநோக்கி திருப்பிவிட்டு மிக இலவகமாக ஏறி அவர் சவாரி செய்ததைக் கண்டு அரண்மனை பரிவாரமே வியப்புற்றது.
கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ்த் தலைவர்கள் சிங்கள இனவாதக் குதிரையை அடக்கி சவாரி செய்ய எடுத்த முயற்சியில் அனைத்து தமிழ்த் தலைவர்களுமே வீழ்ந்து மூச்சை உற்றனர்.
இராமநாதன் – அருணாசலம் தொடக்கம், சம்பந்தன் – சேனாதி வரை அனைத்து தலைவர்களுமே குதிரையேற்றத்தில் வீழ்ந்துவிட்டனர். பிரபுக்கள், தளபதிகள், மாபெரும் வீரர்கள் என அனைவரும் சறுக்கி வீழ்ந்த குதிரையில் இறுதியாக ஏறிய சக்கடத்தார்கள் சம்பந்தனும் – சேனாதியும் சறுக்கி வீழ்ந்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது அந்த குதிரையை அடக்கி சவாரி செய்ய தமிழ் மக்கள் பேரவைத் தலைவர்கள் முன்வந்துள்ளனர்.
ஒருபோதும் இது ஓர் இலகுவான காரியமல்ல. சிங்களக் குதிரை மிகவும் தந்திரமானதும், பலம்வாய்ந்ததும், வெற்றியை இறுதியில் ஈட்டுவதில் கைதேர்ந்ததுமாகும்.
சிங்களக் குதிரை வீழ்த்தியது தமிழ்த் தலைவர்களை மட்டுமல்ல கூடவே பிரம்மாண்டமான இந்திய அரசையும் அந்த சிங்களக் குதிரை வீழ்த்தியுள்ளது.
குறிப்பாக சாணக்கிய சக்கரத்தை ஜெவர்த்தன தன் சுண்டு விரலால் சுண்டி இந்து மாகடலின் அடி ஆழத்தில் புதைத்துவிட்டார்.
சிங்கள அரசியலைப் பொறுத்தவரையில் இந்தியா அவர்களின் நிரந்தர எதிரி. ஆனால் அதை கண்டபடி எதிர்கொள்ள முடியாது என்றும் இராஜதந்திர பொறியில் அதனை அகப்படுத்தி அதை வெற்றி கொள்ள வேண்டுமென்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள்.
இந்தியாவும் – ஈழத் தமிழர்களும் பாரம்பரிய நண்பர்கள். ஆனால் இந்த நண்பர்களை பகைவர்களாக்கி தனது நிரந்தர எதிரியான இந்தியாவை தற்காலிக நண்பனாக்கி இந்தியாவையும், ஈழத் தமிழர்களையும் தோற்கடிக்கும் வித்தையை ஒரு சிறிய நாட்டின் தலைவன் ஜெயவர்த்தன வெற்றிகரமாக அரங்கேற்றினார்.
இந்தியாவால் புலிகளுக்கு அடித்தார் புலிகளால் இந்தியாவுக்கு அடித்தார். இதில் இரண்டு தருணத்திலும் இந்தியாவும் சேதமுற்றது, புலிகளும்; சேதமுற்றனர். இதன் இறுதி விளைவு ஈழத் தமிழர் – இந்திய பகைமை வரலாற்றில் உருவெடுக்க வழிவகுத்தது.
எனவே ஈழத் தமிழ்த் தலைவர்களை தொடர்ந்து ஒரு நூற்றாண்டாக இறுதி அர்த்தத்தில் இதுவரை தோற்கடித்துவருவதும் பெரிய இந்திய அரசை தோற்கடித்தும் வருவதில் தனது இராஜதந்திர சாதனையை நிலைநாட்டி வரும் சிங்கத் தலைவர்களை இலகுவில் தமிழ்த் தலைவர்களால் எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி முக்கியமானது.
இந்நிலையில் திரு.விக்கேனஸ்வரனால் இந்த சிங்களக் குதிரையேற்றத்தை எவ்வளவு தூரம் வெற்றிகரமாக சாதிக்க முடியும்? சாதிப்பதற்கான மார்க்கம் அலெக்காண்டர் போல குதிரையை மடக்குவதற்கான மூலோபாயத்தை கண்டுபிடிப்பதிலேயே அடங்கியுள்ளது.
இதனை வெறும் தேர்தல் அரசியலால் கற்பனை செய்து கொள்ள முடியாது. ஆனால் தேர்தல் களத்தை இதற்காக செம்மையாக பயன்படுத்த வேண்டுமென்பதும் தவிர்க்க முடியாது.
நிகரற்ற வீரம், அளவற்ற தியாகம் ஆகிய இரண்டையும் மீறி மலையென குவிந்தன தோல்விகள்.
சிங்களத் தலைவர்களிடம் ஒரு நூற்றாண்டுகால தமிழ் அரசியலின் தோல்வி எல்லாவிதமான பெருமைகளையும்விட ஆழமான வடுவைக் கொண்டதாக காணப்படுகிறது. இந்த வடுவில் இருந்து தமிழ் மக்களை எப்படி மீட்பது?
ஓர் இலகுவான கேள்வியை நாம் எப்போதும் கேட்கத் தவறுகிறோம். ஏன் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக இறுதி அர்த்தத்தில் நாம் தோல்வி அடைகிறோம் என்பதே அந்த கேள்வி.
“காலில் கல் அடித்துவிட்டதென்று”
இலகுவாக கூறும் கூற்று ஒன்று உண்டு. கால் கல்லில் மோதியுள்ளது என்ற மறுபக்கத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
ஆறு ஓடும், கடல் அலையெழுப்பும் அது அது தன் தொழிலை தன் விதியில் செய்யும். அலையைத் தாண்டி வள்ளத்தை ஓட்ட வேண்டியது ஓட்டியின் பொறுப்பு.
சிங்கள இனவாதம் எப்போதும் தமிழின அழிப்பை தன் தொழிலாகக் கொண்டது. அதை எதிர்கொண்டு தம்மை நிலைநாட்ட வேண்டியது தமிழரின் பொறுப்பு.
சிங்களத் தலைவர்கள் தமிழர்களை இன அழிப்பு செய்வதற்கு எத்தகைய வெளிநாடுகளுடனும் அந்த கால நேரத்திற்குப் பொருத்தமாக எவரையும்
நண்பராக அணைத்து தம் காரியத்தை சாதித்துவிடுவார்கள். ராஜபக்ஷ அரசாங்கம் அமெரிக்காவுடனும் உறவு கொண்டது. அமெரிக்காவின் எதிரியான ஈரானுடனும் உறவு கொண்டது.
இந்தியாவுடனும் உறவு கொண்டது. இந்தியாவின் எதிரிகளான சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் உறவு கொண்டது. தனக்கு பிடிக்காத நாடுகளுடனும்கூட காலபோக நட்பை ஏற்படுத்தி ஒன்று திரண்ட உலக ஆதரவுடன் இனப்படுகொலைக்கான அரசியல் ஏற்பாட்டை செய்வதில் வெற்றி பெற்றார்கள்.
தமிழ்த் தரப்பில் நட்பு நாடு என்ற ஒன்றுக்கே இடமில்லாமல் தமது இராஜதந்திர காய் நகர்த்தல்களை மேற்கொண்டு புலிகளையும், தமிழரையும் உலகரங்கில் தனிமைப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றினார்கள்.
இராணுவ அர்த்தத்தில் அதற்கான போர்முறை நெறிமுறைகளுக்கு உட்பட்ட வீரத்தின்பால்பட்ட வெற்றியல்ல. அது இனப்படுகொலையின்பால்பட்ட வெற்றி. இனப்படுகொலையால் அனைத்துவகை நகர்வுகளையும் முடக்கி இடப்பெயர்வால் மக்களை நிர்க்கதியாக்கி அந்த மக்கள் சுமையால் புலிகளுக்கு போடப்பட்ட பூட்டின் வாயிலாகவே அவர்கள் இறுதி வெற்றி அடைந்தார்கள்.
இறுதி யுத்ததத்தில் 5200 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளார்கள். 12,000 சிப்பாய்கள் போர்புரியமுடியாதவாறு களத்தில் இருந்து அகற்றப்பட்டார்கள்.
இந்த வகையில் பார்த்தால் இராணுவ ரீதியில் இலங்கை அரசுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் இனப்படுகொலையினால் அனைத்தையும் செயலற்றதாக்கி, அதன் வாயிலாக புலிகளையும் முடக்கி தமக்கான வெற்றியை பெற்றுக் கொண்டார்கள்.
இது இனப்படுகொலையின் வெற்றியேதவிர இராணுவ போர்முறையின் வெற்றியல்ல.
ஆனால் இத்தகைய இனப்படுகொலை புரிவதற்கான சர்வதேச அரசியலை சிங்களத் தலைவர்கள் வெற்றிகரமாக செய்தார்கள்.
தமக்கு பொருத்தமான, புலிகளுக்கு பாதகமான சர்வதேச வியூகத்தை பல சிங்கள இராஜதந்திர அணியினரின் மூளைப் பலத்துடன் வகுத்து
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொமுது” (குறள.;481)
என்பதற்கேற்ப தக்க தருணத்தில் அவர்கள் யுத்தத்தை புரிந்து இனப்படுகொலை வாயிலாக வெற்றி பெற்றார்கள்.
இந்த சர்வதேச வியூகந்தான் அவர்களது இனப்படுகொலைக்கான தளமாக அமைந்தது.
எனவே இனப்படுகொலையையும், சர்வதேச வியூகத்தையும் பிரித்து நோக்க முடியாது. தமிழ் மக்களின் தரப்பில் இனியும் கவனிக்கப்பட வேண்டியிருப்பது சர்வதேச அரசியல் பற்றிய இத்தகைய மூலோபாயமாகும்.
முள்ளிவாய்க்கால் பெரும் துயரினதும், பேரிழப்பினதும் பின்பு தமிழ் மக்கள் தமக்கான மீட்பர்களாக சம்பந்தன் – சேனாதி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பினர்.
எப்போதும் ஏகத் தலைமையை தமிழ்த் தலைவர்களுக்கு வழங்கும் தமிழ் அரசியல் பாரம்பரியமானது இம்முறை சம்பந்தனுக்கு ஏகத் தலைமையை வழங்கியது.
எக்காலத்திலும் தமிழ் மக்கள் தமிழ்த் தலைவர்களுக்கு ஏகத் தலைமையை வழங்கியுள்ளார்கள். அந்த வழியில் சம்பந்தனும் ஏகத் தலைவரானார்.
இனப்படுகொலையால் அவமானப்பட்டிருந்த இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகளை ஒடுக்குகின்றது என்பதும் அதேவேளை உலக அரங்கில் மெய்ப்பிக்கப்பட்டிருந்த காலமே சம்பந்தன் தலைமையேற்ற காலமாகும்.
எனவே முற்றிலும் சாதகமான சர்வதேச சூழல் உலக அரங்கில் விரிந்திருந்தது. சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் காணப்பட்ட விடுதலை அமைப்புக்களை, கூடவே பிரச்சினைக்குரிய நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற நாட்டு அரசுகளை வீழ்த்தும் நிலை சர்வதேச அரங்கில் தலையெடுத்திருந்த காலத்தில் துனிஷியாவில் மக்கள் போராட்டத்தின் மூலமும், தமிழ் நாட்டில் மக்கள் ஆதரவுடன் இணைந்த ஜல்லிக்கட்டுக்கான இளைஞர் போராட்டமும் வெற்றி பெற்ற உதாரணங்களை வரலாறு படைத்திருந்தது.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய நேரடிப் போராட்டங்களை புறந்தள்ளி பச்சைச் கிளிகளாய் மாறி பச்சைக் கூட்டுக்குள் புகுந்தனர்.
இதன் மூலம் தங்கள் பச்சை எஜமானர்கள் கூறும் பச்சை பொய்களை கிளிப்பிள்ளை பாடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழ் மக்களிடம் கூறினர்.
ஆனால் கிளிப்பிள்ளைகளின் பொய் ஒருமாதம், இரண்டு மாதம், ஒருவருடம், இரண்டு வருடமென காலங்களை கடத்தும் போது மக்கள் பச்சைக் கிளியாய் மாறி தலைவர்களை நம்ப மறுத்தனர்.
அவர்கள் நிறம்மாறிய பறவைகளான நிலையில் கினிக்கோழியென விக்னேஸ்வரன் எழுந்தார். குயில்கள் பருவகாலத்திற்கே கூவும். சேவல் காலையிற்தான் கூவும். கினிக்கோழி காலநேரம் பாராமல் எதிரிகளைக் காணும் எல்லா வேளைகளிலும் கூவும்.
இப்போது பச்சைக்கிளிகளோடு நிறம்மாறாத இந்தக் கினிக்கோழி என்ன செய்யப் போகிறது,
அதனால் என்ன செய்ய முடியும் என்பதை அறிவுபூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.
தமிழ் மக்களின் மேற்படி அரசியல் பாரம்பரியத்தின் கீழ் பலமான இராஜதந்திர கட்டமைப்புக்கள் கிடையாது. அறிஞர் படை கிடையாது.
ஆனால் ஓடுகாலி அரசியல்வாதிகளுக்கு மட்டும் குறைவில்லை. இந்நிலையில் விக்னேஸ்வரனால் அதிகம் சாதிக்க முடியும் என்று கற்பனை செய்ய வேண்டியதில்லை.
ஆனால் அவர்தான் இன்றைய நிலையில் கொழு கொம்பாய் காட்சியளிக்கிறார். அவர் முன்வைத்திருக்கும் தேசிய இயக்க அரசியல் என்பது கவனத்திற்குரியது.
மாபெரும் தமிழ்த் தேசிய இயக்கத்தை உருவாக்குவதன் மூலமே தமிழ் மக்கள் தம்மை மீட்பதற்கான கோட்டை வாசலைத் திறக்கலாம்.
அநேகமாக அனைத்தையுமே ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. அவற்றிற்கெல்லாம் ஈடுகொடுப்பதற்கு மிகப்பெரும் ஆளுமை தேவை.
முதலில் தமிழ் மக்கள் மத்தியில் தடைக்கல்லாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்கொள்ளவதற்கான உபாயத்தை வகுக்க வேண்டும்.
ஒரு மாபெரும் தேசிய இயக்கத்தின் எழுச்சியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புயலென அடித்துச் செல்ல முடியும். அதற்கான தமிழ்த் தேசியச் சிந்தனையை வகுப்பதற்கு மிக ஆழமான அறிவியல் பலமும், பிரச்சார ஊடகங்களும் தேவை. ஊர் கூடித் தேர் இழுப்பது போல, ஒரு பரந்த அணியை உருவாக்குவதன் மூலமே இதனை சாதிக்க முடியும்.
பரந்த அணியை உருவாக்குவதற்கென ஆழமான அறிவும், பரந்த மனப்பாங்கும், துல்லியமாக தீர்மானம் எடுக்கும் இயல்பும், சளையா மனமும், அயராத உழைப்பும் அவசியமானவை.
இவற்றையெல்லாம் அரவணைத்து செல்லவல்ல தலைவர் எவரோ, சர்வதேச அரசியலுக்கு காலம், இடம் என்பனவற்றிற்கு பொருத்தமாக ஈடுகொடுக்கவல்ல
தலைவர் எவரோ, தமிழ் பண்பாட்டின் சின்னமாக விளங்கவல்லவர் எவரோ அவரே தலைமைதாங்க முடியும்.
மு.திருநாவுக்கரசு
நன்றி : தினக்குரல்