மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாமில் தங்கியிருந்த அகதி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த அகதியின் குடும்பத்தினர் அவுஸ்திரேலிய அரசுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வயதான ஈராக் பின்னணி கொண்ட Saruuan Aljhelie, பெர்த்திற்கு கிழக்காக அமைந்திருக்கும் Yongah Hill குடிவரவு தடுப்பு முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டநிலையில், கடந்த 2ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களின் பின் உயிரிழந்தார். சிட்னி விலவூட் தடுப்பு முகாமிலிருந்து Yongah Hill முகாமுக்கு மாற்றப்பட்டு சில வாரங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் Saruuan Aljhelie-இன் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததை சற்றும் கவனத்தில் எடுக்காத குடிவரவு தடுப்பு முகாம் ஊழியர்கள் அவரை தகாத முறையில் நடத்தியதுடன் தமது கடமையிலிருந்து தவறியுள்ளதாகவும் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், Saruuan Aljhelie-இன் மரணத்திற்குப் பொறுப்பான அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.