ஹபீஸ் சயீத்தின் ஜேயூடி இயக்கம் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத், ஜே.யூ.டி என்ற அமைப்பையும் அந்த அமைப்பு மூலமாக தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பலாஹி இன்சனியாத் பவுண்டேஷன் (FIF) என்ற அமைப்பையும் நடத்தி வந்தார்.
ஐக்கிய நாடுகள் அவையின் தடைப்பட்டியலிலும் உள்ள ஹபீஸ் சயீத்தின் இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு அண்மையில் தடை விதித்தது. தனிநபர்கள், நிறுவனம் என யாரும் அந்த நிறுவனத்துக்கு நிதி உதவி செய்யவும் பாகிஸ்தான் அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
பாகிஸ்தான் அரசின் தடையை எதிர்த்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில், ஹபீஸ் சயீத் தரப்பு முறையீட்டது. இந்த முறையீட்டை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், ஹபீஸ் சயீத்தின் அமைப்புகள் சமூக பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி அளித்து உத்தரவிட்டது.
லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவு பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு எதிராக இருந்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, ஹபீஸ் சயீத்தின் இயக்கம் சமூக பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal