7 பேர் விடுதலை சாத்தியம் ஆகுமா?” என்ன சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்?

28 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர்கள் விடுதலைக் குறித்த இறுதிமுடிவு தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 7 பேர் விடுதலைக்குப் பெருமளவு ஆதரவு இருந்தாலும் ஒருபுறம் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கூறியது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்திலும் 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

இம்முறையும் விடுதலை மறுக்கப்படுமா அல்லது விடுதலை செய்வார்களா என்பது பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற கேள்வி. 28 ஆண்டுக்காலம் சிறையில் இருந்தவர்கள் விடுதலைக் குறித்த இறுதிமுடிவு தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இவர்களின் விடுதலைக்குப் பெருமளவு ஆதரவு இருந்தாலும், ஒருபுறம் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன. இதுகுறித்து சிலரிடம் பேசியபோது..

ஹென்றி டிபேன்;

ஹென்றி டிபேன், ஏழு பேர் விடுதலை“7 பேரும் தவறு செய்தவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். 28 ஆண்டுக்காலம் சிறையில் இருந்தவர்களை சிறை வாழ்க்கை திருத்தியிருக்காதா?. சிறையில் ஒருவர் அடைக்கப்படுவதே தண்டனை என்பதைத் தாண்டி மறுவாழ்வுக்கு அவர்களைத் தயார் செய்வதுதானே. அதை போதும், போதும் என்கிற அளவுக்கு இவர்கள் பெற்றுவிட்டார்கள். இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றம் சார்ந்து இருக்கிற சிக்கல்கள், மாற்றுக் கருத்துகள் ஆகியவை சட்டரீதியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களின் விடுதலையை எதிர்ப்பவர்கள் எப்போதாவது அதற்குப் பதில் கூறியிருக்கிறார்களா?. நீண்டநாள்களுக்குப் பிறகு முறையாக ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கிறது. அரசாங்க நடைமுறைகள் 7 பேருக்குச் சாதகமாகப் போய்க் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் தயவுசெய்து இதில் அரசியல் செய்யாதீர்கள். ஏற்கெனவே, இவர்கள் விடுதலையில் அரசியல் செய்து நீண்டகாலம் அவர்களைச் சிறையில் இருக்க வைத்துவிட்டீர்கள். 7 பேரின் குடும்பமும் பல கனவுகளுடன் காத்திருக்கின்றன.”

கோபண்ணா;

“முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் `கொலைக் குற்றவாளிகள்’ என 7 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமராக ராஜீவ்காந்தி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக அவரைக் கொல்ல வேண்டுமென விடுதலைப் புலிகள் தீட்டிய சதித் திட்டத்தின் காரணமாகத் தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். இதன்மூலம் நூறு கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் இறையாண்மையையே அச்சுறுத்தினர்.

கோபண்ணாஇதில் தண்டிக்கப்பட்டவர்கள் 25 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதால், விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் விடுத்துள்ளன. இவர்களை விடுவிப்பதற்குக் காட்டுகிற அக்கறை இதேபோல கொலைக் குற்றம் செய்து சிறையில் இருக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் காட்டப்படுமா? இவர்களை விடுவிக்கும் போது இதேபோல சிறையிலிருக்கும் மற்றவர்களையும் விடுவிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் ஏன் கோரவில்லை?. ஆனால், `நாங்கள் நிரபராதிகள், ராஜீவ்காந்தி கொலைக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, நாங்கள் அப்பாவிகள்’ என்று கூறுவது என்ன நியாயம்.

உச்சநீதிமன்றத்தாலே தண்டிக்கப்பட்ட பிறகு நிரபராதிகள் என்று கூறுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும். இதை நியாயப்படுத்திப் பேசுபவர்கள் என்ன சூப்பர் நீதிபதிகளா. இதைவிட நீதிமன்ற அவமதிப்பு வேறு உண்டா. ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குக் காட்டுகிற கனிவை மற்ற குற்றவாளிகள் விஷயத்தில் ஏன் காட்டவில்லை. 7 பேருக்குக் காட்டுகிற பரிவு ராஜீவ்காந்தியோடு கொல்லப்பட்ட 18 பேரின் குடும்பத்தினருக்கு ஏன் காட்டப்படவில்லை. 7 பேர் தமிழர்கள் என்றால் 18 பேர் தமிழர்கள் இல்லையா. தமிழ் மக்களை அதிகமாக நேசித்தவர் ராஜீவ்காந்தி. அதேபோல, தமிழ் மக்களும் ராஜீவ்காந்தியை மிகவும் நேசித்தார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக ஒப்பந்தம் போட்டு உரிமைகளைப் பெற்றுத் தந்த ராஜீவ்காந்தியை படுகொலை செய்த பாவத்தைச் செய்தவர்களுக்குப் பரிந்து பேசலாமா. இப்படிப் பேசுவது மனுநீதிச் சோழன் வழிவந்த தமிழர் பண்பாடா.

நீண்டகாலமாகச் சிறையில் இருப்பதால் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டு விடுவிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. பழி வாங்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. கருணை மனுவை 11 ஆண்டுக்காலம் முடிவெடுக்காமல் காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போட்டதால்தான் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. சட்டமும், நீதிமன்றமும் என்ன முடிவெடுக்கிறதோ, அதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும்.”

ஹரி பரந்தாமன் (ஓய்வுபெற்ற நீதிபதி):

“தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஒருவரை விடுதலை செய்ய அரசுக்கு இரண்டுவிதமான அதிகாரங்கள் உள்ளன. ஒன்று, குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கும் அதிகாரம். அச்சட்டத்தின்படி குற்றவியல் வழக்குகளை சி.பி.ஐ விசாரித்து இருந்தால், அந்த வழக்கில் தண்டனை பெற்றவரை மாநில அரசு விடுதலைச் செய்ய வேண்டுமென்றால் அதுபற்றி மத்திய அரசிடம் ஆலோசிக்க வேண்டும். (Consultant).

இச்சட்டப்படி 2014 பிப்ரவரியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ராஜீவ் கொலைவழக்கில் ஆயுள்தண்டனையில் இருந்த 7  பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதை மத்திய அரசுக்குத் தெரிவித்தார். உடனே, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றம் சென்று விடுதலைக்குத் தடைபெற்றது. 2014 மே மாதத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் அரசு போட்ட வழக்கைத் தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க தொடர்ந்து நடத்தியது.

அந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு 2.12.2015ல் தீர்ப்பு கூறியது. அத்தீர்ப்பில் மத்திய அரசின் ஒப்புதலின்றி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் விடுதலை செய்ய முடியாது என்றது உச்சநீதிமன்றம். ஆனால், அதே தீர்ப்பில் மாநில அரசு அரசமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்தால் அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று குறிப்பிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி மத்திய அரசு அப்போது ஒப்புதல் தர மறுத்ததால் விடுதலை சாத்தியமற்றதாகி விட்டது.

நீதிபதி ஹரி பரந்தாமன்இந்தச் சூழலில் பேரறிவாளன் போட்ட வழக்கில் 161ன் கீழ் அவரை விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் இந்த செப்டம்பர் 6 ம் தேதி தீர்ப்பு வழங்கி, பிரிவு 161ன் கீழ் விடுதலை செய்ய தமிழக ஆளுநரை பரிசீலிக்கக் கோரியது. எனவே, அத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை கடந்த 9ம் தேதி ஏழு பேரையும் அரசமைப்புச் சட்டம் 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்ய முடிவு எடுத்து,

அதை ஆளுநருக்குப்பரிந்துரைத்துள்ளது. அதொரு பக்கம் இருக்க, எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் எந்த ஆயுள்தண்டனை கைதியும் 28 ஆண்டுகள் சிறையில் இருந்ததில்லை. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி, அண்ணா, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் ஆகிய தினங்களில் எத்தனையோ கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது. ஒருவேளை இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமையான ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டதனால் இவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்கள் என்றால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஆனானப்பட்ட மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்களை இதே இந்திய அரசு எப்படி விடுதலை செய்தது! கோபால் கோட்சே, விஷ்ணு கர்க்டே, மதன்லால் பெஹ்வா ஆகிய 3 பேரும் காந்தியைச் சுட்டுக் கொன்றதற்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்கள். ஆனால், இவர்கள் 16 ஆண்டுகளே சிறையில் இருந்தனர். ஜவஹர்லால் நேருவும், வல்லபாய் படேலும் இறந்து போனதும் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டுமல்லாது ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பல அதிகாரிகள் பின்வாங்கிவிட்டனர். இவ்வழக்கை விசாரித்த 3 பேர்கொண்ட நீதிபதிகள் அமர்வில் தலைமை தாங்கிய கே.டி தாமஸ், `இவர்களை விடுதலை செய்யலாம்’ என சோனியா காந்திக்குக் கடிதமே எழுதிவிட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கைப் புலனாய்வு செய்த தலைமைப் புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், `வழக்கின் சூழலைக் கணக்கில் கொண்டால் இந்த 7 பேரையும் விடுதலை செய்யலாம்’ எனக் கருத்துத் தெரிவித்தார்.

மற்றொரு புலனாய்வு அதிகாரியான தியாகராஜன், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாக்குமூலத்தைத் தவறாகப் பதிவு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு விட்டார். அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுவே போட்டார்.

இம்மாதிரியான சறுக்கல்கள், சந்தர்ப்பங்கள் மகாத்மா காந்தி வழக்கில் இல்லை. ஆனால், அவர்கள் மன்னித்து விடுதலை செய்யப்பட்டனர். காந்தியைக் கொன்ற அந்த 3 பேருக்கு ஒரு நியாயம். இந்த 7 பேருக்கு ஒரு நியாயமா. தமிழர்கள் என்பதால் இந்த இளக்காரமா. இனியும் காலம் தாழ்த்தாது இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே என் கோரிக்கை.”, என்றார்.

தமிழ்ப்பிரபா