முப்படைகளின் அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி பதிலளிக்கவேண்டும் என சமூக நிதிக்கான மக்கள் அமைப்பின் இணை அமைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.முப்படைகளின் அலுவலக பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப்புலனாய்வு விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் எனபப்டும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவியமை தொடர்பிலான விசாரணைக்கு நேற்றைய தினம் வருமாறு முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அத்மிரால் ரவீந்ர விஜேகுணரத்னவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தது.
என்றாலும் நேற்றைய தினம் அவர் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு சென்றுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தபோதும் முப்படைகளின் அலுவலக பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதியின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்ல முடியாது.
அதனால் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் அவரின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும் எனறார்.
Eelamurasu Australia Online News Portal