சிறிலங்கா இராணுவத்தினரின் தற்போதைய உசார் நிலை குறித்து முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் முன்வைத்துள்ள விமர்சனங்களை இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க நிராகரித்துள்ளார்.
ஓய்வுபெற்றவர்களால் இராணுவத்தின் தற்போதைய நிலையை மதிப்பிடமுடியாது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
அவர்களிற்கு அதற்கான தார்மீக உரிமையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் முடிவின் போது காணப்பட்ட முகாம்களை புதிய இடத்தில் மாற்றுவதையோ அல்லது புதிய இடத்தில் அமைப்பதையோ பலவீனமான விடயமாக கருதமுடியாது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
களநிலைமைகளை கருத்தில்கொண்டு கட்டளை தளபதிகளின் உத்தரவிற்குஏ ஏற்ப அவ்வாறான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சில இராணுவதளபதிகள் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்,தேவைப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்த பின்னர் அவ்வாறன நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
குறைந்த எண்ணிக்கையுடன் காணப்பட்ட படைப்பிரிவுகளிற்கு மேலதிக துருப்புகளை வழங்கியுள்ளோம், எனவும் குறிப்பிட்டுள்ள மகேஸ் சேனநாயக்க திட்டமிட்ட முறையில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்ற அவற்றை எதிர்கொள்வதற்கான உசார் நிலையில் படையினர் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
தங்களை பாதுகாப்பு ஆய்வாளர்கள் என வர்ணித்துக்கொள்ளும் சில தனிநபர்கள் இவற்றை முகாம்களை மூடுதல் என வர்ணித்துள்ளனர்,எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ள இராணுவ தளபதி எந்த முக்கியமானமுகாம் மூடப்பட்டது என்ற விபரத்தை இந்த ஆய்வாளர்கள் பகிரங்கமாக தெரியப்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிலசந்தர்ப்பவாதிகள் தங்களின் நலன்களிற்காக தேசத்தின் பாதுகாப்பை விமர்சிக்க முயல்கின்றனர் என தெரிவித்துள்ள மகேஸ் சேனநாயக்க மக்களை இவர்களின் கருத்தை நிராகரிக்குமாறும் இராணுவத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.