மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து வெளியிட்டுள்ளார். இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் அதை பாடியுள்ளார்.
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்துகின்றனர். ஆனாலும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ‘படிப்படியாக மதுவிலக்கு’ என அறிவித்து கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக தெரிவித்த தமிழக அரசும் வாக்குறுதியை மறந்து விட்டது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான கபிலன் மதுவுக்கு எதிராக, ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’ என்ற பாடலை உருவாக்கினார். இதனை குழந்தைகளை நடிக்க வைத்து, காணொளியாக காட்சிப்படுத்தினார். இப்பாடலை ‘யூ டூயூப்பில்’ நேற்று வெளியிட்டார். பாடலை டி.ராஜேந்தர் பாடியுள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘கஜினிகாந்த்’ படத்துக்கு இசையமைத்த பாலமுரளி இசை அமைத்துள்ளார்.