தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாமல் தொடர்ந்து இழுத்தடிப்பதால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்பட்டு விடும் என்பதை ஆட்சியாளர்களும் தென்பகுதி அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிர மரட்ண இதை உணர்த்தும் வகையிலேயே அரச தலைவருக்கும், தலைமை அமைச்சருக்கும் எச்சரிக்கை கலந்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அரசமைப்பு உருவாக்கம் மற்றும் ஏனைய விடயங்க ளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தலைவர்களாக இவர்கள் இருவரும் மாறிவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகள் சூழ்ந்த நிலையில் நகர்கிறது தமிழர்களின் வாழ்வு
மேலோட்டமாகப் பார்க்கும்போது, தமிழ் மக்கள் பிரச்சினைகள் எதுவுமின்றி வாழ்வது போன்றதொரு தோற்றம் வெளித் தெரிந்தாலும், உண்மை நிலை அதுவல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏராளமான பிரச்சினை களுக்கு முகம்கொடுத்த வண்ணம் தமிழர்கள் தமது காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
இவற்றுள் இனப்பிரச்சினை முக்கிய மானதாகும். இதற்குத் தீர்வு காணாததன் காரணமாகவே இனமோதல்கள் அடிக்கடி ஏற்பட்டதோடு நீண்ட போர் ஒன்றும் இடம்பெற்றது. இவை மீண்டும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது ஆட்சியாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகப் பலரும் பேசிவருகின்றனர். அரசதலைவரும், தலைமை அமைச்சரும் இதன் உருவாக்கம் தொடர்பாகத் தமிழ்த் தலைவர்களிடம் பல தடவைகள் வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதன் காரணமாகவே புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவது நிச்சயமானது என்று தமிழ்மக்களுக்கு நம்பிக்கை வெளியிட்டிருந்தார். தமிழ் மக்களும் அதை முற்றுமுழுதாக நம்பியிருந்தனர். ஆனால் அனைத்தும் ஏமாற்றத்திலேயே முடிந்துள்ளன.
புதிய அரசமைப்பு மிகமிக அவசியம்
புதிய அரசமைப்பின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்குவதன் ஊடாகத் தமிழர்கள் சுயாட்சி யைப் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றையாட்சி முறையிலான ஆட்சிமுறை தமிழர்களை அதிகாரங்கள் எவற்றையும் பெறமுடியாத நிலைக்குக் கட்டிப்போட்டுள்ளது.
மாகாண சபைகள் அதிகாரங்கள் எவையுமற்ற வெறும் சபைகளாகவே காணப்படுகின்றன. இதனால் எதையுமே செய்ய முடியாத நிலையில் அவை காணப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறுவதற்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுவதற்கும் இதுவே காரணமாகும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் இவற்றை மாகாண சபைகளால் தடுத்திருக்க முடியும். ஆனால் அதிகாரங்கள் வழங்கப்படாததால் மாகாண சபைகளால் அவ்விதம் செயற்பட முடியவில்லை.
இந்த நாடு மூன்று இனத்தவர்களை முதன்மையானவர்களாகக் கொண்டது. மத ரீதியிலும் மக்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றனர். சிறுபான்மையின மக்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாவதை இங்கு காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு, இந்த நாடு தமக்குரியதெனப் பெரும்பான்மையின மக்கள் கருதுவதே காரணமாகும். சுமார் 70 வீதமானபெரும்பான்மை இனத்தவர்கள் ஏனைய சிறுபான்மை இனத்தவரை மதிக்கின்ற மனநிலையில் இல்லையென்றுதான் கூறவேண்டும்.
அந்த அளவுக்கு இனவாத அரசியல்வாதிகள் அவர்களை மூளைச் சலவை செய்துள்ளனர். இன நல்லிணக்கம் மக்களின் அடிமனங்களிலிருந்து தானாகவே உருவாக வேண்டும். பிறர் மீதான காழ்ப்புணர்வும், வெறுப்பும் இருக்கும் வரையில் நல்லிணக்கம் ஏற்படவே முடியாது. இன ஐக்கியத்தின் வாயிலாகவே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல முடியுமென்பதைத் தென்பகுதி அரசியல்வாதிகள் உணரும்போது இன நல்லிணக்கம் தானாகவே உருவாகிவிடும். ஆனால் அதை அவர்கள் உணருவதற்கான அறிகுறிகள் எவற்றையும் இதுவரை காணமுடியவில்லை.
உரிமைகள் மறுக்கப்பட்டால் வன்முறை வெடிப்பது வரலாறு
ஒரு குறிப்பிட்ட இன மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதன் காரணமாகவே உலகில் ஆயுதம் ஏந்துகின்ற இயக்கங்கள் உருவெடுத்தன. பாதிக்கப்பட்ட இன மக்கள் தமது உரிமைகளை அகிம்சை வழியில் பெறுவதற்கு இயலாதுவிட்டால் ஆயுத நடவடிக்கைகள் மூலமாகவா வது அவற்றைப் பெறுவதற்கு முயற்சி செய்வார்கள்.
எமது நாட்டில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடியதும் இதனால்தான். ஆனால் அவர்களின் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கான வேட்கை இன்னமும் தணிந்து விடவில்லை.
ஆகவே ஆட்சிக்கு மாறிமாறி வருகின்ற பெரும்பான்மையின அரசியல்வாதிகள் இந்த யதார்த்தத்தை இனியாவது புரிந்து கொண்டு செயற்படுவதுதான் நாட்டின் மீட்சிக்கு வழிவகுக்கும்.
நன்றி-உதயன்