கிளிநொச்சி இரணைமடுவில் நேற்று அதிகாலை 1.00மணியளவில் பேருந்தில் இருந்து வந்திறங்கி பாரதிபுரத்திலுள்ள விடுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த தனியார் காப்புறுதி முகாமையாளரை வழிமறித்த இனந்தெரியாத எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு பணப்பையையும் பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சியில் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வரும் எஸ். வினிஸ்கரன் மார்க் நேற்று முன்தினம் பஸ்ஸிலிருந்து மன்னாருக்கு தனது சொந்த தேவை காரணமாக சென்றுவிட்டு வரும்போது நேற்று அதிகாலை ஆகிவிட்டது.
பேருந்தில் இருந்து இறங்கி விடுதியினை அண்மித்த சமயத்தில் 1.15மணியளவில் 25தொடக்கம் 30வயதுடைய எட்டு பேர் கொண்ட இளைஞர்கள் குழுவால் குறித்த முகாமையாளரை வழிமறித்து உன்னில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. உன்னுடைய அடையாள அட்டையை காட்டு எனக்கூறி விட்டு உன்னுடைய இருப்பிடத்திலும் சந்தேகம் உள்ளது எனக்கூறி வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்று தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாது அவரிடம் இருந்த பணப்பையையும் பறித்துக்கொண்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.
காயமடைந்து மயக்க நிலையில் இருந்த தனியார் காப்புறுதி முகாமையாளர் அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு அவசர இலக்கமான 119 ற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்களால் குறித்த முகாமையாளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பணப்பையில் 21,900ரூபா பணமும், அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவை இருந்ததாகவும், தாக்குதல் நடத்திய இளைஞர் குழு மதுபோதையில் இருந்ததாகவும் குறித்த முகாமையாளரால் இன்று காலை வைத்தியசாலை காவல் துறையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.