கடவுள் இருக்கிற இடத்துல இருக்கார்!- ந.முத்துசாமி

ந.முத்துசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நீர்மை’ நூலே தமிழ்ச் சிறுகதைத் துறையின் சாதனைகளில் ஒன்றுதான். பேச்சுக்கும் பேசாமல் இருப்பதற்கும் இடையில் இருக்கும் மன மூட்டத்தை, தத்தளிப்பை, உளவியல் அவசங்களை நனவு நிலை ஓட்டத்தை வெற்றிகரமாகத் தன் கதைகளில் கைப்பற்றியவர். ‘தமிழின் பாரம்பரிய தியேட்டர்’ என்று தெருக்கூத்து வடிவத்தைச் சொன்னவர். சிறுகதை எழுதுவதை விட்டுவிட்டு, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை நாடகத்துக்காகவும் கூத்து தொடர்பான ஆய்வுகளுக்காகவும் அர்ப்பணித்தார். தெருக்கூத்தை செவ்வியல் நிகழ்த்துக்கலையாக உலக அளவில் நிலைநிறுத்தியவர். ‘கூத்துப்பட்டறை’ அமைப்பின் நிறுவனர். சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ கௌரவங்களைப் பெற்ற முத்துசாமிக்கு இப்போது 83 வயதாகிறது. நாடகத் துறையில் அவர் அடியெடுத்துவைத்ததன் 50-வது ஆண்டு இது. முதுமையும், உடல்நலக் குறைவும் அவருடைய ஞாபகங்களின் மீது பெரிய திரைகளைப் போர்த்தியிருக்கின்றன. மறதி விழுங்காமல் விட்ட நினைவிலிருந்து அவர் பேசியவற்றின் தொகுப்பு இது.

இப்போது எழுதிக்கொண்டிருக்கிறீர்களா?

எழுதப்போறேன்.

என்ன எழுதப்போகிறீர்கள்?

நாவல். சந்தோஷ்னு ஒரு ஆக்டர் கேட்டுக்கிட்டேயிருக்கார். அவரு எங்கூர்க்காரரு. எழுதுங்கன்னு சொல்றாரு. சரி.. எழுதலாம்னு சொல்லியிருக்கேன். நான் டிக்டேட் பண்ணுவேன். அவர் எழுதுவாரு.

எதைப் பற்றிய நாவல்?

புஞ்சை கிராமத்தைப் பத்தியது. காலம், என்னோட இளமைக்காலம்.

சிறுகதை எழுத்தாளர் மௌனி உலகத்திலிருந்து வந்த கிராமியக் குழந்தை என்று உங்களைப் பற்றி நினைக்கிறேன்.. சரியா?

சரிதான்.

எப்படி எழுத வந்தீர்கள்?

கதை எழுதணும்னு தோணிச்சு. எழுத ஆரம்பிச்சேன்.. அவ்வளவுதான். ரொம்ப சிம்பிள். என்னுடைய 20 வயதுகளின் துவக்கத்தில் எழுதத் தொடங்கினேன். செம்பனார்கோயில் சினிமா கொட்டாயில சினிமா பாத்துட்டு வந்தோம். அப்போ அந்தக் கதையை அப்படியே எழுதினேன்.

என்ன சினிமா?

அதெல்லாம் ஞாபகத்துல இல்ல. அதான் முதல் எழுத்து.

உங்களின் முதல் கதை பற்றிச் சொல்லுங்கள்?

‘யார் துணை’. அதான் முதல் கதை. அது நடந்தது. புஞ்சையில என் ப்ரெண்ட் வீட்ல உட்கார்ந்திருக்கும்போது நடந்தது. அதை அப்படியே எழுதினேன்.. அவ்வளவுதான்.

சென்னையில டாஃபே நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும்போதுதானே இலக்கியவாதிகளுடன் பரிச்சயம் ஏற்படுகிறது?

பாலகுமாரன் பர்ச்சேஸ் பிரிவில் இருந்தார். நான் அக்கவுண்ட்ஸ் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷனில் ஒர்க் பண்ணேன். சி.மணி, சைதாப்பேட்டை டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் இருக்கார். என்னோட கதைகளைத் திருப்பித் திருப்பி எழுதுவேன். அவரிடம் எப்டி இருக்கு பாருங்கன்னு சும்மா படிச்சுக் காண்பிப்பேன்.

உங்களுக்கு உந்துதலாக இருந்த எழுத்தாளர் யார்?

மௌனியைத்தான் நான் அதிகம் தொடர்வேன். இன்னாருன்னு தனிச்சுச் சொல்ல முடியாது. மௌனியோடு சிதம்பரத்துலயே உறவு இருந்தது. அதுக்கப்புறம் சென்னையில இருந்தது. வாலாஜா ரோட்டில் இருக்கும்போதெல்லாம் வருவாரு மௌனி.

புதுக்கவிதை என்கிற வடிவம் உங்களுக்கு உத்வேகம் தந்ததாக உங்களின் ‘நீர்மை’ சிறுகதைப் புத்தக முன்னுரையில் குறிப்பிட்டிருப்பீர்கள். ஏன் நீங்கள் கவிதைகள் எழுதவில்லை?

நான் ஒரு கவிதை எழுதினேன். ஆட்டுக்கு கொம்பு எதற்கு/ குளம்பு எதற்கு/ தோல் மோளம் செய்ய/ கொம்பு குளம்பு எதற்கு. சி.சு.செல்லப்பா அதை நிராகரிச்சிட்டாரு. அப்புறம் கவிதை எழுதறது நின்னுபோச்சு.

நல்லது…

அதை எப்படி நீங்கள் சொல்ல முடியும்.

நீங்கள் இத்தனை அருமையான சிறுகதைகள் எழுதியிருக்க மாட்டீர்கள் இல்லையா? சிறியதாக எழுதுவதில் வேகமாகத் திருப்தி அடைந்துவிடுகிறோம் இல்லையா?

நான் அப்படி நினைக்கவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இருந்திருக்கிறீர்கள். ஆனால், மிகச் சில கதைகளில்தான் நகரம் வந்திருக்கிறது. உங்களின் புஞ்சை கிராமம்தான் நிறைய கதைகளில் வந்திருக்கிறது.

ஏன்னா.. மனசுல பசுமையா புஞ்சைதான் இருக்கு. இப்பக்கூட ஒரு கதை எழுதினேன். வைத்து என்ற வைத்தியநாதன். கிராமத்துல இருந்த என்னுடைய பிரெண்ட் அவன்.

கதைகளில் உள்ள அளவுக்கு புஞ்சை கிராமம் நாடகங்களில் வந்திருக்கிறதா?

தேவையா இருந்தாதானே வரும்.

சிறுகதைகளிலிருந்து நாடகத்துக்கு எப்போது மாறுகிறீர்கள்?

ஞாபகம் இல்லையே எனக்கு.

உங்கள் கதைகளில் பிராமண தன்னிலை, அந்த சமூகத்துக்குள் இருக்கின்ற நடைமுறைகள் சம்பந்தமான விமர்சனங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது… சாதி மறுப்பு இயக்கப் பின்னணி உள்ள நீங்கள், தற்போது சாதி நிலைமைகள் எப்படி இருப்பதாகப் பார்க்கிறீர்கள்?

சாதி ஒதுங்கிக்கிட்டிருக்கு.

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் இருக்கிற இடத்துல இருக்கார்.

இருக்கிறாரா?

செண்டாடுமையன்ங்கிற ரூபத்துல எனக்கு இருக்காரு. அய்யனார்.

பிராமணர்களிடம் அய்யனார் வழிபாடு இருக்கிறதா?

அப்படியெல்லாம் ஒரு கணக்கே கிடையாது. எல்லாரும் எல்லாத்தையும் தொழுவாங்க. பிராமணர்கள் அதைத் தொழ மாட்டாங்க. இதைத் தொழ மாட்டாங்கன்னுவெல்லாம் கிடையாது.

நீங்கள் காதலித்து மணந்த மனைவியை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்?

ஆரம்பத்துல எப்படிப் பாத்தேனோ அப்படித்தான் இன்னைக்கும் பாக்கறேன். வேற எப்படிப் பாக்கணும். பாக்கறதுக்கு என்ன இருக்கு.

மெய்ஞானி குர்ட்ஜிப் மீது உங்களுக்கு ஈடுபாடு இருந்தது இல்லையா. அவர் எப்படி உங்களைப் பாதித்தார்?

உலகப் பார்வையைக் கொடுத்தாரு குர்ட்ஜிப். ஒரு விஷயம் சிறப்பானது; இன்னொரு விஷயம் சிறப்பானது இல்லைன்னெல்லாம் கிடையாது. எல்லாத்துக்கும் மதிப்பு இருக்குது அப்படிங்கற பார்வையைக் குடுத்தது குர்ட்ஜிப்தான். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போய்ச் சேந்தபோது, என்னோட ரூம்மேட் தாமோதரன். அவர்தான் சொன்னாரு.. நம்ம யுனிவர்சிட்டிக்கு ரெண்டு, மூணு பைத்தியங்கள் வந்திருக்குன்னு சொல்லி, அவங்களை அறிமுகப்படுத்தினாரு. சி.மணி, வெங்கடேசன்,

வி.து.சீனிவாசன் என்ற அந்தப் பைத்தியங்கள்தான் குர்ட்ஜிப்-ஐ அறிமுகப்படுத்தியது. குர்ட்ஜிப், சப்ஜெக்டிவ் லிட்டரேச்சர் (சார்புநிலை இலக்கியம்), அப்ஜெக்டிவ் லிட்டரேச்சர் (தற்சார்பற்ற இலக்கியம்) என்று இரண்டாகப் பிரிக்கிறார். மகாபாரதத்தை அவர் அப்ஜெக்டிவ் லிட்டரேச்சர் என்கிறார். நானும் மகாபாரதத்தை அப்படித்தான் பார்க்கிறேன்.

உங்களுடைய அபிமானக் கதாபாத்திரங்கள் எவை?

நிறைய பாத்திரங்கள்.

உங்களை அடையாளம் காணும் கதாபாத்திரம் எது?

அப்படியெல்லாம் நான் ஐடென்டிஃபை பண்ண மாட்டேன். எல்லா பாத்திரமுமே புடிச்ச பாத்திரங்கள்தான்.

உங்கள் மகன் ஓவியர் நடேஷ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவன் அளவுல, அவன் துறையில அவன் பெரிய ஆளு.. என் அளவுல அவன் எனக்குப் பையன்!

– ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு:

sankararamasubramanian.p@thehindutamil.co.in