அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டவருக்கு நீதிகோரி கையெழுத்து வேட்டை!

அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு நீதிகோரி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இலங்கையை சேர்ந்த கமீர் நிஜாப்தீனுக்கு நீதி கோரியே கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் change.org இணையத்தளத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்த முகாந்திரமும் இல்லாமல் குறித்த இலங்கையர் கைது செய்தது மட்டுமல்லாமல், உரிய சட்ட வசதிகளை மறுத்தும், அவர் குறித்த செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டு வருகின்ற அரச அதிகார போக்கை கண்டித்தும் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

change.org இணையத்தில் ‘Justice for Kamer’ என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கமீர் நிஜாப்தீன் வைத்திருந்த பழைய கணினியொன்றிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

நிஜாப்தீனிடமிருந்து அது கைப்பற்றப்பட்டதல்ல. அந்தக் கணினி நிஜாப்தீனால் பல மாதங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டிருந்த ஒன்று.

அத்துடன் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் புத்தகத்தில் உள்ள தகவல்கள் எதுவும் நிஜாப்பதீனின் கையெழுத்தில் எழுதப்பட்டவையும் அல்ல.

கைது செய்யப்பட்டிருக்கும் நிஜாப்தீனை யாரும் பார்க்கமுடியாதுள்ளது.

அவருக்குரிய சட்ட உதவிகள் எதுவும் வழங்க முடியாமல் உள்ளது. பெற்றோர் உறவினர்கள் கூட நேரில் சென்று பார்க்க முடியாதுள்ளது.

அடிப்படை உரிமைகள் அனைத்தும் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறன. உள்ளூரிலும், வெளிநாட்டிலும் அவர் தொடர்பான அபாண்டமான செய்திகளை ஊடகங்கள் புனைந்து கொண்டிருக்கின்றன.

இதேவேளை, சமூகத்தின் பெறுமதி மிக்க இளைஞனாகவும் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோருக்கும் நற்குணம் கொண்ட மனிதனாகவும் தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தியவர் நிஜாப்தீன் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.